வசந்தனின் பக்கம்

ஜூன் 27, 2006

ஒன்று ரெண்டு மூன்று – சிறுவர் பாடல்

கோப்பு வகை: கவிதை, பாடல் — maathahal @ 12:34 மு.பகல்

சுந்தரவடிவேல் அவர்கள் மிருகக்காட்சி சாலை என்றொரு பாட்டை, படங்களுடன் அழகிய கோப்பாக்கி தரவிறக்க விட்டிருந்தார். அழகான சிறுவர் பாடலது.

அதே மெட்டிலமைந்த – எண்களை எண்ணும் பாடலொன்றை இப்போது நான் இங்கே இடுகின்றேன். சுந்தரவடிவேலரின் மிருகக்காட்சி சாலைப் பாடலின் மெட்டுத்தான் இந்தப்பாட்டுக்கும். எனவே அப்பாடலின் மெட்டு தெரிந்தவர்கள் அதே மெட்டில் இப்பாடலையும் பாடலாம்.
(ஆம், இப்பாடலின் மெட்டுத் தெரிந்தவர்கள் இதே மெட்டில் அப்பாடலையும் பாடி மகிழலாம்.)

இப்பாடலின் சிறப்பு, ஒன்று தொடக்கம் பத்துவரையான எண்கள் பாடலில் வரக்கூடியதாக அமைக்கப்பட்டதே.
இனி பாடல்.

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.

ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி
நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில்
ஐந்துபெரும் நாய்கலைத்து ஓடிவர நம்மை
தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்லோ.

உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக
எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே.
——————————————-

மேற்கண்ட பாடலைப் பாட வசதியாக அசை பிரித்துப் பார்த்தால் கீழ்க்கண்டவாறு வரும். அதையும் தருகிறேன்.

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணு வோமே நாங்கள்.

ரெண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி
நாலு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில்
ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடி வர நம்மை
தேடி ஆறு கல் லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ.

உருண்டு ருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக
எட்டு மணி வண்டி யிலே உல்லாச மாய் ஏறி
ஒன்ப துக்குள் வீடு சென்று உண வருந்தி நாமே
பத்து மணி அடிப்ப தற்குள் படுத் துறங்கி னோமே
————————————————–
இதை யாராவது பாடி ஒலிப்பதிவாகத் தந்தால் நன்று. செய்பவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

தாடியறுந்த வேடன் – சிறுவர் பாடல்

கோப்பு வகை: கவிதை — maathahal @ 12:32 மு.பகல்

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்கெனவே அவரின் ‘கத்தரித் தோட்டத்து வெருளி’ப் பாட்டும், ‘ஆடிப்பிறப்புக் கொழுக்கட்டை’ப் பாட்டும் மதி கந்தசாமியால் பதிவாக இடப்பட்டன. இப்போது அவரின் இன்னொரு பாடலை நானிங்கு பதிவாக இடலாமென்றிருக்கிறேன்.

சோமசுந்தரப் புலவரைத் ‘தங்கத் தாத்தா’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. தாத்தாவென்றால் தாடியில்லாமலா? இவருக்கும வெண்பஞ்சுபோல வெள்ளைத்தாடி இருந்ததாம். இவர் தாடி பற்றியும் ஒரு பாட்டெழுதியுள்ளார். அது “தாடியறுந்த வேடன்“.

தன் தாடிக்கு இப்படி நடந்தால் எப்படியிருக்குமென்று நினைத்தோ உண்மையிலேயே அவர்தாடிக்கு வந்த ஆபத்தை வைத்தோ இப்பாடலை அவர் எழுதியிருக்கக்கூடும்.

நாயை வைத்து வேட்டையாடும் ஒருவன் ஒருநாள் அணில் வேட்டைக்கு தன் நாயுடன் போகிறான். அதில் அவன் தாடி அறுந்துவிட்டது. எப்படி அறுந்ததென்று ‘தங்கத் தாத்தா’ சொல்கிறார்.

தேமா – இப்பாட்டிற் சொல்லப்படும் தேமா என்பது ஒருபூமரத்தை என்றுதான் நான் விளங்கி வைத்திருந்தேன். ஆனால் இது மாமரத்தில் ஒருவகையென்றும் சிலர் சொல்வதுண்டு. எதுசரியெனத் தெரியவில்லை.
———————————

வீமா! வீமா! ஓடி வாவா – அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி – மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி

மரத்தில் இருந்து குதித்தே – அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா – உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?

பொந்துக்குட் புகுந்தது வீமா – உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் – அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.

————————————–

என்ன நடந்ததென்று பாடலில் முழுதும் விளங்காதவர்களுக்கு:
வேடன் தன் நாயான வீமனைக் கொண்டு அணிலைத் துரத்துகிறான். அது வேறோர் பெரிய மரத்தின் பொந்துக்குட் சென்று பதுங்கிக்கொள்கிறது. உடனே வேடன், நாயை பொந்தின் இந்தப் பக்கம் நிற்கச்சொல்லிவிட்டு, தான் மரத்தின் மறுபக்கம் வந்து பொந்துக்குள் எட்டிப் பார்க்கிறான். அப்போது எதிர்ப்பக்கம் நின்ற வீமனுக்கு வேடனின் தாடி பொந்துக்குள்ளால் தெரிகிறது. அதுதான் அணிலென்று நினைத்துக் கவ்வியிழுத்தது வீமன். தாடியும் போச்சு. அணிலும் தப்பியோடி விட்டது.

* * * * *
இது நாலாம் ஆண்டில் (மூன்றாம் தரம்) படித்ததாக நினைவு. அழகான மெட்டு, அழகான பாட்டு. படத்துடன் பாடலைப் படித்தால் இன்னும் அருமையாக இருக்கும். தாத்தாவுக்கு ‘வாலைக் கிழப்பிக் கொண்டோடுதே’ என்ற சொற்றொடரில் நல்ல மயக்கம் போலிருக்கிறது எங்களைப் போலவே. ‘கத்தரி வெருளி’ப் பாட்டிலும் இதே சொற்றொடர் வரும். உண்மையில் அந்த வயதில் வாலைக்கிழப்பிக் கொண்டோடும் ஒரு பசுவை இச்சொற்றொடர் அப்படியே கண்முன் கொண்டுவரும். கன்றுக்குட்டியோ ஆட்டுக்குட்டியோ துள்ளி விளையாடுவதைப் பார்க்கும்போது அறியாமலேயே இந்த வரி வாயில் வந்துவிடும். அந்த வரிக்கு அமைந்த மெட்டும் (இரு பாட்டிலும் இந்தவரிக்கு ஒரே மெட்டுத்தான்) வசீகரித்ததால் அந்தவரியை மட்டும் அடிக்கடி பாடிக்கொள்வோம்.

நன்றி: தங்கத் தாத்தா.
——————————
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

இலவு காத்த கிளி – பாடல்

கோப்பு வகை: கவிதை — maathahal @ 12:27 மு.பகல்

ஒன்றுக்காகக் காத்திருந்து ஏமாந்துபோகும் சந்தர்ப்பத்தைக் குறிக்க இச்சொற்றொடர் பயன்படுத்தப்படுவதுண்டு. சிலர் ‘இழவு காத்த கிளி’ என்றும் எழுதுவர். ஆனாற் பெரும்பான்மையானோர் இச்சொற்றொடர் உச்சரிப்பில் ‘இளவு’ என்றே உச்சரிக்கின்றனர். இச்சொற்றொடர் உணர்த்தும் கதையைப் பார்ப்போம்.

கிளியொன்று இலவமரத்திற் குடியிருந்தது. ஒருநாள் அம்மரத்தில் அரும்பு கட்டியது. அதைப்பார்த்த கிளி, ‘இது பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பின் கனியாகும்போது இதை உண்பேன்’ என்று தனக்குட் சொல்லிக் கொண்டது. தனக்குள்ளேயே அதை உண்பது தொடர்பான ஆசையை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டது. ஒருநாள் அந்த இலவங்காய் நிறம்மாறிப் பழுக்கத் தொடங்கியது. உடனே கிளி, தன் இனசனத்துக்கெல்லாம் சொல்லி வரவழைத்து பெரிய விருந்து கொண்டாட நினைத்தது. அதன்படி அழைப்பும் அனுப்பிவிட்டுக் காத்திருந்தது. இனசனமும் வந்தது. பழத்தை உண்ணும் கனவிலிருந்த கிளிக்கு பேரிடி விழுந்தது. இலவம் பழம் வெடித்து, பஞ்சு பறந்தது. கிளி மட்டுமன்றி அதன் இனசனமும் ஏமாற்றமடைந்தது.

இந்தக் கதை வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். தெரிந்தவர்கள் மாற்றுக்கதைகளைச் சொல்லலாம்.

தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர், இலவு காத்த கிளியைப் பாட்டிற் சொல்லியிருக்கிறார். அதை இங்கே பதிவாக இடுகிறேன்.

*பொதுளி – நிறைந்து
———————————

செந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்க ளீன்று
திருமாலின் நிறம்போலப் பசியதழை *பொதுளி
நந்தாத நெடுந்தெருப்போற் கிளைகள்பல வோச்சி
நடுக்கட்டி லோரிலவ மரம்வளர்ந்த தன்றே

மஞ்சுதொட வளர்ந்துவந்த விலவமர மதனில்
மரகதமா மணிபோலப் பசுமைநிறம் வாய்ந்த
கொஞ்சுமொழிக் கிஞ்சுகவா யஞ்சுகமொன் றினதே
குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்த தன்றே

அங்கொருநா ளிலவமர மரும்புகட்டக் கண்டே
அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும்
இங்கிதனைக் கவ்வியெடுத் தென்காலே கரமாய்
ஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னெனநினைந்த தன்றே

காலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே
கடவுளடி கைதொழுது கதிரெடுக்கப் போகும்
மாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்து
வாயூறிக் கனியாக வரட்டுமென மகிழும்

எண்ணுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க
இனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே
கண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் நம்பிக்
காத்துவந்த திரவுபகல் காதலித்துக் கிளியே

வறியதொரு மகன் குதிரைப் பந்தயத்திற் காசு
வந்துவிழும் வந்துவிழு மென்று மகிழ்வாக
பிறிதுநினை வொன்றுமின்றி யாசைமிகு கிள்ளைப்
பிள்ளைமகிழ்ந் திருந்ததங்கே பேணியதைப் பார்த்தே

நன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும்
நயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள்
என்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே
எண்ணியிருந் ததுமலடு கறக்கவெண்ணு வார்போல்

பச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது
பைந்தார்ச்செம் பவளவிதழ்ப் பசுங்கிளியும் பார்த்தே
இச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம்
என்வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி


துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து
சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது
பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்
பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே

அந்தோவக் கிளியடைந்த மனவருத்தமெல்லாம்
அளவிட்டுச் சொல்லமுடி யாதுவிருந்த தாக
வந்தகிளை மிகநாணி வெறுவயிற்றி னோடு
வந்தவழி மீண்டதுவே சிந்தைபிறி தாகி

உள்ளீடு சிறிதுமில்லாப் பதர்க்குவையை நெல்லென்
றுரலிட்டுக் குத்தவெறு முமியான வாபோல்
இல்லாத பயன்விரும்பி ஏமாந்த பேரை
இலவுகாத் திட்டகிளி யென்பருல கோரே.

———————————-
நன்றி: சோமசுந்தரப் புலவர் – சிறுவர் பாடல்கள்.

 பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.