வசந்தனின் பக்கம்

ஜூன் 27, 2006

‘அப்பக்கோப்பை’ பற்றிய ஓர் ஆராய்ச்சி.

Filed under: அனுபவம், பொது — maathahal @ 12:40 மு.பகல்

எல்லாருக்கும் இந்தச் சொல் தெரியுமோ தெரியாது. எங்கட இடத்தில குறிப்பிட்ட இளமட்டத்தில இந்தச்சொல் பாவனையில இருந்திச்சு. இன்னொருத்தனைத் திட்டவோ மட்டந்தட்டி நக்கலடிக்கவோ இந்தச் சொல்லைப் பாவிப்பம்.

ஒருத்தன் விளங்காத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்தால் அல்லது தொடர்ச்சியாக ஒரேதவறைச் செய்தால், எப்படி முயன்றும் ஒருத்தனைத் திருத்த முடியாதென்று எரிச்சல் தோன்றும்போது இச்சொல்லைப் பாவித்துத் திட்டுவதுண்டு.’அவனொரு அப்பக்கோப்பை. ஒரு இழவும் விளங்காது’ எண்டு ஒருத்தனத் திட்டுவோம். அதேபோல் திட்டும் வாங்குவோம்.

இதன் சரியான தோற்றம், காரணகாரியங்கள் எதுவுமறியாமலேயே ஆனால் சரியான சந்தர்ப்பங்களில் இச்சொல்லைப் பாவிப்போம். எந்த இடங்களில் இச்சொல்லைப் பாவிப்பதென எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

சரி இந்தச் சொல்லின் சரியான அர்த்தத்துக்கு வருவோம். அப்பக்கோப்பை என்றால் அப்பம் சுடும் தாச்சியைக் குறிக்கும். அப்பத்தாச்சி என்ன செய்யும்? எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாது. அதில் ஊற்றும் மாவை அப்படியே அப்பமாக்கி சிறுதுண்டுகூட தாச்சியில் ஒட்டாதபடிக்கு அழகாக அப்படியே திருப்பிக்கொடுத்துவிடும்.

தோசைக்கல்லிற்கூட மாவு ஒட்டும், இட்லிச்சட்டியில் மாவு ஒட்டும். ஆனால் அப்பத்தாச்சியில் எப்போதாவது மாவு ஒட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தச் சட்டியின் சிறப்பு.

இங்கே இச்சொல்லை அப்பக்கோப்பை என்று மாற்றி ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு (இதுகளப் போடாட்டி பிறகு சண்டைக்கு வருவியள்) திட்டுவதற்குப் பாவிக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால் எப்படி அப்பச்சட்டி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்குள் ஊற்றப்படும் சகலதையும் திருப்பிக்கொடுத்துவிடுகிறதோ அதேபோல் இவர்களும் எதையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. அனைத்தையும் திறந்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் திருந்தப்போவதில்லை என்ற கருத்தில் இச்சொல் பாவிக்கப்படுகிறது.

இன்றும் ஏராளமானவர்கள் இச்சொல்லின் விளக்கத்தை அறியாமல் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாகவே இப்பதிவு போட்டேன்.

திடீரென்று ஏனிந்தச் சொல் பற்றி யோசினை வந்ததெண்டா, இப்ப தான் கொஞ்சத்துக்கு முதல் ஒருத்தரை நேர திட்டிப்போட்டன். அவருக்கு இந்தச்சொல் புதுசு. அதுக்கு அவர் விளக்கம் கேட்டார். அவருக்கு விளங்கப்டுத்தின கையோட அதையே ஒரு பதிவாப்போடுறன்.

அப்பக்கோப்பையள் ஆராவது என்ர வலைப்பதிவப் பாக்க வருவினந்தானே. அவையளுக்கு ஒரு விளக்கமா இருக்கட்டுமெண்டு போட்டு வைக்கிறன்.

‘பன்னாடை’ எண்டு திட்டுறதுக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருளாத்தான் இருக்கு. ஆனா பன்னாடை எண்டு திட்டினா கடுமையாக் கோவம் வரும். மாறாக அப்பக்கோப்பையெண்டது அதே கருத்தைத்தாற ஆனா ஏச்சு வாங்கிறவன்(ள்) சிரிச்சுக்கொண்டே கேட்டுக்கொண்டு போற மாதியொரு சொல்லு.
நீங்களும் ஏன் திட்டுவதற்கோ ஏசுவதற்கோ இந்தச்சொல்லைப் பாவிக்கக்கூடாது?
முயன்றுபாருங்கள்.

********************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

1 மறுமொழி »

  1. உலகிலேயே மிகவும் சிறந்த பொருள் எது? இதற்கு ஒவ்வொருவரும் அவரவர் மனநிலைக்கேற்ப
    விடையளிப்பர். பணத்தினாலேயே எல்லாம் பெறமுடியும்; எதையும் சாதிக்க முடியும். ஆகவே செல்வந்தான்
    சிறந்தது என்போர் ப்லர். உண்பதற்காகவே பிறந்தோம் என்று கருதுகிற சிலர், அறுசுவை உணவே அவனியில்
    சிறந்தது என்பர். இவையெல்லாம் சிறந்த பொருளாக மதித்து வாழ்வோர் உண்டு. இவையெல்லாம் உலகியல்
    நோக்கில் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், இறையனுபவம் வாய்ந்த பெரியோர், இவRறை ஒரு
    பொருளாகக் கொள்ளார். இப்பொருள்கள் மீது மையல் கொண்டு வாழும் மக்களை நோக்கி,

    “வைத்த நிதி பெண்டிர்
    மக்கள் குலம் கல்வி என்னும்
    பித்த உலகு”

    என்று குறித்துப் போவார் மணிவாசகர்!

    உலகியலும் அருளியலும் ஒன்றுக்கொன்று மாறானவை. உலகியலில் நிற்போர், அருளியலில் நாட்டம்
    கொள்ளார். அருளியலைத் தலைப்பட்ட அடியவர், உலகியலை மதியார். உலகவர், அடியவரைப் பார்த்துச்
    சிரிப்பர்; ” அனுபவிக்க வேண்டிய உலக சுகத்தை வெறுத்து இப்படி இறைப் பித்து பிடித்துத் திரிகின்றனரே”
    என்று எண்ணிச் சிரிப்பர். அடியவரோ அவர்களைப் பார்த்து சிரிப்பர். “நிலைபேறுடைய திருவருளின்பம்
    எங்கும் பொங்கித் ததும்பி நிற்கவும் அதனை உணராது, அழிந்து போகும் சிற்றின்பத்தினை நாடித்
    திரிகின்றனரே” என்று எண்ணிச் சிரிப்பர். இக்கருத்தினை,

    “நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
    நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப”

    எனும் திருவாசக அடியிற் காணலாம்.

    திருவருளே தலையாயது!

    சாத்திர ஆசிரியர்களுள் ஒருவராகிய உமாபதி சிவம்”திருவருளே பெறதற்குரிய தலையாய
    பொருள்” என்றும், “அதனைக் காட்டிலும் மேலான பொருள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை” என்றும் கூறுகின்றார்.

    ஒருவன் நீர்வேட்கையோடு வருகிறான்; பருகுவதற்குத் தண்ணீர் கிடைக்குமா என்று அலைந்து
    பார்க்கின்றான். எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. அவனது நாக்கு வறண்டு போய்விட்டது. உதடுகள்
    உலர்ந்துவிட்டன. தண்ணீருக்காக அவன் தவிக்கிறான். அந்த நேரத்தில் தண்ணீருக்குப் பதிலாக வகை வகையான
    உணவுகளை அடுக்கடுக்காக அவன் முன்னே வைத்தாலும் அவற்றை அவன் நாடுவானா? அல்லது விலையுயர்ந்த
    பொன்னையும் நவமணிகளையும் அவன் முன்னே குவித்தாலும் அவற்றைத் தீண்டுவானா? இவையெல்லாம் அவனுடைய
    தாகத்தைத் தீர்க்குமா? அவனுக்கு வேண்டியது தாகத்தை தணிக்கின்ற “நீர்” ஒன்றுதான்! அந்த நேரத்தில்
    “நீர்”தான் அவனுக்குத் தலையாய பொருள்!

    இன்னொரு நிகழ்ச்சியைக் கூறுவோம். வீட்டில் குழந்தை, தரையில் விளையாட்டுப் பொருள்களைப்
    பரப்பி வைத்துக் கொண்டு விளையாடிகொண்டிருந்தது. தாய் கடைவீதிக்குப் போய்வரலாம் என்று புறப்பட்டாள்;
    குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றாள். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்குத்
    தாயின் நினைப்பு வந்து விட்டது. அவ்வளவுதான்! விளையாட்டுப் பொருள்களை வீசி எறிந்ததொடு.
    அதுவரையில் சிறந்தவையாக விளங்கிய அப்பொருள்கள், இப்பொழுது அக்குழந்தைக்கு ஒரு பொருட்டாகத்
    தோன்றவில்லை. இந்த நேரத்தில் தாய்தான் அதற்கு வேண்டுமாம். அம்மாவை நினைத்து அழத் தொடங்கிவிட்டது!

    வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் அழுகையை நிறுத்த முயன்றார்கள். என்னென்ன பொருள்களையோ எடுத்து
    வந்து காட்டி அதன் கவனத்தை ஈர்க்கப் பார்த்தார்கள். ஆனால் அதன் அழுகை நின்றபாடில்லை! தாயைக்
    கண்டாலொழிய அதன் அழுகை ஓயாது. அக்குழந்தைக்கு அக்கணத்தில் வேண்டபடுகிற ஒரேபொருள் தாய்தான். வேறு
    எந்தப் பொருளையும் அது நாடுவதில்லை. அக்குழந்தையைப் பொறுத்தமட்டில் அவள்தான் தலையாய பொருள்!

    தாகமுற்றவன் தண்ணீரை நாடுதல் போலவும், அழும் குழந்தை தன் தாயை நாடுதல் போலவும் ஆன்மீக
    நெறியிற் செல்லும் சாதகன் “திருவருள்’ ஒன்றையே வேண்டிநிற்பான்.

    திருவருளை மறந்து உலகப் பொருட்களையே நினைந்து நிற்கும் நாமெல்லாம் ‘பன்னாடை’
    போன்றவர்கள் எனலாம்! ‘பன்னாடை’ என்பது இழை நெருக்கமில்லாத துணிவகையாகும். அதற்கு ‘நெய்யரி’ என்ற
    மற்றொரு பெயரும் உண்டு. நெய் என்பது தேனைக் குறிக்கும். காட்டில் எடுத்த தேனை வடிகட்டுவதற்குப்
    பன்னாடையைப் பயன்படுத்துவார்கள். பன்னாடை தன்மேல் வார்த்த தேனின் சாரத்தைக் கீழே ஒழுகவிட்டு,
    வேண்டாத தூசி, கசடு, முதலியவற்றைத் தன்னிடம் வைத்துகொள்ளும். அந்த நிலையில் நாம் இருக்கிறோம்.
    நிலையற்றனவாய் நம்மிடம் சிலகாலம் இருந்து செல்கின்ற பொருள்களையே, நாம் விடாமல் பற்றி
    நிற்கிறோம்; இப்பிறவியில் மட்டுமன்றி எப்பிறவியிலும் நம்மோடு தொடர்ந்து நின்று, தனுகரண புவன
    போகங்களையெல்லாம் தந்து நம்மை இயக்கி வருகின்ற “திருவருளை” ம்றந்து விடுகிறோம்.

    ஓரொரு சமயத்தில் திருவருளைப் பற்றிய நினைப்பு நமக்கு வருவதுண்டு. ஆன்மீகச் சொற்பொழிவைக்
    கேட்க நேரும்போது அந்நேரத்தில் மட்டும் திருவருளை நினைக்கிறோம். நமது ஆற்றலையும் மீறி, நாம் தடுக்க
    முயன்றும் முடியாமல் ஏதேனும் ஒரு துயர நிகழச்சி நடந்துவிட்டால் அப்போது திருவருள் நினைப்பு வருகின்றது.
    மற்ற சமயங்களில் இருப்பது இல்லை. இவ்வாறு ஓரொரு சமயத்தில் திருவருளை நினைக்க நேர்ந்தாலும் அந்த
    நினைப்பு அழுத்தமாக இருப்பதில்லை என்பதே உண்மை!

    பாசி மூடிய குளத்தில் நீர் புலப்படுவதில்லை. அதிலே ஒரு கல்லை விட்டெறிந்தால் கல் விழுந்த
    அந்த நேரத்தில் மட்டும் பாசி சிறிது விலக ‘நீர்’ புலப்படும். பிறகு மீண்டும் பாசிவந்து மூடிக்கொள்ளும்.
    பாசி படர்ந்த அந்த குளம்போல, நாம் இருக்கிறோம். கல்லெறி பட்ட அந்தக் கணத்தில் மட்டும் ‘நீர்’
    புலப்படுவது போலத் திருவருளை நினக்க வேண்டிய நிகழ்ச்சி ஏற்படுகின்ற அப்போது மட்டும் திருவருளைச் சற்று
    நினக்கிறோம்.

    பழக்கம் தவிரப் பழகுதல்

    எண்ணற்ற பிறவிகளை எடுத்து உலக வாழ்வு ஒன்றையே அறிந்த நமக்கு, உலகப் பழக்கமே மீதூர்ந்து
    நிற்கிறது. உலகப் பழக்கம் உள்ளவரையில் திருவருளோடு பழகுதல் என்பது இயலாது.

    பிறப்பினால் உண்டாகும் துன்பத்தையும், வாழ்க்கையின் முடிவில் இறப்பினால் உண்டாகும் துன்பத்தையும்
    நன்கு உணர்ந்து அஞ்சுபவர்க்கே உலகியலில் உவர்ப்பு ஏற்படும்; பொறிகளால் நுகருமின்பங்களில் வெறுப்பு
    உண்டாகும். ஒருவன் தலையில் தீப்பற்றிக் கொண்டால் அவன் ஒரு நொடியேனும் வாளா இருப்பானா? “எங்கே
    தண்ணீர்?” என்று தேடி அவன் அங்குமிங்கும் ஓடி அலைவான். தண்ணீருக்காக அவன் தவிப்பது போலத் தம் நிலையை
    உள்ளபடி உணர்ந்தவரே திருவருளுக்காக ஏங்குவர்; தமக்கு வழிகாட்ட வல்ல ஞானாசிரியரை நாடிச் செல்வர்;
    அவர் கூறும் மெய்ம்மொழியை உறுதியாகப் பற்றிக் கொள்வர். அதனைப் பலகாலும் சிந்திக்கச் சிந்திக்க
    உலகப் பழக்கம் தவிரும். தம் உணர்விற்கு உணர்வாய் உள்ள திருவருளைப் பற்றும் நிலை உண்டாகும்.
    “சிந்தித்தல்” என்ற அடிப்படை நிலையில் உள்ளவரை நோக்கியே, “பழக்கம் தவிரப் பழகுவதன்றி உழப்புவது
    என்?” என்று அறிவுறுத்துகின்றது திருவுந்தியார் என்னும் சாத்திர நூல்!

    அடியேன்

    பன்னாடை

    Comment by பன்னாடை — April 6, 2008 @ 11:52 மு.பகல்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Theme: Shocking Blue Green. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.