வணக்கம்!
‘ஈழத்தமிழ்’ என இன்று அறியப்படுவது பெருமளவு யாழ்ப்பாணத்தமிழையே குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் ஈழத்தின் வேறுபட்ட பாகங்களிடையில் மொழிப்பாவனையென்பது வேறுபட்டே இருக்கிறது. சில இடங்களில் சின்ன வேறுபாடுகளுடனும் சில இடங்களில் பெரிய வேறுபாடுகளுடனும் இருக்கிறது. அங்கே ஒருவரின் தமிழை மற்றவர் நக்கலடிப்பது வழமை. யார் பெரும்பான்மையோ அங்கே சிறுபான்மையினரின் தமிழ்நடை கேலிக்குள்ளாகும். ஆனால் பெரியளவில் மனத்தாங்கல் வருமளவு இருக்காது.
மட்டக்களப்புத்தமிழ் எனக்கு அறிமுகமானது தென்தமிழீழப் போராளிகள் மூலமாகத்தான். ஜெயசிக்குறு எதிர்ச்சமருக்காக கிழக்கிலிருந்து 1000 பேர்வரை வன்னி வநதிருந்தபோது அவர்கள் தமது மண்வாசனையை அப்படியே காவிக்கொண்டு வந்தார்கள். (ஏற்கெனவே வன்னியிலும் யாழிலும் நிறைய மட்டக்களப்பு ஆட்கள் இருந்தபோதும் அவர்கள் சூழலுக்கேட்ப மொழியை மாற்றியிருந்தார்கள். சிலரின் கதையில் அவர் மட்டக்களப்புத்தான் என்பதை சொன்னாலும் நம்ப முடியாது. ஆனால் இப்போது வந்திருந்த அணி முற்றாக மட்டக்களப்பு வாசனைதான்.)
ஒருநாள் அதிகாலை எங்கள் வீட்டுக் கிணற்றைப் பாவிக்கலாமோ என்று கேட்டு வந்தார்கள். “அண்ணே பூலி இரிக்கா?” என்ற கேள்வியுடன் ஆரம்பித்த முசுப்பாத்திதான். ‘பூலி என்றால் என்ன என்று நான் விளங்கிக் கொள்வதற்குள் விடிந்துவிட்டது. அதன் பின் அவர்களோடு பழகும் நிறையச் சந்தர்ப்பங்கள் வந்தன. வன்னியில் எங்கு பார்த்தாலும் மட்டக்களப்புப் போராளிகளைக் காணலாம். அவர்களின் மொழிநடை எம்மிலிருந்து மிகவும் வேறுபட்டதாயிருந்தது. ஆனால் சில சொற்களைத்தவிர விளங்கிக் கொள்வதில் எந்தக் கஸ்டமுமில்லை.
‘நான் “பேந்து” வாறன்’ என்றால் அவர்களின் நக்கல் தாங்கமுடியாது. நாங்கள் “பேந்து” என்பதை ‘பிறகு’ எனும் பொருளில் பாவிப்போம். ஆனால் அவர்களுக்குப் “பேந்து” என்றால் ‘பிளந்து’ என்ற பொருள். (சைக்கிள் ரியூப் பேந்து போச்சு, அத்திவாரம் பேந்து போச்சு). ‘பேந்து வாறன்’ என்றால் அவர்கள் பொருளில் பிளந்து அதாவது வெடித்து சிதறி துண்டு துண்டா வருதல் என்ற பொருள். உண்மையில் ‘பிறகு’ என்பதைவிட ‘பிளந்து’ என்ற சொல்லுக்குக் கிட்டவாகவே ‘பேந்து’ என்ற சொல் இருப்பதால் மட்டக்களப்பாரின் “பேந்து” தான் கூடுதலான சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மறுபடி என்பதை ‘மறுகா’ என்பார்கள். அடிக்கடி “ஓப்பாய்” என்று சொல்வார்கள். சிலரின் ஒவ்வொரு வசனத்திலும் இது வரும். ஆரம்பத்தில் இச்சொல் அதிர்ச்சி தந்தாலும் அவர்களிடம் அச்சொல்லுக்கு மோசமான அர்த்தம் இல்லையென்பதைப் புரிந்துகொண்டோம். எனக்கும் இந்தக் கதை தொற்றிக் கொண்டது தனிக்கதை. ஆனால் வீட்டுக்கு வரும்போது தெண்டித்து இவற்றை நிறுத்திக்கொள்வேன்.ஒருமுறை “கிபிர் வந்தா குண்டியில காலடிக்க ஓடேக்க தெரியும்” என்று சொன்னபோது அவர்கள் திகைத்துப் போனார்கள். எங்களிடம் இயல்பாக இருக்கும் அச்சொல் அவர்களுக்குக் கூடாத சொல். அதுபோல நாங்கள் சமையலுக்குப் பாவிக்கும் ‘பூண்டு’ எனும் பொருளை (இதை இந்தியாவில் வெள்ளைப் பூண்டு என்பார்கள்.) பூண்டு என்று பாவிப்பதில்லை. அது இன்னதுதான் என்று தெரிந்திருந்தலும் “உள்ளி” என்ற சொல்லே பாவிப்போம். ஆனால் அவர்கள் அந்தச் சொல்லை மறந்தும் உச்சரிக்க மாட்டார்கள். அவர்கள் பள்ளத்தை ‘மடு’ என்றுதான் சாதாரணமாகக் கதைக்கும்போது சொல்கிறார்கள். நாங்கள் யாரும் பேச்சுத்தமிழில் பள்ளத்தை ‘மடு’ என்று பாவிப்பதில்லை.
பழகுவதற்கு மிகமிக இனிமையானவர்கள். யாருடனும் உடனடியாய் இறுக்கமாய் ஒட்டிக்கொள்ளும் தன்மை அவர்களுக்கு இயல்பானது. ஒருவருடன் அரை மணிநேரம் கதைத்தாலே போதும் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத அனுபவம். அவர்கள் அனுபவித்த துன்பங்கள் எம்மிலிருந்து வேறுபட்டது. அவர்களின் கதைகேட்க மனசைப் பிளியும். அப்பா இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் நிறையப் பேர். சின்ன வயதில் இறந்து விட்டதாக நினைத்திருந்த தங்கச்சியை வன்னியில் இருவருமே போராளிகளாகச் சந்தித்த அனுபவம், இப்படி நிறைய.
இன்னும் அவர்களைப் பற்றி நிறைய அறிய வேண்டும். அவர்கள் மொழி பற்றி நிறைய அறிய வேண்டும். இன்னும் கலப்பில்லாத அருமையான தமிழ்ச்சொற்கள் அங்கே மண்டிக்கிடக்குமென்றே நினைக்கிறேன். அழகான கலைகள், எமக்கான கலைகள், என்று இன்னும் அந்த மண்ணில் நாம் தோண்ட வேண்டியவைகள் ஏராளம்.
***************************************
வசந்தன், இன்று உங்கள் பக்கத்தை வந்தடைய நேரிட்டது. வாசித்துக்கொண்டிருக்கிறேன். மட்டக்களப்பைச் சேர்ந்த மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள், சட்டென ஒட்டிக்கொள்வார்கள் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால், ‘யாழ்ப்பாணத்தவர்’விசேட பிறவிகள் எனக் கருதும் சிலர் ‘மட்டக்களப்பானோ… பாயோடை ஒட்ட வைச்சிடுவாங்கள்’என்பதையும் கேட்டிருக்கிறேன். ஒட்டுறதிலை எத்தினை வித்தியாசம் பாருங்கோ…:)
Comment by tamilnathy — ஆகஸ்ட் 28, 2008 @ 2:47 மு.பகல்