வசந்தனின் பக்கம்

ஜனவரி 16, 2008

வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.

வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.

வை.கோ மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், நையாண்டிகள் வைக்கப்படுகின்றன. யாரும் என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். வை.கோ தொடர்பில் அவரவருக்குப் பல பிரச்சினைகள். ஆனால் நான் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுடைய, தன்னைத் தமிழ்த்தேசிய ஊடகமாகக் காட்டிக்கொள்ளுமோர் ஊடகம் இதை எழுதியபோது என்னுணர்வையும் பதிந்து வைக்கும் தேவையுள்ளதாக நினைக்கிறேன். உதயன் எழுதியதாலேயே அது ஈழத்தவர்களின் நிலைப்பாடாகக் கருதப்படக்கூடிய ஏதுநிலைகள் தென்படுவது ஒரு காரணமாகிறது.
போதாததற்கு, அங்கிங்குப் பொறுக்கி ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட – ‘டமில்’ தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கட்டமைத்துக்கொண்டவை, உதயனின் இவ்வாசிரியர் தலையங்கத்தைத் தமது இணையத்தளங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாலும், அவ்வூடகங்களில் வரும் அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் வலைப்பதிவுகள் சிலவற்றிலும் அத்தலையங்கம் வெளியிடப்பட்டதாலும் தனிப்பட்ட என்னுணர்வைப் பதிவாக்குவது அவசியமாகிறது; அது எவனுக்குமே தேவைப்படாதென்றபோதும்கூட.

உதயன் இப்படியொரு தலையங்கம் எழுதவேண்டிய வந்ததன் முதற்காரணம், அண்மையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய “இரங்கற் பதிவொன்றுக்கு” ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம்தானெனக் கருதமுடிகிறது. அதை முதன்மைப்படுத்தி ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கும்பலுக்குத் திட்டு விழுகிறது. முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் ஜெயலலிதாவோடு அரசியற்கூட்டணி வைத்துக்கொண்டு அவருக்கு ‘வால்பிடித்து’க்கொண்டிருக்கம் வை.கோ.வுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு அவர் “உலகத்தமிழர்களுக்கு” விளக்கம் கொடுக்க வேண்டுமென முடிகிறது.

[முதலில், உதயன் உலகத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா ஈழத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா எனக் குழப்பம் வந்தது. 'உலகத் தமிழர்கள்' அனைவருமே வை.கோ பதில்சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வியும் வந்தது. "ஈழம் என் வீடு, தெற்காசியா என் முற்றம், உலகம் என் கிராமம்" என்றெழுதிய கவிஞர் ஜெயபாலன் உதயனுக்குள் ஊடுருவிவிட்டாரா, அல்லது கனியன் பூங்குன்றன் சொன்ன 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எண்டநோக்கிலதான் உதயன் சொல்ல வருதோ - அப்பிடிச் சொன்னாலும் ஏன் தமிழரைமட்டும் சொல்லுறாங்கள் எண்டெல்லாம் நிறைய வழிகளில் இதைக் 'கட்டுடைக்க'ப் புறப்பட்டு, அதற்கெல்லாம் நேரமில்லாத காரணத்தால், தட்டச்சும்போது போகிறபோக்கில் உலகத்தமிழர்களென்று தட்டிவிட்டார்களென நினைத்துக்கொண்டேன். ஈழத்தமிழர்களை - குறிப்பாக புலிகளை அரசியற்றலைமையாக ஏற்றுக்கொண்டவர்களையே உதயன் குறிப்பிடுகிறது எனக் கருதிக்கொண்டு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.]

இங்கு எனக்கொரு குழப்பம் வந்துவிட்டது.
வை.கோ எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எப்படி அரசியல் நடத்த வேண்டுமெனச் சொல்வதற்கு ஈழத்தவர்கள் யார்? உதயன் யார்? அது முழுவதும் தமிழக அரசியலோடு தொடர்புடையது. நீங்களா போய் வை.கோ. வின் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? தமிழக அரசியலில் ஒருவரோ ஒரு கட்சியோ எடுக்கும் முடிவுக்கும் செயன்முறைக்குக்கும் கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? தமது ‘தமிழக அரசியல்’ செயற்பாடுகளுக்கெல்லாம் ஈழத்தவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கெங்கே இருக்கிறது?

சரி, இவ்வளவு கதைக்கும் நீங்கள் வை.கோ. வுக்கு இருந்த – இருக்கும் தெரிவுகளை யோசித்தீர்களா? கூட்டணி தொடர்பில் வை.கோ என்ன செய்திருக்க வேண்டுமேனக் கருதுகிறீர்கள்?
தனித்துப் போட்டியிடுவதையா? அல்லது சுந்தரமூர்த்தி போன்ற பதிவர்கள் சொன்ன இன்னொரு தெரிவான கட்சியைக் கலைத்துவிட்டு வாக்கு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதையா? ஈழத்தவர்களுக்கு வை.கோ மூலம் கிடைக்கும் நன்மையே அவர் வாக்கரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பது மட்டும்தான். வாக்கரசியலை விட்டு வெளியிலே ஈழத்துக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த ஏராளம் திராவிட, பெரியாரிய, இவற்றிலே சேராத தொண்டர்கள் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் ஒருவரின் செயற்பாட்டையும் அவரின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாதென்பதே எனது கருத்து. இதை வலுப்படுத்த, நாங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்தாடும் ஒருவரைக் கொண்டே விபரிக்கலாம்.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை, புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி, எப்படிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களென்பது அனைவருக்கும் தெரியும். மிக முக்கிய காலகட்டத்தில் செயற்கரிய உதவிகளைச் செய்து புலிகளை வளர்த்ததற்காகவும் அதன்மூலம் ஈழப்போராட்டத்திற்கு உதவியளித்ததற்காகவும் “மட்டுமே” – ஆம் அதற்காக மட்டுமே – நாம் எம்.ஜி.ஆரை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
யாராவது அவரின் தமிழக அரசியல் நிலைப்பாடு, செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டுள்ளோமா? அவரின் ஊழல்கள், மோசடிகள், அடாவடிகள், தனிப்பட்ட வாழ்க்கை என எதையாவது இதற்குள் கலந்தோமா? அப்படிக் கருதப்புறப்பட்டால் அவர் மீதான எமது நிலைப்பாடு மாறக்கூடுமல்லவா? அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி தனியே எம்மோடு தொடர்புடைய விடயத்தை மட்டும் கருத்திற்கொண்டுதான் இன்றுவரை எம்.ஜி.ஆரை அணுகிவருகிறோம்.

ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்குக்கூட எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தமுடியாத, தனிப்பட்ட வாழ்விலும்சரி, அரசியல்வாழ்விலும் சரி அப்பழுக்கற்ற வை.கோ. மீது, அவரின் அரசியற்கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக விமர்சனம் வைத்து அதற்குரிய விளக்கத்தைச் சொல்ல வேண்டுமெனக் கேட்குமளவுக்கு நீங்கள் வந்துவிட்டது எவ்வாறு?

இந்தப்பிரச்சினையில் வை.கோ. கேட்கும் எதிர்க்கேள்விகள் மிகமிக நியாயமானவை. பலசந்தர்ப்பங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது; ஆனால் எதிர்க்கேள்விகள் மூலம் எதிராளிக்கான பதிலைக் கொடுக்கலாம். இப்போது வை.கோ செய்வதும் ஒருவகையில் அப்படித்தான் தெரிகிறது. வை.கோ. வால் நிச்சயமாக தகுந்த விளக்கத்தைக் கொடுக்க முடியாத சூழ்நிலைதான் இப்போதுள்ளதாகப் படுகிறது. ஆனால் அவரின் எதிர்க்கேள்விகள் பல நியாயமானவை.

வை.கோ பாணியிலேயே நானும் உதயனைப் பார்த்துச் சில எதிர்க்கேள்விகள் கேட்க முடியும்.
ஓர் இரங்கற்பதிவெழுதியதற்காக தற்போது திடீரென தலையில் தூக்கிவைத்தாடும் தமிழக முதல்வர் இப்போதும் காங்கிரஸ் கட்சியோடுதான் கூட்டணி வைத்துள்ளார். அது பிரச்சினையில்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார். (கவனிக்க: காங்கிரஸ் தலைவர் ஒருவர் இனிப்பு வழங்கிக் கொண்டாடியது புகைப்படத்துடன் தினக்குரலில் செய்தியாக வந்துள்ளது. இச்செய்தி பிழையானதென சரியான முறையில் மறுத்தால் நான் இப்பத்தியை நீக்கிவிடுவேன்). அதைவிட, முதல்வரின் இரங்கற்பதிவுக்கு ஜெயந்தி உட்பட வேறும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவர்களோடுதான் கருணாநிதி இன்னமும் கூட்டணி வைத்துள்ளார். முதல்வரின் இரங்கற் பதிவு பற்றி ஜெயலலிதா சொன்னதற்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் சொன்னதற்குமுள்ள வித்தியாசத்தை உதயன் விளக்குமா? ஜெயலலிதாவாவது இனிப்பு வழங்கிக் கொண்டாடாமல் விட்டார்.
இப்போது என் கேள்வியென்னவென்றால், இரங்கற்பதிவைப் பழித்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் முதல்வர், உலகத்தமிழரெல்லாம் வேண்டாம், ஈழத்தமிழர்களுக்கு ( வேண்டாம் யாழ்ப்பாணத்தமிழர் – அதுவும் வேண்டாம், சங்கானை, சித்தங்கேணி, சண்டிலிப்பாய் எண்டு ஏதாவது ஓர் ஊர்த்தமிழர்களுக்கு) விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளாரென அடுத்த ஆசிரியர் தலையங்கம் எழுதுவீர்களா?

** கவனிக்க: முதல்வர் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பது தவறென்றோ, அவர் அதற்கான விளக்கத்தை ஈழத்தவர்களுக்கு அளிக்க வேண்டுமென்றோ நான் கேட்கவில்லை. உதயன் நாளிதழுக்கான ஓர் எதிர்க்கேள்வியே அது. இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை இறுதியில் ஓரிரு வரியில் எழுதுகிறேன்.

ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்ததற்கோ வால்பிடிப்பதற்கோ ஈழத்தவர்கள் கவலை கொள்ளவும் உணர்ச்சிவசப்படவும் எதுவுமில்லையென்பதே என்கருத்து. அது அந்த மாநில அரசியல் சார்ந்தது. அந்தக் கூட்டணிக்குப் போனதாலேயே வை.கோ. ஈழத்தமிழரின் போராட்டம் தொடர்பாக ஏதாவது சமரசம் செய்துகொண்டாரா, மாறுபாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரா என்பதே நாம் கனிக்க வேண்டியது. வை.கோ மாறவேயில்லை. முன்பு போலவே அதே தீவிரத்துடன்தான் இயங்குகிறார். இந்நிலையில் அவரின் அரசியற்கூட்டணி தொடர்பாக நாம் கவலைகொள்ளவோ கரிசனை கொள்ளவோ தேவையில்லை. அதையும்விட அதற்கான உரிமை எமக்கில்லை.
இதை இன்னும் உறைக்கும்படி வேறொரு முறையில் சொல்கிறேன்.

வை.கோ. வோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்த தீவிர ஈழவிடுதலை ஆதரவாளர்களோ புலிகளைப் பார்த்து,
‘நீங்கள் ஏன் சமாதானப் பேச்சுக்குப் போனீர்கள்? நீங்கள் ஏன் சண்டையைத் தொடக்கினீர்கள்? நீங்கள் ஏன் யுத்தநிறுத்தம் அறிவித்தீர்கள்? நீங்கள் ஏன் ரணிலை வெல்லவைப்பதை விட்டுவிட்டு ராஜபக்ஷவை வெல்ல வைத்தீர்கள்? நீங்கள் ஏன் நோர்வேயோடு பேசுகிறீர்கள்?’
இதற்குரிய விளக்கத்தை எமக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்”
என உளறிக்கொண்டிருந்தால் நாம் என்ன நிலையிலிருப்போம்?
அப்படித்தான் இருக்கிறது, தமிழகத்தில் எடுக்கும் அரசியற்கூட்டணி நிலைப்பாட்டுக்காக எமக்கு விளக்கம் சொல்லவேண்டுமென வை.கோ.வைப் பார்த்துக் கேட்பது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல்வரின் இரங்கற்பதிவு தொடர்பானது:
அவரின் இரங்கற்பதிவு பெரியளவில் என்னைப் பாதிக்கவில்லை. அவர் எழுதியதால் மகிழ்ந்து துள்ளவில்லை; அவர் எழுதியிராவிட்டால் அதைக்குறித்துக் கவலைப்பட்டிருக்கப் போவதுமில்லை. பிறகு நடப்பவைகளைப் பார்த்தால் அவர் அதை எழுதியிருக்காமலே விட்டிருக்கலாம் எனப்படுகிறது.

இயக்குநர் சீமான் சொன்னதைப்போல, ஈழஆதரவென்பது தமிழக வாக்கரசியலைப் பாதிக்கும் நிலைவரும்வரை இவை வெறும் சலசலப்புக்களாகவே இருக்குமென்பது எனது தனிப்பட்ட கருத்து.

சங்கரபாண்டி சொல்வதைப்போல தமிழகத்தில் ஒரு நியாயமான கருத்துக்கணிப்பை நடத்தினால் நல்லதென்று படுகிறது. பூவா தலையா போல ஒரு முடிபு வெளிப்படையாகத் தெரிந்துவிடும். நாங்களும் மேற்கொண்டு செல்லலாம். இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கும் நிலைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வை.கோ, ஈழம் தொடர்பாக வலைப்பதிவுச்சூழலில் பொதுவாகச் சில விடயங்களைப் பார்க்கலாம். வை.கோ என்றதுமே ஏதோவொரு விதத்தில் ஈழப்போராட்டத்தையும், புலிகளையும் முடிச்சுப்போட்டுத்தான் அணுகப்படுகிறது. இந்திய அரசியலில் இருக்கும் வேறெவருக்கும் இந்நிலையில்லை. அந்தளவுக்கு ஈழம் பற்றியும் புலிகள் பற்றியும் வை.கோ பேசியவை, பாடுபட்டவை ஏராளம் என்பதே உண்மை. மிக வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் என்றைக்கும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பவர் அவர்.

வை.கோ, தி.மு.க தலைமையிலான கூட்டணியை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தபோது வலைப்பதிவுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்நேரத்தில் வை.கோ.வுக்கு ஆதரவாக வந்தவை மிகமிகச் சில குரல்கள் மட்டுமே (டோண்டுவுடையதைச் சேர்த்தும்கூட;-)) அதுபோல் நடுநிலையாக விமர்சித்து வந்தவையும் மிகச்சில (சுந்தரமூர்த்தி போன்றவர்களது, அது பிரிவுக்கு முன்பே எழுதியிருந்தாலும்கூட)
ஆனால் வை.கோ.வைத் திட்டி வந்த குரல்களே அதிகம். அவற்றின் பின்னணி நோக்கங்கள் வேறுபட்ட தளங்களைக் கொண்டவை.

தீவிர கருணாநிதி ஆதரவாளர்களாக இருந்தவர்களிடமிருந்து (சிலருக்கு வை.கோ மீது பழைய கறளொன்று இருந்தது எனக்கருதுமளவுக்கு மிகத்தீவிரமாக இருந்தது;-)) வை.கோ. மீது வைக்கப்பட்ட கடுமையான தாக்குதல்கள் ஒருவகை.

கருணாநிதிக்கு எதிரான அரசியற்பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்டவர்கள், – ஏன் வை.கோ வுக்கும் எதிரான அரசியற்பார்வை கொண்டவர்கள்கூட இவ்விடத்தில் வை.கோ.வின் வெளியேற்றத்தை நையாண்டி பண்ணிக்கொண்டிருந்தார்கள் (முகமூடி, பி.கே.சிவகுமார் போன்றோரின் எழுத்துக்கள்). இது இன்னொரு வகை. இவர்களைப் பொறுத்தவரை, வை.கோ மீது தமது தாக்குதலை நடத்த இதையொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்களேயன்றி மற்றும்படி நியாயமான எந்த அரசியற்பார்வைகளும் இருந்ததாகத் தெரியவில்லை.

தனிப்பட்டளவில் வை.கோவின் ஜெயலலிதாவுடனான இணைவானது எனக்கு வருத்தத்தையளித்தாலும், இது தவிர்க்க முடியாததே என்பதோடு வை.கோ எடுத்தது சரியான முடிபே என்ற நிலையிலேயே நானிருந்தேன். (பேசியளவில் வேறும்சில ஈழத்துப்பதிவர்கள் இதேநிலைப்பாடோடு இருந்ததை அறிந்தேன்). ஆனால் நாங்கள் எல்லோரும் இந்தப்பிரச்சினையில் ஒதுங்கியிருந்தோம். கொழுவி மாத்திரம் கற்பகம் அம்மையாரோடு சண்டைபிடித்ததாக ஞாபகம்;-)

எனக்கு வருத்தமளித்த நிகழ்வு என்னவென்றால், இவர்கள் வை.கோ.வை வசைபாட ஈழத்தமிழர்களைப் பயன்படுத்திக்கொண்டமைதான். நான் மேற்குறிப்பிட்ட இருதரப்புமே வை.கோ. மீது தமது வசைமாரியைப் பொழிய பயன்படுத்திய முதல் ஆயுதம் ஈழத்தமிழர்கள்தான்.
அட! பி.கே. சிவகுமார், முகமூடி போன்றோர்கூட, ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கரிசனை கொண்டவர்கள்போல, வை.கோ. ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்துவிட்டார் எனப் புலம்பினார்கள். வை.கோ ஈழத்தவர்களின் தலையில் மிளகாய் அரைத்தவிட்டாரென ஒப்பாரி வைத்தார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஈழத்தவர்களோ வை.கோ செய்தது தவறென்று எங்குமே ஒப்பாரி வைக்கவில்லை. மாறாக அம்முடிவை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வை.கோ.வை உயிராய் நினைத்த அவரின் சீடர்கள் மாறியபோதுகூட ஈழத்தவர் மனங்களில் வை.கோ.வின் இடம் தளம்பலடையவில்லை. உதயனின் பாணியிற்சொன்னால், ஜெயலலிதாவுக்கு வால்பிடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்திற்கூட அது தளம்பலடையவில்லை. அந்நேரத்தில் வை.கோ.வைச் சரியாகப் புரிந்தவர்கள் ஈழத்தவர்கள் தானோ? ;-)

இப்படி மற்றவர்கள் ஈழத்தவரை வைத்து வை.கோ மீது விளையாடிக்கொண்டிருந்தது ஒருபுறமென்றால் இப்போது ஈழத்துச் செய்தியேடு ஒன்று விளையாட்டில் குதித்திருப்பது வருத்தமளிக்கிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதி முடித்தபோது மிகமிக நீண்டிருந்தது இடுகை. இடையிடையே வெட்டிக்கொத்திச் சுருக்கி (ஆம். இதுவே சுருக்கம்தான். வலைப்பதிவுச்சூழல் தொடர்பான நிறைய விடயங்கள் அலட்டல்களாக விளங்கியதால் வெட்டியாயிற்று.) இது வெளியிடப்படுகிறது.
மேலும் ஏதாவது சொல்ல வேண்டி வந்தால் பின்னூட்டங்களில் சொல்லலாமென நினைக்கிறேன்.

** இது உதயன் செய்தியேட்டுக்கு அனுப்பப்படவில்லை. அது எனது நோக்கமுமன்று.

** இதுவெனது தனிப்பட்ட கருத்து. இதற்குரிய எதிர்ப்புக்கள் ஈழத்தவர்களிடமிருந்தால் தெரிவிக்கவும்.

** இன்னொரு குறிப்பு:
இவ்விடுகையின் நோக்கம் உதயன் செய்தியேட்டின் நற்பெயரையோ அதன் சேவையையோ களங்கப்படுத்துவதன்று. எச்சந்தர்ப்பத்திலும் நாம் உதயனை புலம்பெயர் ஊடகங்களோடு வைத்துக் கருதுவதில்லை. அப்படி ஒப்பிடவும் முடியாது. தனக்குரிய வரலாற்றுப் பணியை உதயன் மிகுந்த தியாகங்களினூடு தொடர்ந்து செய்து வருகிறது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இயங்கும் இச்செய்தியேடு, இராணுவத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் தொடர் அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இயங்கிவருகிறது. தனது பணியாளர்களை ஆக்கிரமிப்பாளரின் துப்பாக்கிக் குண்டுக்குக் காவு கொடுத்துள்ளது. அதன்பின்னும் அது வீச்சோடு இயங்கிவருகிறது. விடுதலைப்போராட்டப் பயணத்தில் உதயன் செய்தியேட்டுக்கான பங்களிப்பை நாம் அறிவோம்.
ஆனால் இக்குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் நாம் கடுமையான முறையில் உதயனோடு முரண்படுகிறோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூலப்பதிவு: வசந்தன் பக்கம்: வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

பாமரன் பேட்டையும் இராஜராஜனும்

Filed under: அனுபவம், கலை, விமர்சனம் — குறிச்சொற்கள்:, , , — maathahal @ 1:26 பிற்பகல்
நான்கு மாதங்களின்முன்பு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. நிகழ்ச்சி தொடங்கி ஓரிரு நிமிடங்கள் தாமதமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்து, பின் கண்டுபிடித்துவிட்டேன். அவர் எழுத்தாளர் பாமரன்.நிகழ்ச்சியின் பெயர் ‘பாமரன் பேட்டை’.

அன்றைய நிகழ்ச்சியில் பாமரனுடனான நேர்காணலுக்கு வந்திருந்தவர் ‘பெயர் மாற்றல் நிபுணர்’ இராஜராஜன். (அவர் சோழன் என்ற ஒட்டைச் சேர்த்துள்ளதாக நான் அறியவில்லை. பின் எப்படி சயந்தனின் இடுகையில் அவர் இராஜராஜ சோழன் ஆனார் என்பது விளங்கவில்லை. பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தன்.)

முன்பு ‘சிகரம்’ தொலைக்காட்சி இங்கு ஒளிபரப்பாகியபோது, இராஜராஜனின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. தமிழகத் தொலைக்காட்சியொன்றில் அவர் செய்யும் பெயர்மாற்ற நிகழ்ச்சியே இங்கு மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்காவது இந்நிகழ்ச்சி பார்க்க நேரிட்டால் பொழுதுபோக்காக அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ரி. ராஜேந்தருக்கு இவர்தான் பெயர்மாற்றினார் என்ற தகவல் அறிந்தபோது மனிதரில் ஒரு சுவாரசியமான ஈர்ப்பு ஏற்பட்டது. (கவனத்துக்குரிய கலைஞர் ஒருவரையே மடக்கிப்போட்டாரே என்ற ஆச்சரியத்தால் இருக்கலாம்). அதன்பின் சிகரம் நின்றுபோனது. தரிசனம் வந்தது. நல்லவேளையாக இந்தக் கோமாளி நிகழ்ச்சிகள் தரிசனத்தில் ஒளிபரப்பாகவில்லை.

இனி பாமரன் பேட்டைக்கு வருவோம்.
தொடக்கத்தில் தனது துறையைப் பற்றிச் சிறு அறிமுகத்தை அளித்தார் இராஜராஜன். பெயர்தான் உலகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதென்பது அவரின் அடிப்படை வாதம். பின்னர் நடந்தது சுவாரசியமான உரையாடல்.

** இந்தியச் சிறைகளிலிருக்கும் அனைத்துக் கைதிகளையும் தன்பொறுப்பில் விடுமாறும், அவர்களை தான் பொறுப்பெடுத்து அவர்களின் பெயர்களை மாற்றி, அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றிக் காட்டுவதாகச் சொன்னார்.
சிறையிலிருந்து விடுதலை செய்து கையளிப்பதா அல்லது சிறையிலிருக்கும் நிலையிலேயே கையளிப்பதா என பாமரன் கேட்க, விடுதலை தேவையில்லை; சிறையில் வைத்தே பொறுப்பளிக்கும்படி இராஜராஜன் கேட்டுக்கொண்டார்.

** தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் பற்றி பாமரன் கேட்க, அவர்தான் உலகப்பயங்கரவாதத்தின் தலைவர் என்பதை இராஜராஜன் தெளிவாகச் சொன்னார். அவரின் பெயரை மாற்றிவிட்டால் அவர் நல்லவராகிவிடுவார், அமெரிக்காவும் உலகமும் நிம்மதியாக இருக்கலாமென்பதையும் இராஜராஜன் சுட்டிக்காட்டினார். அவரின் தந்தைக்கும் புஷ் என்ற பெயர் இருப்பதையும், அவரும் பயங்கரவாதத் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டி, பெயர்தான் இந்த மனப்பான்மைக்குக் காரணமென்ற தனது வாதத்தை இன்னும் வலுவாக்கினார்.

*சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றி பாமரன் கேட்க, அவருக்கும் அந்தப் பெயர்தான் பிரச்சினையாக இருந்ததென்றும் பெயரை மாற்றினால் அவர்கள் நல்லவர்களாக மாறி நாட்டுப்பிரச்சினை தீர்ந்துவிடுமென்றும் இராஜராஜன் கூறினார்.

** இடங்களுக்கு, நாடுகளுக்குப் பெயர்மாற்றுவது தொடர்பாக நேர்காணல் திரும்பியது.
‘பம்பாய்’ என்பதை ‘மும்பை’ என்று மாற்றியது தவறு என்றார் இராஜராஜன். அப்படி மும்பாயாக மாறியபின்புதான் அங்குக் குண்டுவெடிப்புக்கள் வன்முறைகள் என்பன தலைதூக்கின; அதற்குமுன்பு அது அமைதியான நகரமாக இருந்தது என்றார்.
இடையில் குறுக்கிட்ட பாமரன், பெயர் மாற்றத்துக்கு முன்பு நடந்த பல குண்டுவெடிப்புக்கள், அசம்பாவிதங்களைச் சொல்லிக் காட்டினார். அதற்கு, முன்பு குறைவாக இருந்தன, பெயர்மாற்றத்தின் பின்னர்தான் அவை அதிகரித்தன என்றார் இராஜராஜன். பாமரன் மேலும் சில விவரங்களைச் சொல்லப் புறப்பட்டபோது, ‘நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இதுதொடர்பாக நான் உங்களுக்கு அவற்றைத் தரமுடியும்’ என்று கூறினார். பாமரன் அத்தோடு மும்பாய் விடயத்தைக் கைவிட்டார்.

டில்லியை ‘நியு டில்லி’ என மாற்றியபின்பு அங்கு அமைதி நிலவுவதாகவும் அதற்குமுன் அங்கும் குண்டுவெடிப்புக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின என அடுத்த விடயத்தைத் தொடங்கினார் இராஜராஜன். பாமரன் அதற்கும் சில விவரங்களைக் கொடுத்து, நியுடில்லி எனப் பெயர்மாற்றிய பின்னர்தான் அதிக வன்முறைகள் நடந்தன எனச் சொன்னார். பாராளுமன்றக் கட்டடத் தொடர் மீதான தாக்குதல் உட்பட சிலவற்றைச் சொன்னார் பாமரன். வழமைபோல ‘நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளேன்’ என்ற பஞ்சாங்கத்தைப்பாடி அதிலிருந்தும் நழுவினார் இராஜராஜன்.

இலங்கைச் சிக்கல் பற்றியும் பேச்சு வந்தது. அது சிலோன் எனப் பெயர் இருந்தவரைக்கும் ஆசியாவின் பூந்தோட்டமாகத் திகழ்ந்ததாகவும், சிறிலங்கா எனப்பெயர் மாற்றியபின்புதான் அங்குப் பிரச்சினை தோன்றியதாகவும் இராஜராஜன் குறிப்பிட்டார்.
பா.: எப்போ இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது?
இரா: கொஞ்ச வருசத்துக்கு முன்னாடிதான்.
பா. அது சிலோனாக இந்தப்பவே 56 ஆம் ஆண்டுக் கலவரம் உட்பட பல பிரச்சினைகள் நடந்தன, தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்…
இரா: ஆமா, ஆனா பெயர் மாத்துறதுக்கு முன்னாடி பெரிசா பிரச்சினை இல்ல. அதுக்குப்பின்னாடிதான் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சண்டை போட ஆரம்பிச்சாங்க…

** இந்தியாவில் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை மாற்றியது இந்த இராஜராஜன் தான். அதுபற்றியும், அப்படிப் பெயர்மாற்றப்பட்டவர்களில் இருவரின் தற்போதைய நிலைபற்றியும் பாமரன் கேள்வியெழுப்பினார்.
ஒருவர், தற்போது விஜய ரி. ராஜேந்தர் எனப் பெயர்மாற்றிக்கொண்டிருப்பவர்.
பெயர் மாற்றத்தின்பின்னான அவரின் தோல்வி குறித்துக் கேட்கப்பட்டபோது,
அவர் தன்னிடம் பெயர்மாற்ற வந்தபோது அரசியல் அனாதையாகத்தான் இருந்தாரென்பதைக் குறிப்பிட்டார் இராஜராஜன். இன்னும் சிலவற்றைச் சொல்லியவர், 2011 இல் ரி.ராஜேந்தர் தமிழகத்தின் மிகமுக்கிய அரசியற்புள்ளியாக வருவார் என்பதை தான் எதிர்வுகூறியதாகவும், அது கட்டாயம் நடக்குமென்றும் உறுதியளித்தார்.

இவரால் பெயர் மாற்றப்பட்ட இன்னொருவர் பா.ஜ.க. திருநாவுக்கரசு.
“அரசராக இருந்தவரை அரசுவாக பெயர் மாற்றினீர்களே, (நான் சொல்வது சரிதானே? அல்லது மறுவளமாகவா?) அந்தப் பெயர் மாற்றத்தின்பின்னர்தான் அவரின் அரசியலில் மிகப்பெரும் வீழ்ச்சியேற்பட்டது. மத்திய அரசில் முக்கியமான அரசியற்புள்ளியாக (அமைச்சராக?) இருந்தவர், பெயர் மாற்றத்தின்பின்னர் சொந்த மண்ணிலேயே போட்டிபோட முடியாத நிலைக்கு ஆளாகவிட்டாரே” என்று பாமரன் கேட்டார்.
அதற்கு இராஜராஜன் அளித்த பதில்தான் சிறப்பானது.

தனது பெயர்மாற்றத்தின்படி அவர் மிகவுயர்ந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரின் தவறான அணுகுமுறையால்தான் இப்படியாகப் போனார். தவறான அணுகுமுறையென்ன என்பதை அவர் விளங்கப்படுத்தினார். அதாவது கட்சியைவிட்டு காங்கிரஸ் பக்கம் தாவியிருக்க வேண்டுமாம். சரியான நேரத்தில் தாவாதபடியால் அவரால் முக்கியமான புள்ளியாக வரமுடியவில்லையாம். அவர் சொந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்தார்; அதனால்தான் இப்படி ஆனார். திருநாவுக்கரசுவுக்கு அரசியல் சாணக்கியத்தனம் இல்லை. அதுதான் பிரச்சினையே ஒழிய தனது பெயர்மாற்றத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றார்.
[இவ்விடத்தில் பாமரன் முகத்தில் தெரிந்தது நையாண்டித்தனமான சிரிப்பா அல்லது அதிர்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர் ஆடிப்போய்விட்டார்.]

‘அப்போ, அவர் வெல்லும் கட்சிக்குத் தாவியிருக்க வேண்டுமென்பதையா சொல்கிறீர்கள்?’ என பாமரன் ஒரு தெளிவுக்காகக் கேட்டார்.
இராஜராஜன் அதைத்தான் தெளிவாகத் திருப்பச் சொன்னார். (அதைத்தானையா எல்லா அரசியல்வாதியும் செய்யிறான், இதுக்கெதுக்குப் பெயர் மாற்றம்?)

** தந்தை பெரியாரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவருக்குப் பெரியார் என்ற பெயர் வந்தபிறகுதான் அவர் பிலபலமானார் என்று இராஜராஜன் கூறினார். பெரியார் என்ற பெயர்பற்றி பாமரன் ஏதோ குறுக்கிட, ‘மக்கள்தான் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள், அதன்பின்னர்தான் அவர் பிரபலமானார்’ என்று இராஜராஜன் கூறினார்.
பாமரன்: அப்போ நீங்களும் பெரியார் என்ற பெயரை வைத்திருக்கலாமே? பிரபலமாவதோடு சமூகத்துக்கும் நல்லது செய்திருக்கலாம். ஏன் இராஜராஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
அதற்கு இராஜராஜன் பெரிதாகச் சிரித்தபடி பாமரனுக்கு நக்கல் தொனியில் பதிலளிக்கிறார்,
அட என்னங்க நீங்க?… இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு புரட்டுப் புரட்டப் போகிறேன் என்கிறேன், என்னைப்போய் பெரியார் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள்? ராஜராஜன் என்ற பெயர்தான் இதற்குச் சரி.”

அத்தோடு பாமரன் அடுத்த விடயத்துக்குத் தாவிவிட்டார்.;-).

** நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இராஜராஜனைப் பார்த்து,
‘முன்பு கூட்டங்களில்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள், இப்போது தொலைக்காட்சியிலும் இடையறாது வருகிறீர்களே?’ என்று கேட்டதற்கு அதைப் பெருமைபொங்க ஒப்புக்கொண்டார் இராஜராஜன். தனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேர அட்டவணையைச் சொன்னார்.

பாமரன்: முன்பெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு உணவூட்ட உம்மாண்டி வருது என்று பயங்காட்டிச் சோறூட்டுவார்கள் தாய்மார், இப்போது இராஜராஜன் ரீவியில் வரப்போறார் என்று சொல்லித்தான் உணவூட்டுகிறார்களாம், உண்மையா?
[பாமரனின் இந்தக் கேள்வி எனக்கு பண்பற்றதாகவே தோன்றியது. என்னதான் ஒரு கோமாளியை முன்னிருத்திவைத்து நேர்காணல் செய்தாலும் இப்படி அவமதிக்கக்கூடாது. அதுவும் நாமே நேர்காணலுக்கு அழைத்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாதென்பது என் கருத்து.]

ஆனால் எந்தச் சலனமுமில்லாமல் சிரித்துக்கொண்டே, ஆஆ… அப்படியா? என்று கேட்டார் இராஜராஜன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் பார்த்த நிகழ்ச்சி. இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் விடுபட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

இவ்விடுகையெழுதத்தூண்டிய சயந்தனுக்கு நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூலப்பதிவு:

வசந்தன் பக்கம்: பாமரன் பேட்டையும் இராஜராஜனும்

ஓரம்போ !!! – திரைப்படம்

அண்மையில் இப்படத்தைப் பார்த்தேன். ஏனோ தெரியவில்லை, பிடித்திருந்தது.

பொதுவாக தமிழ்ச்சினிமாவில் கடுப்பேற்றும் விடயங்கள்,
1. பாடற்காட்சிகள்
2. நகைச்சுவைக் காட்சிகள்
3. சண்டைக்காட்சிகள்.

இவற்றில் இரண்டாவதும் மூன்றாவதும் இப்படத்தில் இல்லையென்பதால் எனக்குப் பிடித்திருந்தது.
அதற்காக படத்தில் நகைச்சுவையே இல்லையென முடிவுகட்டிவிடாதீர்கள். நான் சொல்வது, தனியே நகைச்சுவைக்கென ஒருவரையோ ஒரு கும்பலையோ நடிக்கவிட்டு வரும் காட்சிகளை.
வடிவேலுவோ விவேக்கோ இன்னபிற நகைச்சுவைக்கென இருக்கும் நடிகர்களோ அவர்களின் பரிவாரங்களோ இப்படத்தில் இல்லை. கதைக்கான தேவையைவிட்டு நகைச்சுவைக்கென தனியான ஒழுக்கெதுவும் இப்படத்திலில்லை. எனவே இப்படம் பிடித்திருக்கிறது.

ஒரேயொரு சண்டைக்காட்சி வருகிறது, அதுகூட நாயகன் பத்துப்பேரைப் பந்தாடுவதாக காட்சிப்படுத்தப்படவில்லை. தனது ஆட்டோவைக் களவெடுத்துச் செல்வதைத் தடுத்துச் சண்டைபோடுகிறார் நாயகன். நாலைந்து பேருக்கு நாலைந்து அடியோடு சரி.

ஆ.. ஊ.. வென்று வாய்கிழிய வசனம்பேசும் நாயகனில்லை.
பார்வையாளனுக்கான உபதேசங்கள் இல்லை.

இப்படி சில ‘இல்லாமை’களுக்காக இப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

வழமையாக படங்களில் எரிச்சலேற்படுத்தும் பாடற்காட்சிகள் கூட இப்படத்தில் எனக்கு எரிச்சலேற்படுத்தவில்லை. அந்த ஒரேயொரு காதற்பாட்டைத் தவிர்த்திருக்கலாம். மற்றவை படத்தோடும் கதையோடும் இயல்பாகப் பொருந்துவதாகத் தோன்றுகின்றன.

படத்தில் ஆட்டோ ஓட்டப்போட்டி நடத்துகிறார்கள். படத்தின் மையக் கருவே அதுதான். படத்தில் வரும் முதலாவது போட்டியில் நாயகன் வெல்கிறார்.
அதன்பிறகு தோற்கிறார், தோற்கிறார், தோற்றுக்கொண்டேயிருக்கிறார்.
வழமையாக முதலில் நாயகன் தோற்பார், பிறகு வெல்வார். இங்கு தலைகீழாக நடக்கிறது.

நாயகனும் அவரது நண்பனும் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். கையிலிருப்பது, யாருக்கும் தெரியாமல் பொத்திவைத்திருந்த ‘சீத்தா’ எனுமொரு ஆட்டோ. யாரையும் தொடக்கூட விடுவதில்லை.
அதைப் பந்தயமாக வைத்து இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. ரஜனி ஒத்தை ரூபாயை வைத்து எல்லாக் கோடிகளையும் மீட்பது போல நாயகனும் அவனது நண்பனும் இதைவைத்தே இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடுவார்களோ என்று நினைத்துப் பயந்துகொண்டிருந்தேன். அதற்குரியமாதிரி பந்தயத்தில் நாயகன் வென்றால் இவர்கள் இழந்த அனைத்தையும் மீளத்தரவேண்டுமென்பதே பந்தயமாகவும் இருந்தது.

அட! அந்த இறுதிப்போட்டியிற்கூட நாயகனும் தோழனும் தோற்றுப்போகிறார்கள். இப்பிடியொரு அதிர்ச்சியைத் தமிழ்ச்சினிமாவில் – அதுவும் முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் – ‘ஆக்ஷன் ஹீரோ’ க்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்யா நடிக்கும் படத்தில் – எதிர்ப்பார்க்கவில்லை.

அதிஷ்டவசமாகக் கிடைத்த இரண்டு கறுப்பு முத்துக்கள் மூலம் நிறையப் பணம் கிடைத்து ஆர்யாவும் நண்பனும் வாழ்க்கையில் நிலைபெறுகிறார்கள் என்று காட்டி படத்தை முடிக்கிறார்கள். திருப்பவும் ஓட்டப்போட்டிக்கு வருவதாகக் காட்டவில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படத்தில் பிடித்த பாத்திரம்: Sun Of Gun.
மனிதர் நன்றாக நடித்திருக்கிறார்.

பிடித்த காட்சி:
பூஜாவை, தன்னுடன் படம்பார்க்க திரையரங்கு அழைத்துச் செல்வதற்காக ஆர்யா போடும் தூண்டில். பூஜாவின் பிரியாணியில் கதையைத் தொடங்கி எதிராளிக்குச் சந்தேகம் வராதமாதிரி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே திரையரங்குக்குப் போக சம்மதிக்கவைக்கும் அந்தக்காட்சியை மிகவும் இரசித்தேன்.

** இப்படத்தில் நாயகனின் நண்பனாக வரும் ‘பிகிலு’ பல படங்களில் ஆக்ரோசமான வில்லனாக நடித்திருக்கிறார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். நன்றாகச் செய்திருக்கிறார். மும்பை எக்ஸ்பிரசில் பசுபதியைப் பார்த்த ஞாபகம் வந்தது.

*** படத்தில் கதையென்று எதுவுமில்லையென்று சிலர் சொன்னார்கள். உண்மைபோற்றான் தெரிகிறது. கதையென்று தனியே எழுதிவிட முடியாது. நாலைந்து சிறுகதைகளை ஒன்றாக்கி அவற்றுள் ஏதோவொரு தொடர்பை ஏற்படுத்தி ஒரு படமெடுத்ததுபோல் இருக்கிறது. ஆனால் இரசிக்கும்படியான திரைக்கதையமைப்பு.

அவனவன் ஒரேகதையை வைத்துப் பத்துப்படம் பண்ணும்போது, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.

இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவர் பெண்ணென்று அறிகிறேன்.
வாழ்த்து.
ஜனரஞ்சகமான படங்களுள் பெண்களின் வருகை களிப்பூட்டுகிறது (கண்ணாமூச்சி ஏனடா இன்னோர் எடுத்துக்காட்டு).

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூலப்பதிவு: வசந்தன் பக்கம்: ஓரம்போ !!! – திரைப்படம்

Theme: Shocking Blue Green. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.