வசந்தனின் பக்கம்

மார்ச் 15, 2008

ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்?

Filed under: கலை, திரைப்படம், விமர்சனம் — maathahal @ 3:09 மு.பகல்

தங்கர் பச்சானின் நெறியாள்கையில் வெளிவந்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பல வெளிவந்துவிட்டன. தொலைக்காட்சிகளில், வெகுசன ஊடகங்களில், வலைப்பதிவுகளில் என பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டன.
அனைத்திலும் குறிப்பிடப்பட்ட முக்கிய குறைபாடு (ஒரேயொரு குறைபாடு என்றுகூடச் சொல்லலாம்) அர்ச்சனா சத்தம் போட்டுக் கத்துவதைப் பற்றியது தான். வலைப்பதிவுகளில் காசி ஆறுமுகம் தொடக்கம் நா.கண்ணன் சுரேஷ் கண்ணன் வரை பெரிய தலைகளும் அதையே குறிப்பிட்டிருந்தார்கள்.
திகைப்பை ஏற்படுத்தும் விதமாக நா.கண்ணன் மட்டும் (நான் வாசித்த, கேட்ட அளவில்) அர்ச்சனாவின் அழுகையையும் நடிப்பையும் சரியென்று பாராட்டியிருக்கிறார்.
நா. கண்ணன் ஐயாவோடு நானும் இணைந்து கொள்கிறேன்.

இப்படம் தொடர்பாக தங்கர் பச்சானிடம் வைக்கப்பட்ட முதன்மை முறைப்பாடு இந்த அழுகைதான். இக்குற்றச்சாட்டைக் கேட்டவுடனேயே (சமயங்களில் கேள்வி தொடங்கும்போதே) தங்கருக்குக் கோபம் உச்சத்துக்கு ஏறுகிறது. மதன் திரைப்பார்வையில் தங்கர் கர்ஜித்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது, கூடவே அவருடைய விளக்கமும்.

நகர்ப்புற மனிதர்களின் பார்வையில் கிராமத்துத் தாயின் கதறல் அப்படித்தான் தெரியும் என்பது தங்கரின் பதில்களிலொன்று. தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் நகர்ப்புறப் பெண்ணை எப்படி கிராமத்துப் பெண்ணுக்குப் பொருத்த முடியும்? சுகாசினியும் மதனும் இன்னும் பலரும் இந்த நகர்ப்புறப் பார்வையுடன்தான் பார்க்கிறார்களென்பது விளங்குகிறது.

தங்கர் சொல்லும் இன்னொரு முக்கிய விடயம், தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் ‘அம்மா’ பாத்திரம். அந்தக் கட்டமைப்புக்குள் இல்லாமல் யதார்த்தமான தாயைக் காட்டியதும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்பது அவரது கருத்து.
உண்மைதான்.

தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் தாய்ப் பாத்திரம் தமிழ்ச்சூழலின் பெரும்பான்மையைப் பிரதிபலிக்காத பாத்திரம்தான். விடிய வெள்ளன முழுகி, தலைதுவட்டி, சாமிபடத்துக்கு புகைகாட்டி மணியடித்தபடி வெள்ளை வெளேரென ‘மங்களகரமாக’ வரும் தாய்மார்கள் நிச்சயமாக எங்களைப் போன்றவர்கள் வாழ்ந்த சூழலில் தாய்மாரை நினைவுபடுத்துவதில்லை. மிகப் பெரும்பான்மையானவர்களின் தாய்மாரை அப்பாத்திரங்கள் பிரதிபலிக்கா.
எத்தனை படத்தில்தான் இவர்களைப் பார்த்துச் சலிப்பது?
கிட்டத்தட்ட அரைவாசிப் படங்களிலாவது தொடக்கக் காட்சியாக அமையும் கோயிற்காட்சி, தேங்காயுடைக்கும் காட்சி, அர்ச்சனை செய்யும் காட்சி, ஆரத்தியெடுக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் எரிச்சலை இந்த தமிழ்ச்சினிமா அம்மா மாரும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதைவிட, அவர்கள் அடக்கமே உருவாக இருப்பார்களாம். சத்தம் போட்டுப் பேசமாட்டார்களாம். சத்தம்போட்டு அழக்கூட மாட்டார்களாம். கணவனுக்கு முன்னால் வாய்பொத்தி இருப்பார்களாம். இவற்றைவிட, பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்று சூப்பர் ஸ்டார் முதல் ஆளாளுக்கு உபதேசம் வேறு செய்துகொண்டேயிருப்பார்கள். இப்படியெல்லாம் கலந்துகட்டி தாய் என்ற (பொதுவாக பெண்) விம்பத்தை தமிழ்ச்சினிமாவில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது சில திரைப்படங்களில் வரும் தாய்மார்கள் ஒரு நெருக்கத்தை உணர வைப்பார்கள். அவ்வகையில் பாலு மகேந்திராவின் ‘அதுவொரு கனாக்காலத்தில்’ தனுசின் தாயாக வருபவரைச் சொல்லாம். பருத்திவீரனில் நாயகியின் தாயாக வருபவரின் பாத்திரம் என்னைக் கவர்ந்தது. அதுபோல் ‘பொல்லாதவனில்’ டானியல் பாலாஜியின் அண்ணியாக வரும் பாத்திரமும் கவர்ந்தது.

முன்பு சொன்னபடி அடக்கமே உருவாகச் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களிலிருந்து முற்றிலும் விலகி தங்கர் பச்சானின் வேலாயி இருப்பது பலருக்கு அதிர்ச்சி.

ஒரு பெண் இப்படியெல்லாம் ஓலமிடுவது யதார்த்தத்துக்குப் புறம்பானதென்று இணைய இதழொன்றில் பார்த்தேன். என்ன முட்டாள்தனமான வாதம்? பெண்களால் மட்டும்தான் அப்படிக் கதற முடியும். அவர்கள் மட்டும்தான் அப்படிப் கதறியழுகிறார்கள்.

எங்காவது ஆண்கள் அப்படிக் கதறிப் பார்த்திருக்கிறீர்களா?
இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பது யார்? நூறு வீதமும் பெண்கள்தாம். சில புறநடைகளை விட்டால் ஆண்களுக்கு குரலெடுத்து அழத்தெரியாது, அல்லது அப்படி அழ விரும்புவதில்லை. தனது ஆண்மைக்கு இழுக்கு என்ற மனோபாவமும் ஒரு காரணம். ஆனால் பெண்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. குறிப்பாகக் கிராமத்துப் பெண்கள் அவற்றுக்கு வெட்கப்படுவதில்லை. அழுகை வருகிறதோ இல்லையோ செத்த வீடொன்றில் குரலெடுத்து அழுதே ஆக வேண்டிய தேவைகூட அவர்களுக்கு இருக்கிறது.

கிராமங்களில் பெண்களிடையே நடக்கும் வாய்ச்சண்டையைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், அவர்களின் சத்தத்தின் வலிமை. ஆண்களிடையே நடக்கும் சண்டை சிலவேளை அடுத்த வீட்டுக்கே கேட்காது. அதிக நேரம் நீடிக்கவும் மாட்டாது. சில நொடிகளிலேயே கைகலப்பு வரை வந்து முடிந்துவிடும். அனால் இரண்டு பெண்களிடையில் சண்டை மூண்டால் இடைவேளைகள் விட்டுக்கூட நாள் முழுவதும் சண்டை பிடிப்பார்கள். அக்கம் பக்கத்திலிருக்கும் நாலைந்து வீடுகளுக்கு அன்று பெரும் சமாதான். (அந்நேரத்தில் அவ்வீடுகளில் இருக்கும் அண்களின் நிலை பரிதாபமாக இருக்கும். குடிக்க தேத்தண்ணி கூடக் கிடைக்காது. நான் பார்த்தளவில் அவர்கள் செய்யும் வேலை, சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்காவது மதவடியில் போய் கடுதாசி விளையாடிவிட்டு பொழுதுபட வீட்டுக்கு வருவதுதான்)

என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெருத்த சத்தத்தில் கத்துவது, கதறுவது, சண்டை பிடிப்பதெல்லாம் பெண்களுக்கு மிக யதார்த்தமான, இயல்பான விடயங்கள். ஆண்களுக்குத்தான் அவை மிகையான விடயங்கள்.

இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டில் அர்ச்சனா கத்துவது, புலம்புவது, அழுவது எல்லாமே படு யதார்த்தமாகத்தான் எனக்குத் தெரிகிறது. அர்ச்சனா போன்ற ஏராளம் ஏராளம் தாய்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களோடு வாழ்ந்திருக்கிறேன். எடுத்ததுக்கெல்லாம் ‘மாதாவே, யேசுவே, தொம்மையப்பரே, இதுகளைப் பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறீரோ?’ என்று ஓலமிடத் தொடங்கிவிடும் பல தாய்மார் எனது சுற்றமாக இருந்திருக்கிறார்கள்.
அதுவும், என்ன விசயத்துக்கு யார் யாரிடம் எப்படிப் புலம்ப வேண்டுமென்றுகூட ஓர் ஒழுங்குமுறை வைத்திருப்பார்கள். ஆருக்காவது சாபம் விட வேணுமெண்டால் மிக்கேல் சம்மனசானவரைக் கூப்பிடுறது தொடக்கம் மிக நுணுக்கமாக அவர்களது புலம்பல் இருக்கும்.

பிள்ளைகள் எதிர்த்துக் கதைத்தவுடன் சாமி படத்தின்முன் போயிருந்து அர்ச்சனா புலம்புவாரே, அப்படி அவர் புலம்பாவிட்டால்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~
அர்ச்சனா கதறும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம் என்பதும் ஒரு விமர்சனம். அது பார்ப்பவர்களின் பிரச்சினையே ஒழிய அழும் தாய்க்கு எண்ணிக்கை பிரச்சினையில்லை என்பது தங்கரின் வாதம். நேற்று அதிகம் அழுதுவிட்டேன், இன்று குறைத்து அழவேண்டும் என்று திட்டம்போட்டு எந்தத் தாயும் அழ மாட்டாள் என்று தொடர்ந்து சொல்கிறார் தங்கர்.

முடிவாக, ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் அர்ச்சனாவின் அழுகை எவ்விதத்திலும் எனக்கு உறுத்தவில்லை. மிகமிகக் கச்சிதமாக அவரின் பாத்திரம் படத்தோடு பொருந்துகிறது என்பதே என் கணிப்பு.

சுரேஸ் கண்ணன் சொல்லும் “டெக்னிகல்” விசயமும் எனக்கு விளங்கவில்லை. கதறியழுவதை, சத்தம் வெளியில் வராமல் காட்சியாக மட்டும் காட்டுவதைப் பற்றி ஏதேனும் சொல்கிறாரோ தெரியவில்லை.

மற்றும்படி அர்ச்சனாவின் அழுகையை நிறுத்துவதென்பது பாத்திரச் சிதைப்பு என்பதோடு யதார்த்தமாகவும் இராது என்பதே என் கருத்து. அந்தந்தக் காட்சிகளில், அர்ச்சனா வாயைத் திறக்காமல் கண்ணீர் மட்டும் விடுவதுபோன்று படத்தை எடுத்திருந்தால், என் பார்வையில் நிச்சயமாக அதுவொரு பாத்திரச் சிதைவை ஏற்படுத்தியிருக்கும்.

ஒன்பது ரூபாய் நோட்டில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையாகவும் உறுத்தலாகவும் எனக்குப்பட்டவை பாடல்கள் தாம். ‘மார்கழியில் குளித்துப்பார்’ என்ற, கதை நகர்வுக்கு உறுதுணையான பாடலைத் தவிர்த்து மற்றக் காதல்பாடலெல்லாம் படத்துக்குத் தேவையற்றவை.

விஜய் தொலைக்காட்சியின் அனுகாசனின் ‘கோப்பி வித் அனு’ நிகழ்வில், தங்கர் பச்சான் கலந்து கொண்டார். ‘எதைச் செய்தால் தமிழ்ச்சினிமா முன்னேறும்?’ என்ற அனுவின் கேள்விக்கு தங்கர் சடுதியாகப் பதிலளிக்கிறார், ‘பாடல்களை நிறுத்திவிட்டாலே போதும்’ என்று.

மிக அண்மையில் புதிய இயக்குநர் ஒருவரும் (மிஷ்கின்?) படங்களில் பாடல்களைச் சேர்ப்பது தனக்குப்பிடிப்பதில்லையென்றும், வியாபார ரீதியில் வேறுபலரைத் திருப்திப்படுத்த அவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறதென்றும் படவிழாவில் பேசினார்.
இயக்குநர் சேரனும் பாடல்கள் இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்ற விவாதத்தை முன்பு முன்வைத்திருந்தார். கமலகாசன் இருபது வருடங்களின் முன்பிருந்தே இதைத் தீவிரமாகச் பேசியிருக்கிறார். தன்னளவில் முயற்சித்தும் இருக்கிறார்.

ஆனாலும் எமது சாபக்கேடு, எல்லாம் பேச்சளவோடு நின்றுவிடுகிறது. பாடல்கள் இல்லாமல் தமிழ்ப்படங்கள் (அட வருடத்துக்கு ஒன்றிரண்டாவது?) வரும் காலமொன்றையும், அதனூடு தமிழ்ச்சினிமா ஓரிருபடிகள் முன்னேறுமென்பதையும் கனவு கண்டுகொண்டேயிருக்கிறேன்.

கேள்விக்குறி – கவர்ந்த தமிழ்த் திரைப்படம்

Filed under: கலை, திரைப்படம், விமர்சனம் — maathahal @ 3:05 மு.பகல்

கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது.
ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன்.

அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன்.

படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை.

ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து.

தமிழிலே இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது வியப்புத்தான். (அண்மையில் பாடல்களேயில்லாமல் ‘அசோகா’ என்றொரு தமிழ்ப்படமும் வந்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும்.)

படத்தின் நாயகன் ஒரு குடும்பத்தலைவன். வில்லன் என்று சொல்ல வேண்டுமானால் காவல்துறையைச் சொல்லலாம்.

படமானது முக்கியமான சிக்கலொன்றை கேள்விக்குட்படுத்துகிறது. அது ‘விசாரணை முறை’. படத்தின் அடிநாதமே காவல்துறையினரின் விசாரணை முறைகள் மீதான கேள்விதான். அதை மையமாக வைத்துத் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

படத்தின் இறுதிக்கட்டத்தில் நாயகன் சொல்வான்:
“விசாரணை என்பது அறிவு தொடர்பானது. குற்றங்களையும் குற்றவாளிகளையும் கையாள்வதும் விசாரணை செய்வது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும். மிருகத்தனமாக எல்லோரையும் போட்டு அடித்து நொருக்குவதற்குப் பெயர் விசாரணை இல்லை. பலர்கூடி பலகோணங்களில் விசாரித்து, தகவல்கள் திரட்டி, அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவதுதான் விசாரணை”

மிகமுக்கியமான விவாதமொன்றை எழுப்பியிருக்க வேண்டிய படமானது எதுவுமின்றி படுத்துவிட்டது. திரைப்படத்திலும் இவ்விடயத்தைச் சரியான முறையில் அழுத்தமாகச் சொன்னார்களா என்பதில் எனக்கு ஐயமுண்டு. ‘தமிழ்ப்படம்’ பார்க்கிறோம் என்ற உணர்வைக் கழற்றிவைத்துவிடும் ஒருவசதி தேவையென்பதும் முக்கியம்.

இத்திரைப்படத்தில், எதைச்சொல்ல வந்தார்களோ, அதை மட்டும் சொல்கிறார்கள். தேவையற்ற அலட்டல்களில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காவல்துறையின் தலைமை அலுவலர் ஒருவரின் வீட்டினுள் புகும் நாயகன் அங்குள்ளவர்களைப் பணயக் கைதியாக்குவதோடு படம் தொடங்குகிறது.
தலைமை அலுவலரைக் கட்டிவைத்துவிட்டு தேவையானவர்களை அங்கு வரவழைத்து நாயகனே விசாரணை செய்கிறான். படம் முழுவதும் விசாரணைதான். விசாரிக்கப்படும் ஒவ்வொருவரினதும் வாக்குமூலங்கள் காட்சிகளாகக் காட்டப்படுகின்றன.
அப்படி என்னதான் விசாரிக்கிறான்?

குற்றவாளி ஒருவனைப்பற்றி விசாரிப்பதற்காக கணவனும் மனைவியும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். இருவரையும் பிரித்துவைத்து விசாரிக்கிறார்கள். கணவனை மிகுந்த சித்திரவதை செய்கிறார்கள். மறுநாள் அவனை விடுவிக்கிறார்கள். ஆனால் மனைவிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. மனைவி குற்றவாளியுடன் ஓடிவிட்டாள் என காவல்துறை
தரப்பிற் சொல்லப்படுகிறது. என்ன நடந்ததென்று எதுவுமே தெரியாதநிலையில்தான் நாயகன் தலைமை அலுவலரின் முன் தனது விசாரணையைத் தொடங்குகிறான்.

இறுதியில் என்ன நடந்ததென்று தெளிவாகிறது. அதற்குள் அவ்வீட்டை சிறப்புப்படை சுற்றிவளைத்துவிடுகிறது. நாயகன் காவற்றுறை அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறான். அவற்றுள் முதன்மையானது எல்லாக் காவல்நிலையங்களிலும் வீடியோ கண்காணிப்பு இருக்க வேண்டுமென்பது.

கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்று தெரிவதற்கிடையில் சிறப்புப்படை படத்தை முடித்துவிடுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமர்சனங்கள் இல்லாமலில்லை. விசிலடிச்சான் குஞ்சு மனப்பான்மையோடு சில காட்சிப்படுத்தல்கள் உள்ளதாகப் படுகிறது. நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், ‘என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?’ என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன. இருந்தாலும் இறுதிவரை படத்தின் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. திரைக்கதை ஓட்டத்தின்படி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை பார்வையாளர்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.

நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களின் படமாதலால் கதையை விரும்பியபடி சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இப்படத்தின் இறுதிக்காட்சி வேறுமாதிரித்தான் எடுத்திருக்க வேண்டிவரும்.

படத்திலிருக்கும் வேறோர் அபத்தம் என்னவென்றால் ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. ‘றம்போ’ இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்? ஆனாலும் அந்தக்காட்சி எந்தவிதத்திலும் உறுத்தாத அளவுக்கு திரைக்கதைப் போக்கு இருந்தது என்பது உண்மைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் – அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.
அது முரணாக இல்லையா?
படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம். (அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)

ஆனால் காட்சிகளில் இருந்து நானொன்றை உணர்ந்துகொண்டேன். அதாவது நாயகனின் விசாரணையில் காவல்துறையினர் யாருமே உண்மை சொல்லவில்லை. எல்லோருமே தாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த அல்லது தான் தப்புவதற்காக அந்தநேரத்தில் தோன்றிய கதையைத்தான் சொல்கிறார்கள். கட்டித் தொங்கவிட்டு அடித்தும்கூட காவல்நிலையப் பொறுப்பதிகாரி தான் தயாரித்து வைத்திருந்த கதையை மட்டுமே இறுதிவரை சொல்லிக்கொண்டிருந்தான். உண்மை படிப்படியாக வெளிவருவது ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சொல்லும் முரண்பட்ட கதைகளிலிருந்துதான். அத்தோடு சம்பவம் நடந்தபோது காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இன்னொரு கைதியின் துணையும் சேர்ந்து முழுக்கதையும் வெளிவருகிறது.

ஆக, அடித்துத் துன்புறுத்தினாலும் சரியான உண்மை வெளிவருவதற்கு உத்தரவாதமில்லையென்பதை நாயகன் காவல்துறையினரைத் துன்புறுத்துவதன் ஊடாகவும் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இதை பத்திரிகையாளனைக் கொண்டு கேட்கவைத்து நாயகனைக் கொண்டு பதில் கொடுத்திருக்கலாம். (பார்ப்பது தமிழ்ப்படமாயிற்றே. இப்படி வசனங்களை வைத்துப் பேசினால் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலைமையிலிருக்கிறோம். நகைச்சுவையொன்றைச் சொல்லிவிட்டு அதைவிடவும் அதிகநேரம் அதைப்பற்றி விளங்கப்படுத்தி நடிக்கும் விவேக்கை ‘ஜனங்களின் கலைஞன்’ என்ற அடைமொழி கொடுத்து மிகச்சிறந்த நகைச்சுவையாளனாக தூக்கிவைத்த இரசிகக்கூட்டத்திடம் இப்படி திரைக்கதையிலேயே விடையைச் சொல்லும் உத்தி பலனளிக்குமோ தெரியவில்லை.) சிலவேளை இயக்குநருக்கே இப்படியெல்லாம் தோன்றாமல் தற்செயலாக அமைந்த காட்சிகளுக்கு நான்தான் புதுப்புது விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ;-)

~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்ப்படங்களை விட்டு வெளியில் சென்றால் திரைப்படங்களுக்கான வகைப்படுத்தல்கள் பலவுள்ளன.
Action, Adventure, Comedy, Documentary, Drama, Horror, Romance, SciFi, Fantasy Thriller என்று பலதரப்பட்ட வகைப்படுத்தல்களுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் எந்தத் தமிழ்ப் படத்தையெடுத்தாலும் மேற்படி வகைகளுக்குள் தனித்தனியாக அடக்கமுடியாது. ‘மசாலா’ என்ற வகைக்குள் மட்டுமே அடக்கக்கூடியதாக உள்ளது. அதாவது அனைத்து வகைகளையும் கலந்துகட்டிய ஒரு பொட்டலாம்தான் மசாலா. (தமிழில் வந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் சிலவற்றை மட்டும் விதிவிலக்காக ‘நகைச்சுவை’ என்ற வகைக்குள் அடக்கலாம்.)
மசாலா என்பதற்கு வெளியில் தனியொரு வகைப்படுத்தலுக்குள் அடக்கக்கூடியதாக மிக அருந்தலாக வந்துள்ள தமிழ்ப்படங்களில் ‘கேள்விக்குறி’யும் ஒன்று.

~~~~~~~~~~~~~~~~~~~~~~

காவல்துறையின் அராஜகப் போக்கு, குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் யாராவது ஒருவரைக் குற்றவாளியாக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்படுவது, பெண்களை நடத்தும் முறை என்பன நாளாந்தம் நாம் அனுபவித்து வரும் நிகழ்வுகளே. அந்நிகழ்வுகளையும் அவற்றால் பாதிக்கப்படும் அப்பாவிகளையும் அவர்களின் பாதிப்புக்களையும் சரியாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படத்தில்தான் இசையமைப்பாளருக்கான பணி சரியாகப் பொருந்திவரும். தமிழ்த்திரைப்படங்களில் இசையமைப்பவர்களுக்கு இருக்கும் முதன்மை நோக்கம் நாலு பாடல்களை வெற்றிகரமாக இசையமைத்துவிட்டால் சரி. மக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். திரைப்பட விமர்சனங்கள்கூட இசையமைப்பைப் பற்றிய குறிப்பில் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவதோடு சரி.
உண்மையில் இசையமைப்பென்பது படத்துக்கான பின்னணி இசைதான். அதில் கவனம் செலுத்த ஏதுவான சூழ்நிலையில் அதிகம் படங்கள் வருவதில்லை. யாராவது மிக நுணுக்கமாக பின்னணி இசை கோர்த்திருந்தாலும் அதுபற்றிப் பேசப்படுவதில்லை. பாடல்கள் “மட்டுமே” இசையமைப்பாளர் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் காரணியாகவுள்ளன.

இந்நிலையில் ஒரேயொரு பாடலை மட்டுமே கொண்ட இப்படத்தில்தான் இசையமைப்பாளரின் தேவை சரிவர உணரப்பட வாய்ப்புண்டு. அவ்வகையில் இப்படத்தின் இசையமைப்பாளர் திருப்திகரமாகவே செய்துள்ளார் எனச் சொல்லலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

இறுதியாக,
அண்மையில் வந்தவற்றுள் சிறந்த படமாக எனக்குத் தெரியும் தமிழ்ப்படமிது.
அதிகம் கவனிப்படாமல் போய்விட்டது.

சிறுசிறு விமர்சனங்களைத் தாண்டி இப்படியொரு முயற்சி எடுத்ததற்காகவே பாராட்டப்படவேண்டிய துணிச்சல் இது.
அந்தச் சிறுசிறு விமர்சனங்கள்கூட இப்போதிருக்கும் தமிழ்ச்சினிமா ஓட்டத்தில் பொருட்படுத்தத் தேவையற்றவை.

~~~~~~~~~~~~~~~~~~~~

படத்தைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன்.

படத்தின் நாயகன் ஜெய்லானி தான் இப்படத்தின் இயக்குநரும் என அறிகிறேன்.
ஜெய்லானிக்கு உளமார்ந்த வாழ்த்து.

கமரா: கே.வி. மணி.
இசை: சத்யபிரசாத்
Photo: tamilcinema.com

ஜனவரி 16, 2008

பாமரன் பேட்டையும் இராஜராஜனும்

Filed under: அனுபவம், கலை, விமர்சனம் — குறிச்சொற்கள்:, , , — maathahal @ 1:26 பிற்பகல்
நான்கு மாதங்களின்முன்பு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. நிகழ்ச்சி தொடங்கி ஓரிரு நிமிடங்கள் தாமதமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்து, பின் கண்டுபிடித்துவிட்டேன். அவர் எழுத்தாளர் பாமரன்.நிகழ்ச்சியின் பெயர் ‘பாமரன் பேட்டை’.

அன்றைய நிகழ்ச்சியில் பாமரனுடனான நேர்காணலுக்கு வந்திருந்தவர் ‘பெயர் மாற்றல் நிபுணர்’ இராஜராஜன். (அவர் சோழன் என்ற ஒட்டைச் சேர்த்துள்ளதாக நான் அறியவில்லை. பின் எப்படி சயந்தனின் இடுகையில் அவர் இராஜராஜ சோழன் ஆனார் என்பது விளங்கவில்லை. பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தன்.)

முன்பு ‘சிகரம்’ தொலைக்காட்சி இங்கு ஒளிபரப்பாகியபோது, இராஜராஜனின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. தமிழகத் தொலைக்காட்சியொன்றில் அவர் செய்யும் பெயர்மாற்ற நிகழ்ச்சியே இங்கு மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்காவது இந்நிகழ்ச்சி பார்க்க நேரிட்டால் பொழுதுபோக்காக அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ரி. ராஜேந்தருக்கு இவர்தான் பெயர்மாற்றினார் என்ற தகவல் அறிந்தபோது மனிதரில் ஒரு சுவாரசியமான ஈர்ப்பு ஏற்பட்டது. (கவனத்துக்குரிய கலைஞர் ஒருவரையே மடக்கிப்போட்டாரே என்ற ஆச்சரியத்தால் இருக்கலாம்). அதன்பின் சிகரம் நின்றுபோனது. தரிசனம் வந்தது. நல்லவேளையாக இந்தக் கோமாளி நிகழ்ச்சிகள் தரிசனத்தில் ஒளிபரப்பாகவில்லை.

இனி பாமரன் பேட்டைக்கு வருவோம்.
தொடக்கத்தில் தனது துறையைப் பற்றிச் சிறு அறிமுகத்தை அளித்தார் இராஜராஜன். பெயர்தான் உலகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதென்பது அவரின் அடிப்படை வாதம். பின்னர் நடந்தது சுவாரசியமான உரையாடல்.

** இந்தியச் சிறைகளிலிருக்கும் அனைத்துக் கைதிகளையும் தன்பொறுப்பில் விடுமாறும், அவர்களை தான் பொறுப்பெடுத்து அவர்களின் பெயர்களை மாற்றி, அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றிக் காட்டுவதாகச் சொன்னார்.
சிறையிலிருந்து விடுதலை செய்து கையளிப்பதா அல்லது சிறையிலிருக்கும் நிலையிலேயே கையளிப்பதா என பாமரன் கேட்க, விடுதலை தேவையில்லை; சிறையில் வைத்தே பொறுப்பளிக்கும்படி இராஜராஜன் கேட்டுக்கொண்டார்.

** தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் பற்றி பாமரன் கேட்க, அவர்தான் உலகப்பயங்கரவாதத்தின் தலைவர் என்பதை இராஜராஜன் தெளிவாகச் சொன்னார். அவரின் பெயரை மாற்றிவிட்டால் அவர் நல்லவராகிவிடுவார், அமெரிக்காவும் உலகமும் நிம்மதியாக இருக்கலாமென்பதையும் இராஜராஜன் சுட்டிக்காட்டினார். அவரின் தந்தைக்கும் புஷ் என்ற பெயர் இருப்பதையும், அவரும் பயங்கரவாதத் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டி, பெயர்தான் இந்த மனப்பான்மைக்குக் காரணமென்ற தனது வாதத்தை இன்னும் வலுவாக்கினார்.

*சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றி பாமரன் கேட்க, அவருக்கும் அந்தப் பெயர்தான் பிரச்சினையாக இருந்ததென்றும் பெயரை மாற்றினால் அவர்கள் நல்லவர்களாக மாறி நாட்டுப்பிரச்சினை தீர்ந்துவிடுமென்றும் இராஜராஜன் கூறினார்.

** இடங்களுக்கு, நாடுகளுக்குப் பெயர்மாற்றுவது தொடர்பாக நேர்காணல் திரும்பியது.
‘பம்பாய்’ என்பதை ‘மும்பை’ என்று மாற்றியது தவறு என்றார் இராஜராஜன். அப்படி மும்பாயாக மாறியபின்புதான் அங்குக் குண்டுவெடிப்புக்கள் வன்முறைகள் என்பன தலைதூக்கின; அதற்குமுன்பு அது அமைதியான நகரமாக இருந்தது என்றார்.
இடையில் குறுக்கிட்ட பாமரன், பெயர் மாற்றத்துக்கு முன்பு நடந்த பல குண்டுவெடிப்புக்கள், அசம்பாவிதங்களைச் சொல்லிக் காட்டினார். அதற்கு, முன்பு குறைவாக இருந்தன, பெயர்மாற்றத்தின் பின்னர்தான் அவை அதிகரித்தன என்றார் இராஜராஜன். பாமரன் மேலும் சில விவரங்களைச் சொல்லப் புறப்பட்டபோது, ‘நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இதுதொடர்பாக நான் உங்களுக்கு அவற்றைத் தரமுடியும்’ என்று கூறினார். பாமரன் அத்தோடு மும்பாய் விடயத்தைக் கைவிட்டார்.

டில்லியை ‘நியு டில்லி’ என மாற்றியபின்பு அங்கு அமைதி நிலவுவதாகவும் அதற்குமுன் அங்கும் குண்டுவெடிப்புக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின என அடுத்த விடயத்தைத் தொடங்கினார் இராஜராஜன். பாமரன் அதற்கும் சில விவரங்களைக் கொடுத்து, நியுடில்லி எனப் பெயர்மாற்றிய பின்னர்தான் அதிக வன்முறைகள் நடந்தன எனச் சொன்னார். பாராளுமன்றக் கட்டடத் தொடர் மீதான தாக்குதல் உட்பட சிலவற்றைச் சொன்னார் பாமரன். வழமைபோல ‘நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளேன்’ என்ற பஞ்சாங்கத்தைப்பாடி அதிலிருந்தும் நழுவினார் இராஜராஜன்.

இலங்கைச் சிக்கல் பற்றியும் பேச்சு வந்தது. அது சிலோன் எனப் பெயர் இருந்தவரைக்கும் ஆசியாவின் பூந்தோட்டமாகத் திகழ்ந்ததாகவும், சிறிலங்கா எனப்பெயர் மாற்றியபின்புதான் அங்குப் பிரச்சினை தோன்றியதாகவும் இராஜராஜன் குறிப்பிட்டார்.
பா.: எப்போ இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது?
இரா: கொஞ்ச வருசத்துக்கு முன்னாடிதான்.
பா. அது சிலோனாக இந்தப்பவே 56 ஆம் ஆண்டுக் கலவரம் உட்பட பல பிரச்சினைகள் நடந்தன, தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்…
இரா: ஆமா, ஆனா பெயர் மாத்துறதுக்கு முன்னாடி பெரிசா பிரச்சினை இல்ல. அதுக்குப்பின்னாடிதான் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சண்டை போட ஆரம்பிச்சாங்க…

** இந்தியாவில் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை மாற்றியது இந்த இராஜராஜன் தான். அதுபற்றியும், அப்படிப் பெயர்மாற்றப்பட்டவர்களில் இருவரின் தற்போதைய நிலைபற்றியும் பாமரன் கேள்வியெழுப்பினார்.
ஒருவர், தற்போது விஜய ரி. ராஜேந்தர் எனப் பெயர்மாற்றிக்கொண்டிருப்பவர்.
பெயர் மாற்றத்தின்பின்னான அவரின் தோல்வி குறித்துக் கேட்கப்பட்டபோது,
அவர் தன்னிடம் பெயர்மாற்ற வந்தபோது அரசியல் அனாதையாகத்தான் இருந்தாரென்பதைக் குறிப்பிட்டார் இராஜராஜன். இன்னும் சிலவற்றைச் சொல்லியவர், 2011 இல் ரி.ராஜேந்தர் தமிழகத்தின் மிகமுக்கிய அரசியற்புள்ளியாக வருவார் என்பதை தான் எதிர்வுகூறியதாகவும், அது கட்டாயம் நடக்குமென்றும் உறுதியளித்தார்.

இவரால் பெயர் மாற்றப்பட்ட இன்னொருவர் பா.ஜ.க. திருநாவுக்கரசு.
“அரசராக இருந்தவரை அரசுவாக பெயர் மாற்றினீர்களே, (நான் சொல்வது சரிதானே? அல்லது மறுவளமாகவா?) அந்தப் பெயர் மாற்றத்தின்பின்னர்தான் அவரின் அரசியலில் மிகப்பெரும் வீழ்ச்சியேற்பட்டது. மத்திய அரசில் முக்கியமான அரசியற்புள்ளியாக (அமைச்சராக?) இருந்தவர், பெயர் மாற்றத்தின்பின்னர் சொந்த மண்ணிலேயே போட்டிபோட முடியாத நிலைக்கு ஆளாகவிட்டாரே” என்று பாமரன் கேட்டார்.
அதற்கு இராஜராஜன் அளித்த பதில்தான் சிறப்பானது.

தனது பெயர்மாற்றத்தின்படி அவர் மிகவுயர்ந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரின் தவறான அணுகுமுறையால்தான் இப்படியாகப் போனார். தவறான அணுகுமுறையென்ன என்பதை அவர் விளங்கப்படுத்தினார். அதாவது கட்சியைவிட்டு காங்கிரஸ் பக்கம் தாவியிருக்க வேண்டுமாம். சரியான நேரத்தில் தாவாதபடியால் அவரால் முக்கியமான புள்ளியாக வரமுடியவில்லையாம். அவர் சொந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்தார்; அதனால்தான் இப்படி ஆனார். திருநாவுக்கரசுவுக்கு அரசியல் சாணக்கியத்தனம் இல்லை. அதுதான் பிரச்சினையே ஒழிய தனது பெயர்மாற்றத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றார்.
[இவ்விடத்தில் பாமரன் முகத்தில் தெரிந்தது நையாண்டித்தனமான சிரிப்பா அல்லது அதிர்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர் ஆடிப்போய்விட்டார்.]

‘அப்போ, அவர் வெல்லும் கட்சிக்குத் தாவியிருக்க வேண்டுமென்பதையா சொல்கிறீர்கள்?’ என பாமரன் ஒரு தெளிவுக்காகக் கேட்டார்.
இராஜராஜன் அதைத்தான் தெளிவாகத் திருப்பச் சொன்னார். (அதைத்தானையா எல்லா அரசியல்வாதியும் செய்யிறான், இதுக்கெதுக்குப் பெயர் மாற்றம்?)

** தந்தை பெரியாரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவருக்குப் பெரியார் என்ற பெயர் வந்தபிறகுதான் அவர் பிலபலமானார் என்று இராஜராஜன் கூறினார். பெரியார் என்ற பெயர்பற்றி பாமரன் ஏதோ குறுக்கிட, ‘மக்கள்தான் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள், அதன்பின்னர்தான் அவர் பிரபலமானார்’ என்று இராஜராஜன் கூறினார்.
பாமரன்: அப்போ நீங்களும் பெரியார் என்ற பெயரை வைத்திருக்கலாமே? பிரபலமாவதோடு சமூகத்துக்கும் நல்லது செய்திருக்கலாம். ஏன் இராஜராஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
அதற்கு இராஜராஜன் பெரிதாகச் சிரித்தபடி பாமரனுக்கு நக்கல் தொனியில் பதிலளிக்கிறார்,
அட என்னங்க நீங்க?… இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு புரட்டுப் புரட்டப் போகிறேன் என்கிறேன், என்னைப்போய் பெரியார் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள்? ராஜராஜன் என்ற பெயர்தான் இதற்குச் சரி.”

அத்தோடு பாமரன் அடுத்த விடயத்துக்குத் தாவிவிட்டார்.;-).

** நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இராஜராஜனைப் பார்த்து,
‘முன்பு கூட்டங்களில்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள், இப்போது தொலைக்காட்சியிலும் இடையறாது வருகிறீர்களே?’ என்று கேட்டதற்கு அதைப் பெருமைபொங்க ஒப்புக்கொண்டார் இராஜராஜன். தனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேர அட்டவணையைச் சொன்னார்.

பாமரன்: முன்பெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு உணவூட்ட உம்மாண்டி வருது என்று பயங்காட்டிச் சோறூட்டுவார்கள் தாய்மார், இப்போது இராஜராஜன் ரீவியில் வரப்போறார் என்று சொல்லித்தான் உணவூட்டுகிறார்களாம், உண்மையா?
[பாமரனின் இந்தக் கேள்வி எனக்கு பண்பற்றதாகவே தோன்றியது. என்னதான் ஒரு கோமாளியை முன்னிருத்திவைத்து நேர்காணல் செய்தாலும் இப்படி அவமதிக்கக்கூடாது. அதுவும் நாமே நேர்காணலுக்கு அழைத்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாதென்பது என் கருத்து.]

ஆனால் எந்தச் சலனமுமில்லாமல் சிரித்துக்கொண்டே, ஆஆ… அப்படியா? என்று கேட்டார் இராஜராஜன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் பார்த்த நிகழ்ச்சி. இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் விடுபட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

இவ்விடுகையெழுதத்தூண்டிய சயந்தனுக்கு நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூலப்பதிவு:

வசந்தன் பக்கம்: பாமரன் பேட்டையும் இராஜராஜனும்

ஓரம்போ !!! – திரைப்படம்

அண்மையில் இப்படத்தைப் பார்த்தேன். ஏனோ தெரியவில்லை, பிடித்திருந்தது.

பொதுவாக தமிழ்ச்சினிமாவில் கடுப்பேற்றும் விடயங்கள்,
1. பாடற்காட்சிகள்
2. நகைச்சுவைக் காட்சிகள்
3. சண்டைக்காட்சிகள்.

இவற்றில் இரண்டாவதும் மூன்றாவதும் இப்படத்தில் இல்லையென்பதால் எனக்குப் பிடித்திருந்தது.
அதற்காக படத்தில் நகைச்சுவையே இல்லையென முடிவுகட்டிவிடாதீர்கள். நான் சொல்வது, தனியே நகைச்சுவைக்கென ஒருவரையோ ஒரு கும்பலையோ நடிக்கவிட்டு வரும் காட்சிகளை.
வடிவேலுவோ விவேக்கோ இன்னபிற நகைச்சுவைக்கென இருக்கும் நடிகர்களோ அவர்களின் பரிவாரங்களோ இப்படத்தில் இல்லை. கதைக்கான தேவையைவிட்டு நகைச்சுவைக்கென தனியான ஒழுக்கெதுவும் இப்படத்திலில்லை. எனவே இப்படம் பிடித்திருக்கிறது.

ஒரேயொரு சண்டைக்காட்சி வருகிறது, அதுகூட நாயகன் பத்துப்பேரைப் பந்தாடுவதாக காட்சிப்படுத்தப்படவில்லை. தனது ஆட்டோவைக் களவெடுத்துச் செல்வதைத் தடுத்துச் சண்டைபோடுகிறார் நாயகன். நாலைந்து பேருக்கு நாலைந்து அடியோடு சரி.

ஆ.. ஊ.. வென்று வாய்கிழிய வசனம்பேசும் நாயகனில்லை.
பார்வையாளனுக்கான உபதேசங்கள் இல்லை.

இப்படி சில ‘இல்லாமை’களுக்காக இப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

வழமையாக படங்களில் எரிச்சலேற்படுத்தும் பாடற்காட்சிகள் கூட இப்படத்தில் எனக்கு எரிச்சலேற்படுத்தவில்லை. அந்த ஒரேயொரு காதற்பாட்டைத் தவிர்த்திருக்கலாம். மற்றவை படத்தோடும் கதையோடும் இயல்பாகப் பொருந்துவதாகத் தோன்றுகின்றன.

படத்தில் ஆட்டோ ஓட்டப்போட்டி நடத்துகிறார்கள். படத்தின் மையக் கருவே அதுதான். படத்தில் வரும் முதலாவது போட்டியில் நாயகன் வெல்கிறார்.
அதன்பிறகு தோற்கிறார், தோற்கிறார், தோற்றுக்கொண்டேயிருக்கிறார்.
வழமையாக முதலில் நாயகன் தோற்பார், பிறகு வெல்வார். இங்கு தலைகீழாக நடக்கிறது.

நாயகனும் அவரது நண்பனும் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். கையிலிருப்பது, யாருக்கும் தெரியாமல் பொத்திவைத்திருந்த ‘சீத்தா’ எனுமொரு ஆட்டோ. யாரையும் தொடக்கூட விடுவதில்லை.
அதைப் பந்தயமாக வைத்து இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. ரஜனி ஒத்தை ரூபாயை வைத்து எல்லாக் கோடிகளையும் மீட்பது போல நாயகனும் அவனது நண்பனும் இதைவைத்தே இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடுவார்களோ என்று நினைத்துப் பயந்துகொண்டிருந்தேன். அதற்குரியமாதிரி பந்தயத்தில் நாயகன் வென்றால் இவர்கள் இழந்த அனைத்தையும் மீளத்தரவேண்டுமென்பதே பந்தயமாகவும் இருந்தது.

அட! அந்த இறுதிப்போட்டியிற்கூட நாயகனும் தோழனும் தோற்றுப்போகிறார்கள். இப்பிடியொரு அதிர்ச்சியைத் தமிழ்ச்சினிமாவில் – அதுவும் முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் – ‘ஆக்ஷன் ஹீரோ’ க்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்யா நடிக்கும் படத்தில் – எதிர்ப்பார்க்கவில்லை.

அதிஷ்டவசமாகக் கிடைத்த இரண்டு கறுப்பு முத்துக்கள் மூலம் நிறையப் பணம் கிடைத்து ஆர்யாவும் நண்பனும் வாழ்க்கையில் நிலைபெறுகிறார்கள் என்று காட்டி படத்தை முடிக்கிறார்கள். திருப்பவும் ஓட்டப்போட்டிக்கு வருவதாகக் காட்டவில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படத்தில் பிடித்த பாத்திரம்: Sun Of Gun.
மனிதர் நன்றாக நடித்திருக்கிறார்.

பிடித்த காட்சி:
பூஜாவை, தன்னுடன் படம்பார்க்க திரையரங்கு அழைத்துச் செல்வதற்காக ஆர்யா போடும் தூண்டில். பூஜாவின் பிரியாணியில் கதையைத் தொடங்கி எதிராளிக்குச் சந்தேகம் வராதமாதிரி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே திரையரங்குக்குப் போக சம்மதிக்கவைக்கும் அந்தக்காட்சியை மிகவும் இரசித்தேன்.

** இப்படத்தில் நாயகனின் நண்பனாக வரும் ‘பிகிலு’ பல படங்களில் ஆக்ரோசமான வில்லனாக நடித்திருக்கிறார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். நன்றாகச் செய்திருக்கிறார். மும்பை எக்ஸ்பிரசில் பசுபதியைப் பார்த்த ஞாபகம் வந்தது.

*** படத்தில் கதையென்று எதுவுமில்லையென்று சிலர் சொன்னார்கள். உண்மைபோற்றான் தெரிகிறது. கதையென்று தனியே எழுதிவிட முடியாது. நாலைந்து சிறுகதைகளை ஒன்றாக்கி அவற்றுள் ஏதோவொரு தொடர்பை ஏற்படுத்தி ஒரு படமெடுத்ததுபோல் இருக்கிறது. ஆனால் இரசிக்கும்படியான திரைக்கதையமைப்பு.

அவனவன் ஒரேகதையை வைத்துப் பத்துப்படம் பண்ணும்போது, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.

இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவர் பெண்ணென்று அறிகிறேன்.
வாழ்த்து.
ஜனரஞ்சகமான படங்களுள் பெண்களின் வருகை களிப்பூட்டுகிறது (கண்ணாமூச்சி ஏனடா இன்னோர் எடுத்துக்காட்டு).

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூலப்பதிவு: வசந்தன் பக்கம்: ஓரம்போ !!! – திரைப்படம்

ஜூன் 27, 2006

கூத்தழிவு

Filed under: அனுபவம், கலை, விமர்சனம் — குறிச்சொற்கள்:, , — maathahal @ 12:17 பிற்பகல்

கூத்தழிவு
சின்ன வயசில கூத்துப் பாத்திருந்தாலும் அதின்ர நிறைய விசயங்கள் பிறகுதான் எனக்கு விளங்கீச்சு. இடம் பெயர்ந்து மானிப்பாயில இருக்கேக்க, நாங்கள் ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தோம். எங்கட ஊர்ச்சனம் நிறையப்பேர் பக்கத்திலயே அகதிமுகாமொண்டில இருந்தீச்சினம். அவயள் மானிப்பாய் இந்துக் கல்லூரியில பெரியளவில கூத்து ஒண்டு போட வெளிக்கிட்டீச்சினம். பிறகென்ன எனக்குக் கொண்டாட்டம் தான். ஒவ்வொருநாள் இரவும் பாக்கப் போயிடுவன். ஆனா அது ஆரோ ஒரு புனிதரிண்ர கூத்து எண்டபடியா நான் எதிர்பாத்த அளவுக்கு அது எனக்கு விறுவிறுப்பா இருக்கேல. எண்டாலும் பாத்தன்.

அப்பதான் ஒருவிசயம் விளங்கினது. அது என்னெண்டா, கூத்து நடிக்கிற ஆக்களெல்லாரும் காசு கட்ட வேணுமாம். ஒரு பெடியன் தான் கூத்து நடிக்க வேணுமெண்டு அடம்பிடிக்க தாய்க்காறி தன்னட்டக் காசில்லயெண்டு சொல்ல அவன் இன்னும் அடம்பிடிக்க பொறுக்கேலாத அந்த விதவைத்தாய் அவனுக்கு அடியடியெண்டு அடிச்சா. பிறகு அத்தான்காரன் தான் தான் காசு கட்டுறன் எண்டு சொல்லி அந்தப் பெடியன் கூத்து நடிச்சான். இவ்வளவுக்கும் அந்தச் சனத்துக்கு இருக்க ஒழுங்கான கொட்டிலில்ல. நிவாரணத்த நம்பித்தான் பெரும்பாலான சனம். ஊரில கடற்தொழில் செய்ததால மானிப்பாயில தொழில் வாய்ப்புக்களும் குறைவு. சிலர் பருத்தித்துறை, மணற்காடு எண்டு வேற இடங்களுக்குப் போய் தொழில் செய்தினம். இந்தக் கஸ்டத்துக்கையும் காசு கட்டி கூத்துப் பழகுதுகள் சனம். அப்ப தான் எனக்கு அந்த விசயம் விளங்கீச்சு. ஏன் கூத்து நடிக்கிற ஆக்கள் காசு கட்ட வேணுமெண்டு கேட்டா, நாடகச் சோடின மேடச் செலவு, லைற் செலவு, எண்டு எல்லாம் அந்தக் காசிலதான் செய்யோணுமாம். ஆக மொத்தம் தாங்களே காசு போட்டு முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு மக்களுக்கு இலவசமாகக் கூத்துக் காட்டுறதுதான் நடக்குது.

“அப்ப எங்கட ஊரில முந்தி சங்கிலியன் கூத்து எண்டெல்லாம் போட்டனியளெல்லோ. அதுக்கும் நடிக்கிற ஆக்களேதான் காசு போட்டுச் செய்தனியளோ?”
“பின்ன? வேற ஆர் காசு தாறது. நாங்கள் தானே போட்டுச் செய்ய வேணும்?”

இதுதான் நிலை. யாழ். திருமறைக் கலாமன்றம் போன்றன ஒரு நிறுவனமாகவும் மத அனுசரணையும் இருப்பவை. அவை தப்பித்துக் கொள்ளும். ஆனால் தனிமனிதர்களின் இப்பிடியான முயற்சிகளை நினைத்து என்ன சொல்வது? ஓரு மக்கள் கலையின் நிலை இதுதான். பெரிய சங்கீத சபாக்களுக்கு (அதில அரவாசிப் பாட்டுக்கள் விளங்காது) கொட்டும் பணங்களில் சிறிதளவாவது சிந்தினாலே பரவாயில்லை. உண்மையில் கலைகளிலும் பணக்கார – ஏழை, மேற்தட்டு – அடித்தட்டு என வித்தியாசங்களுண்டு போலும்.

வன்னியில் ‘வெற்றி உறுதி’ என்று ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பின் ஒரு கலை மிக வேகமாகவும் அற்புதமாகவும் வளர்ச்சியடைந்தது. அதுதான் தெருக்கூத்து என்று நாமழைக்கும் வீதி நாடகம். மைக் செற் கூட இல்லாது எந்த இலத்திரனியற் கருவிகளும் இல்லாது ஓர் ஆர்மோனியப் பெட்டியும் மேளமடிக்க ஏதாவதொன்றும் கொண்டுவரும் இக்குழு போடும் நாடகங்கள்தான் அந்த நேரத்தில் போராட்டத்தின் முக்கிய பாத்திரம். வன்னியின் மூலை முடுக்கெல்லாம் திரியும் அக்குழு பாவிப்பது துவிற்சக்கர வண்டிகள்தான். அதிலேயே அவர்களின் வாழ்க்கை போகும். வீடு திரும்ப எத்தினை கிழமை எடுக்குமோ தெரியாது. கிடைத்த இடத்தில உண்பார்கள். பொதுமக்கள் தான் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள். எங்காவது பாடசாலையில் பொது மண்டபங்களில் படுப்பார்கள். ஓயாத அவர்களின் பணி முக்கியமானது. மக்களுக்குக் கருத்தைச் சொல்வதில் அவர்களின் பங்கு முக்கியமானது. படைக்கான ஆட்சேர்ப்பில் மிகமிக முக்கிய பங்காற்றியது அந்த வீதிநாடகங்களே. மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கும்கூட. வீதி நாடகக் காரரின் மேளச்சத்தம் கேட்டாலே அனைத்தையும் போட்டுவிட்டு ஓடிவரும் சனம்.

என்னைப் பொறுத்தவரை இந்த வீதிநாடகத்துக்கு இணையாக கருத்தூட்டத்துக்கு மிகச்சிறந்த கலை ஊடகம் என்று ஒன்றைச் சொல்ல முடியாது. சினிமா கூட இதன் பின்னேதான். அந்தக் கலைவடிவத்தையும் கலைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் கலைப் போராளிகள். அதுதான் மக்கள்கலை. தம்மை வருத்திக் கலை தந்தவர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி கலைஞர்களாகவே வாழ்ந்தவர்கள். இன்று அந்தக் கலையும் என்ன பாடோ தெரியாது. சரியான ஊட்டமில்லாவிட்டால் அதுவும் அழிந்துவிடும். இவற்றையெல்லாம் ஒரு கலையாக கலையுலக மேதாவிகள் பார்ப்பார்களோ தெரியாது. ஆராய்ச்சிகள் செய்வார்களோ தெரியாது. புத்தகங்கள் எழுதுவார்களோ தெரியாது. ஆனால் ஒரு காலத்தில் மிகமிகச் சக்தி மிக்கவையாக இருந்தவைதாம் இக்கலைகள். அவற்றின் மிகத் தீவிர ரசிகனாக இருந்த, இருக்கின்ற ஒருவன் என்ற வகையில் இவற்றின் இன்றைய நிலையிட்டுக் கவலைப்படுகிறேன்.
***************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

Nocs

Theme: Shocking Blue Green. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.