வசந்தனின் பக்கம்

ஜூன் 21, 2006

நோவா விட்ட காகம்.

கோப்பு வகை: பொது — maathahal @ 1:29 பிற்பகல்

ஒருவனை அல்லது ஒருத்தியை ஏதாவதொரு வேலையாய் அனுப்பி, அந்நபர் எங்காவது “மிலாந்தி”க்கொண்டு நின்றால் அவர்களைக் குறிக்க ஒரு சொற்றொடர் ஈழத்தில் – குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்படுகிறது. அதுதான் மேற்சொன்ன “நோவா விட்ட காகம்“.

இத்தொடர் மத பேதங்களின்றி எல்லாராலும் பயன்படுத்தப்படுவது குறித்து முதலில் ஆச்சரியப்பட்டேன்.
சரி. அதென்ன ‘நோவா விட்ட காகம்’?

விவிலியத்தில் நோவா என்ற பாத்திரத்தை வைத்து ஒரு கதை உண்டு. அதுபற்றி சிறில் சுருக்கமாக எழுதியுள்ளார். இங்கே விவிலியத்தைத் தாண்டிய ஒரு கதையில், நோவா வெள்ளம் வடிந்துவிட்டதா என்பதை அறிய முதலில் பறக்க விட்டது ஒரு காகத்தைத் தானாம். பறந்த காகம் சேதி சொல்லத் திரும்ப வரவேயில்லை. அது பிணங்களைக் கண்டதும் அங்கேயே குந்திவிட்டது போலும். காகம் வரும்வருமென்று காத்திருந்து ஏமாந்த நோவா பின்புதான் புறாவைப் பறக்கவிட்டாராம். அது பின் ஒலிவ் கிளையுடன் வந்து சேர்ந்ததாக அக்கதை தொடரும்.

காகத்தை அனுப்பிவிட்டுக் காத்திருந்த நோவாவின் நிலைதான், ஏதாவது வேலையாக ஒருவரை அனுப்பிவிட்டுக் காத்திருப்பவர்களினதும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர் வரவில்லையென்றால், அவர்தான் “நோவா விட்ட காகம்”.

சின்ன வயசில் நானுட்பட நிறையப் பேர் இந்தச் சொற்றொடரால் திட்டப்பட்டிருப்போம். உங்களில் யாருக்கேனும் இப்படித் திட்டு வாங்கியது ஞாபகமிருக்கா?
இதே உணர்வை வெளிப்படுத்தப் பாவிக்கப்படும் வேறு சொற்றொடர்கள் இருக்கா? (“கப்பல் பார்க்கப்போன சேவகன்” கதையைச் சொல்லாதீர்கள். அதுவேறு இதுவேறு.)
அல்லது இதே சொற்றொடருக்கு வேறேதும் கதைகளிருக்கா?
தமிழகத்தில் இச்சொற்றொடர் இருக்கா?

*************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.