வசந்தனின் பக்கம்

மார்ச் 15, 2008

மதியநேரத்து அவலம் – தாயொருத்தியின் கதறல்

நேற்று (29.01.2008) வன்னிப் பகுதியிலுள்ள மடுப் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்து மீது சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பாடசாலைச் சிறுவர்களுட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

இத்துயரச் சம்பவத்திற் பாதிக்கப்பட்ட தாயொருத்தியின் கதறலைக் கேளுங்கள்.

தமது சொந்தக் கிராமமான பெரிய பண்டிவிரிச்சானிலிருந்து சில நாட்களுக்கு முன்னர்தான் மேரியின் குடும்பம் இடம்பெயர்ந்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சில் இத்தாயின் குழந்தையொன்று கடுமையாகக் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. வைத்தியசாலையிலேயே தங்கிநின்று அக்குழந்தையைக் கவனித்து வந்தாள் மேரி. மிகக் கடுமையான நிலையிலிருந்த குழந்தைக்குத் திங்கட்கிழமைதான் நினைவு திரும்பியது.

தாயையும், தமது சகோதரத்தையும் பார்ப்பதற்காக மேரியின் மற்றைய பிள்ளைகள் செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்குச் சென்றனர். திருமணம் முடித்துள்ள மேரியின் மூத்தமகள் தனது ஒன்றரை வயதுக் குழந்தையையும் தமது சகோதரர்களையும் வைத்தியாசலைக்கு அழைத்து வந்திருந்தாள். மதியநேரம் வைத்தியசாலையிலிருந்து மது தற்காலிக இருப்பிடங்களுக்குப் பேருந்திற் பயணித்தனர். அப்பேருந்தே படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது.

ஏற்கனவே தனது குழந்தையொன்றை வைத்தியசாலையிற் பராமதித்து வந்த மேரி, திரும்பிச் சென்ற மற்றப் பிள்ளைகளும் தாக்குலுக்குள்ளாகிய நிலையில் அதே வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதைப் பார்த்தாள். பதினெட்டு மாதமான தனது பேரப்பிள்ளைக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலையில் அத்தாய் கதறுகிறாள்.

அவளின் ஒலிவடிவச் செவ்வி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Get this widget Track details eSnips Social DNA

இதுபற்றிய தமிழ்நெற்றின் பத்தி:
Horror in the afternoon

[TamilNet, Tuesday, 29 January 2008, 22:42 GMT]
When her bunker at the Thadcha’naamaruthamadu refugee camp came under SLA shelling last Sunday, Mary Consulator sustained minor injuries and her child was critically wounded. She faced the crisis with the courage of a mother in a war-zone: she admitted her child to the Pa’l'lamadu hospital and stayed there to nurse it to health. Her child returned to a conscious state on Monday.

On Tuesday, her two grown-up daughters (one of them with an 18-month-old baby) and her two teenage sons came to the Pa’l'lamadu hospital by bus to look at their wounded sibling. The bus by which they left was attacked by the SLA’s Deep Penetration Unit that triggered a Claymore mine. They returned to the hospital, as fatally wounded victims, or didn’t return at all.

Despite her endless tears, Mary untiringly repeats her tragic tale.

A native of Periya Pan’ndivirichchaan, Mary was displaced and living in the Thadcha’naamaruthamadu refugee camp. When her child was severely wounded in the SLA shelling last Sunday, she admitted it to the Pa’l'lamadu hospital. She was taking care of her wounded child who regained consciousness only yesterday. Her eldest daughter, Rohana, with an 18-months old baby, Mary’s two sons and another daughter, came to see them at the hospital by the 7:30 a.m. bus. The five of them left the hospital and took the 1:30 bus.

தொடர்ந்து வாசிக்க…

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படம், ஒலிப்பதிவு, பத்தி: www.tamilnet.com

ஜனவரி 16, 2008

வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.

வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.

வை.கோ மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், நையாண்டிகள் வைக்கப்படுகின்றன. யாரும் என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். வை.கோ தொடர்பில் அவரவருக்குப் பல பிரச்சினைகள். ஆனால் நான் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுடைய, தன்னைத் தமிழ்த்தேசிய ஊடகமாகக் காட்டிக்கொள்ளுமோர் ஊடகம் இதை எழுதியபோது என்னுணர்வையும் பதிந்து வைக்கும் தேவையுள்ளதாக நினைக்கிறேன். உதயன் எழுதியதாலேயே அது ஈழத்தவர்களின் நிலைப்பாடாகக் கருதப்படக்கூடிய ஏதுநிலைகள் தென்படுவது ஒரு காரணமாகிறது.
போதாததற்கு, அங்கிங்குப் பொறுக்கி ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட – ‘டமில்’ தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கட்டமைத்துக்கொண்டவை, உதயனின் இவ்வாசிரியர் தலையங்கத்தைத் தமது இணையத்தளங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாலும், அவ்வூடகங்களில் வரும் அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் வலைப்பதிவுகள் சிலவற்றிலும் அத்தலையங்கம் வெளியிடப்பட்டதாலும் தனிப்பட்ட என்னுணர்வைப் பதிவாக்குவது அவசியமாகிறது; அது எவனுக்குமே தேவைப்படாதென்றபோதும்கூட.

உதயன் இப்படியொரு தலையங்கம் எழுதவேண்டிய வந்ததன் முதற்காரணம், அண்மையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய “இரங்கற் பதிவொன்றுக்கு” ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம்தானெனக் கருதமுடிகிறது. அதை முதன்மைப்படுத்தி ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கும்பலுக்குத் திட்டு விழுகிறது. முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் ஜெயலலிதாவோடு அரசியற்கூட்டணி வைத்துக்கொண்டு அவருக்கு ‘வால்பிடித்து’க்கொண்டிருக்கம் வை.கோ.வுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு அவர் “உலகத்தமிழர்களுக்கு” விளக்கம் கொடுக்க வேண்டுமென முடிகிறது.

[முதலில், உதயன் உலகத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா ஈழத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா எனக் குழப்பம் வந்தது. 'உலகத் தமிழர்கள்' அனைவருமே வை.கோ பதில்சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வியும் வந்தது. "ஈழம் என் வீடு, தெற்காசியா என் முற்றம், உலகம் என் கிராமம்" என்றெழுதிய கவிஞர் ஜெயபாலன் உதயனுக்குள் ஊடுருவிவிட்டாரா, அல்லது கனியன் பூங்குன்றன் சொன்ன 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எண்டநோக்கிலதான் உதயன் சொல்ல வருதோ - அப்பிடிச் சொன்னாலும் ஏன் தமிழரைமட்டும் சொல்லுறாங்கள் எண்டெல்லாம் நிறைய வழிகளில் இதைக் 'கட்டுடைக்க'ப் புறப்பட்டு, அதற்கெல்லாம் நேரமில்லாத காரணத்தால், தட்டச்சும்போது போகிறபோக்கில் உலகத்தமிழர்களென்று தட்டிவிட்டார்களென நினைத்துக்கொண்டேன். ஈழத்தமிழர்களை - குறிப்பாக புலிகளை அரசியற்றலைமையாக ஏற்றுக்கொண்டவர்களையே உதயன் குறிப்பிடுகிறது எனக் கருதிக்கொண்டு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.]

இங்கு எனக்கொரு குழப்பம் வந்துவிட்டது.
வை.கோ எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எப்படி அரசியல் நடத்த வேண்டுமெனச் சொல்வதற்கு ஈழத்தவர்கள் யார்? உதயன் யார்? அது முழுவதும் தமிழக அரசியலோடு தொடர்புடையது. நீங்களா போய் வை.கோ. வின் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? தமிழக அரசியலில் ஒருவரோ ஒரு கட்சியோ எடுக்கும் முடிவுக்கும் செயன்முறைக்குக்கும் கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? தமது ‘தமிழக அரசியல்’ செயற்பாடுகளுக்கெல்லாம் ஈழத்தவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கெங்கே இருக்கிறது?

சரி, இவ்வளவு கதைக்கும் நீங்கள் வை.கோ. வுக்கு இருந்த – இருக்கும் தெரிவுகளை யோசித்தீர்களா? கூட்டணி தொடர்பில் வை.கோ என்ன செய்திருக்க வேண்டுமேனக் கருதுகிறீர்கள்?
தனித்துப் போட்டியிடுவதையா? அல்லது சுந்தரமூர்த்தி போன்ற பதிவர்கள் சொன்ன இன்னொரு தெரிவான கட்சியைக் கலைத்துவிட்டு வாக்கு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதையா? ஈழத்தவர்களுக்கு வை.கோ மூலம் கிடைக்கும் நன்மையே அவர் வாக்கரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பது மட்டும்தான். வாக்கரசியலை விட்டு வெளியிலே ஈழத்துக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த ஏராளம் திராவிட, பெரியாரிய, இவற்றிலே சேராத தொண்டர்கள் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் ஒருவரின் செயற்பாட்டையும் அவரின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாதென்பதே எனது கருத்து. இதை வலுப்படுத்த, நாங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்தாடும் ஒருவரைக் கொண்டே விபரிக்கலாம்.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை, புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி, எப்படிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களென்பது அனைவருக்கும் தெரியும். மிக முக்கிய காலகட்டத்தில் செயற்கரிய உதவிகளைச் செய்து புலிகளை வளர்த்ததற்காகவும் அதன்மூலம் ஈழப்போராட்டத்திற்கு உதவியளித்ததற்காகவும் “மட்டுமே” – ஆம் அதற்காக மட்டுமே – நாம் எம்.ஜி.ஆரை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
யாராவது அவரின் தமிழக அரசியல் நிலைப்பாடு, செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டுள்ளோமா? அவரின் ஊழல்கள், மோசடிகள், அடாவடிகள், தனிப்பட்ட வாழ்க்கை என எதையாவது இதற்குள் கலந்தோமா? அப்படிக் கருதப்புறப்பட்டால் அவர் மீதான எமது நிலைப்பாடு மாறக்கூடுமல்லவா? அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி தனியே எம்மோடு தொடர்புடைய விடயத்தை மட்டும் கருத்திற்கொண்டுதான் இன்றுவரை எம்.ஜி.ஆரை அணுகிவருகிறோம்.

ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்குக்கூட எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தமுடியாத, தனிப்பட்ட வாழ்விலும்சரி, அரசியல்வாழ்விலும் சரி அப்பழுக்கற்ற வை.கோ. மீது, அவரின் அரசியற்கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக விமர்சனம் வைத்து அதற்குரிய விளக்கத்தைச் சொல்ல வேண்டுமெனக் கேட்குமளவுக்கு நீங்கள் வந்துவிட்டது எவ்வாறு?

இந்தப்பிரச்சினையில் வை.கோ. கேட்கும் எதிர்க்கேள்விகள் மிகமிக நியாயமானவை. பலசந்தர்ப்பங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது; ஆனால் எதிர்க்கேள்விகள் மூலம் எதிராளிக்கான பதிலைக் கொடுக்கலாம். இப்போது வை.கோ செய்வதும் ஒருவகையில் அப்படித்தான் தெரிகிறது. வை.கோ. வால் நிச்சயமாக தகுந்த விளக்கத்தைக் கொடுக்க முடியாத சூழ்நிலைதான் இப்போதுள்ளதாகப் படுகிறது. ஆனால் அவரின் எதிர்க்கேள்விகள் பல நியாயமானவை.

வை.கோ பாணியிலேயே நானும் உதயனைப் பார்த்துச் சில எதிர்க்கேள்விகள் கேட்க முடியும்.
ஓர் இரங்கற்பதிவெழுதியதற்காக தற்போது திடீரென தலையில் தூக்கிவைத்தாடும் தமிழக முதல்வர் இப்போதும் காங்கிரஸ் கட்சியோடுதான் கூட்டணி வைத்துள்ளார். அது பிரச்சினையில்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார். (கவனிக்க: காங்கிரஸ் தலைவர் ஒருவர் இனிப்பு வழங்கிக் கொண்டாடியது புகைப்படத்துடன் தினக்குரலில் செய்தியாக வந்துள்ளது. இச்செய்தி பிழையானதென சரியான முறையில் மறுத்தால் நான் இப்பத்தியை நீக்கிவிடுவேன்). அதைவிட, முதல்வரின் இரங்கற்பதிவுக்கு ஜெயந்தி உட்பட வேறும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவர்களோடுதான் கருணாநிதி இன்னமும் கூட்டணி வைத்துள்ளார். முதல்வரின் இரங்கற் பதிவு பற்றி ஜெயலலிதா சொன்னதற்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் சொன்னதற்குமுள்ள வித்தியாசத்தை உதயன் விளக்குமா? ஜெயலலிதாவாவது இனிப்பு வழங்கிக் கொண்டாடாமல் விட்டார்.
இப்போது என் கேள்வியென்னவென்றால், இரங்கற்பதிவைப் பழித்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் முதல்வர், உலகத்தமிழரெல்லாம் வேண்டாம், ஈழத்தமிழர்களுக்கு ( வேண்டாம் யாழ்ப்பாணத்தமிழர் – அதுவும் வேண்டாம், சங்கானை, சித்தங்கேணி, சண்டிலிப்பாய் எண்டு ஏதாவது ஓர் ஊர்த்தமிழர்களுக்கு) விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளாரென அடுத்த ஆசிரியர் தலையங்கம் எழுதுவீர்களா?

** கவனிக்க: முதல்வர் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பது தவறென்றோ, அவர் அதற்கான விளக்கத்தை ஈழத்தவர்களுக்கு அளிக்க வேண்டுமென்றோ நான் கேட்கவில்லை. உதயன் நாளிதழுக்கான ஓர் எதிர்க்கேள்வியே அது. இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை இறுதியில் ஓரிரு வரியில் எழுதுகிறேன்.

ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்ததற்கோ வால்பிடிப்பதற்கோ ஈழத்தவர்கள் கவலை கொள்ளவும் உணர்ச்சிவசப்படவும் எதுவுமில்லையென்பதே என்கருத்து. அது அந்த மாநில அரசியல் சார்ந்தது. அந்தக் கூட்டணிக்குப் போனதாலேயே வை.கோ. ஈழத்தமிழரின் போராட்டம் தொடர்பாக ஏதாவது சமரசம் செய்துகொண்டாரா, மாறுபாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரா என்பதே நாம் கனிக்க வேண்டியது. வை.கோ மாறவேயில்லை. முன்பு போலவே அதே தீவிரத்துடன்தான் இயங்குகிறார். இந்நிலையில் அவரின் அரசியற்கூட்டணி தொடர்பாக நாம் கவலைகொள்ளவோ கரிசனை கொள்ளவோ தேவையில்லை. அதையும்விட அதற்கான உரிமை எமக்கில்லை.
இதை இன்னும் உறைக்கும்படி வேறொரு முறையில் சொல்கிறேன்.

வை.கோ. வோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்த தீவிர ஈழவிடுதலை ஆதரவாளர்களோ புலிகளைப் பார்த்து,
‘நீங்கள் ஏன் சமாதானப் பேச்சுக்குப் போனீர்கள்? நீங்கள் ஏன் சண்டையைத் தொடக்கினீர்கள்? நீங்கள் ஏன் யுத்தநிறுத்தம் அறிவித்தீர்கள்? நீங்கள் ஏன் ரணிலை வெல்லவைப்பதை விட்டுவிட்டு ராஜபக்ஷவை வெல்ல வைத்தீர்கள்? நீங்கள் ஏன் நோர்வேயோடு பேசுகிறீர்கள்?’
இதற்குரிய விளக்கத்தை எமக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்”
என உளறிக்கொண்டிருந்தால் நாம் என்ன நிலையிலிருப்போம்?
அப்படித்தான் இருக்கிறது, தமிழகத்தில் எடுக்கும் அரசியற்கூட்டணி நிலைப்பாட்டுக்காக எமக்கு விளக்கம் சொல்லவேண்டுமென வை.கோ.வைப் பார்த்துக் கேட்பது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல்வரின் இரங்கற்பதிவு தொடர்பானது:
அவரின் இரங்கற்பதிவு பெரியளவில் என்னைப் பாதிக்கவில்லை. அவர் எழுதியதால் மகிழ்ந்து துள்ளவில்லை; அவர் எழுதியிராவிட்டால் அதைக்குறித்துக் கவலைப்பட்டிருக்கப் போவதுமில்லை. பிறகு நடப்பவைகளைப் பார்த்தால் அவர் அதை எழுதியிருக்காமலே விட்டிருக்கலாம் எனப்படுகிறது.

இயக்குநர் சீமான் சொன்னதைப்போல, ஈழஆதரவென்பது தமிழக வாக்கரசியலைப் பாதிக்கும் நிலைவரும்வரை இவை வெறும் சலசலப்புக்களாகவே இருக்குமென்பது எனது தனிப்பட்ட கருத்து.

சங்கரபாண்டி சொல்வதைப்போல தமிழகத்தில் ஒரு நியாயமான கருத்துக்கணிப்பை நடத்தினால் நல்லதென்று படுகிறது. பூவா தலையா போல ஒரு முடிபு வெளிப்படையாகத் தெரிந்துவிடும். நாங்களும் மேற்கொண்டு செல்லலாம். இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கும் நிலைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வை.கோ, ஈழம் தொடர்பாக வலைப்பதிவுச்சூழலில் பொதுவாகச் சில விடயங்களைப் பார்க்கலாம். வை.கோ என்றதுமே ஏதோவொரு விதத்தில் ஈழப்போராட்டத்தையும், புலிகளையும் முடிச்சுப்போட்டுத்தான் அணுகப்படுகிறது. இந்திய அரசியலில் இருக்கும் வேறெவருக்கும் இந்நிலையில்லை. அந்தளவுக்கு ஈழம் பற்றியும் புலிகள் பற்றியும் வை.கோ பேசியவை, பாடுபட்டவை ஏராளம் என்பதே உண்மை. மிக வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் என்றைக்கும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பவர் அவர்.

வை.கோ, தி.மு.க தலைமையிலான கூட்டணியை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தபோது வலைப்பதிவுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்நேரத்தில் வை.கோ.வுக்கு ஆதரவாக வந்தவை மிகமிகச் சில குரல்கள் மட்டுமே (டோண்டுவுடையதைச் சேர்த்தும்கூட;-)) அதுபோல் நடுநிலையாக விமர்சித்து வந்தவையும் மிகச்சில (சுந்தரமூர்த்தி போன்றவர்களது, அது பிரிவுக்கு முன்பே எழுதியிருந்தாலும்கூட)
ஆனால் வை.கோ.வைத் திட்டி வந்த குரல்களே அதிகம். அவற்றின் பின்னணி நோக்கங்கள் வேறுபட்ட தளங்களைக் கொண்டவை.

தீவிர கருணாநிதி ஆதரவாளர்களாக இருந்தவர்களிடமிருந்து (சிலருக்கு வை.கோ மீது பழைய கறளொன்று இருந்தது எனக்கருதுமளவுக்கு மிகத்தீவிரமாக இருந்தது;-)) வை.கோ. மீது வைக்கப்பட்ட கடுமையான தாக்குதல்கள் ஒருவகை.

கருணாநிதிக்கு எதிரான அரசியற்பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்டவர்கள், – ஏன் வை.கோ வுக்கும் எதிரான அரசியற்பார்வை கொண்டவர்கள்கூட இவ்விடத்தில் வை.கோ.வின் வெளியேற்றத்தை நையாண்டி பண்ணிக்கொண்டிருந்தார்கள் (முகமூடி, பி.கே.சிவகுமார் போன்றோரின் எழுத்துக்கள்). இது இன்னொரு வகை. இவர்களைப் பொறுத்தவரை, வை.கோ மீது தமது தாக்குதலை நடத்த இதையொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்களேயன்றி மற்றும்படி நியாயமான எந்த அரசியற்பார்வைகளும் இருந்ததாகத் தெரியவில்லை.

தனிப்பட்டளவில் வை.கோவின் ஜெயலலிதாவுடனான இணைவானது எனக்கு வருத்தத்தையளித்தாலும், இது தவிர்க்க முடியாததே என்பதோடு வை.கோ எடுத்தது சரியான முடிபே என்ற நிலையிலேயே நானிருந்தேன். (பேசியளவில் வேறும்சில ஈழத்துப்பதிவர்கள் இதேநிலைப்பாடோடு இருந்ததை அறிந்தேன்). ஆனால் நாங்கள் எல்லோரும் இந்தப்பிரச்சினையில் ஒதுங்கியிருந்தோம். கொழுவி மாத்திரம் கற்பகம் அம்மையாரோடு சண்டைபிடித்ததாக ஞாபகம்;-)

எனக்கு வருத்தமளித்த நிகழ்வு என்னவென்றால், இவர்கள் வை.கோ.வை வசைபாட ஈழத்தமிழர்களைப் பயன்படுத்திக்கொண்டமைதான். நான் மேற்குறிப்பிட்ட இருதரப்புமே வை.கோ. மீது தமது வசைமாரியைப் பொழிய பயன்படுத்திய முதல் ஆயுதம் ஈழத்தமிழர்கள்தான்.
அட! பி.கே. சிவகுமார், முகமூடி போன்றோர்கூட, ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கரிசனை கொண்டவர்கள்போல, வை.கோ. ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்துவிட்டார் எனப் புலம்பினார்கள். வை.கோ ஈழத்தவர்களின் தலையில் மிளகாய் அரைத்தவிட்டாரென ஒப்பாரி வைத்தார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஈழத்தவர்களோ வை.கோ செய்தது தவறென்று எங்குமே ஒப்பாரி வைக்கவில்லை. மாறாக அம்முடிவை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வை.கோ.வை உயிராய் நினைத்த அவரின் சீடர்கள் மாறியபோதுகூட ஈழத்தவர் மனங்களில் வை.கோ.வின் இடம் தளம்பலடையவில்லை. உதயனின் பாணியிற்சொன்னால், ஜெயலலிதாவுக்கு வால்பிடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்திற்கூட அது தளம்பலடையவில்லை. அந்நேரத்தில் வை.கோ.வைச் சரியாகப் புரிந்தவர்கள் ஈழத்தவர்கள் தானோ? ;-)

இப்படி மற்றவர்கள் ஈழத்தவரை வைத்து வை.கோ மீது விளையாடிக்கொண்டிருந்தது ஒருபுறமென்றால் இப்போது ஈழத்துச் செய்தியேடு ஒன்று விளையாட்டில் குதித்திருப்பது வருத்தமளிக்கிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதி முடித்தபோது மிகமிக நீண்டிருந்தது இடுகை. இடையிடையே வெட்டிக்கொத்திச் சுருக்கி (ஆம். இதுவே சுருக்கம்தான். வலைப்பதிவுச்சூழல் தொடர்பான நிறைய விடயங்கள் அலட்டல்களாக விளங்கியதால் வெட்டியாயிற்று.) இது வெளியிடப்படுகிறது.
மேலும் ஏதாவது சொல்ல வேண்டி வந்தால் பின்னூட்டங்களில் சொல்லலாமென நினைக்கிறேன்.

** இது உதயன் செய்தியேட்டுக்கு அனுப்பப்படவில்லை. அது எனது நோக்கமுமன்று.

** இதுவெனது தனிப்பட்ட கருத்து. இதற்குரிய எதிர்ப்புக்கள் ஈழத்தவர்களிடமிருந்தால் தெரிவிக்கவும்.

** இன்னொரு குறிப்பு:
இவ்விடுகையின் நோக்கம் உதயன் செய்தியேட்டின் நற்பெயரையோ அதன் சேவையையோ களங்கப்படுத்துவதன்று. எச்சந்தர்ப்பத்திலும் நாம் உதயனை புலம்பெயர் ஊடகங்களோடு வைத்துக் கருதுவதில்லை. அப்படி ஒப்பிடவும் முடியாது. தனக்குரிய வரலாற்றுப் பணியை உதயன் மிகுந்த தியாகங்களினூடு தொடர்ந்து செய்து வருகிறது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இயங்கும் இச்செய்தியேடு, இராணுவத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் தொடர் அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இயங்கிவருகிறது. தனது பணியாளர்களை ஆக்கிரமிப்பாளரின் துப்பாக்கிக் குண்டுக்குக் காவு கொடுத்துள்ளது. அதன்பின்னும் அது வீச்சோடு இயங்கிவருகிறது. விடுதலைப்போராட்டப் பயணத்தில் உதயன் செய்தியேட்டுக்கான பங்களிப்பை நாம் அறிவோம்.
ஆனால் இக்குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் நாம் கடுமையான முறையில் உதயனோடு முரண்படுகிறோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூலப்பதிவு: வசந்தன் பக்கம்: வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

ஜூன் 27, 2006

களவும் கற்று மற.

Filed under: அனுபவம், நிகழ்வுகள் — maathahal @ 12:07 பிற்பகல்

களவும் கற்று மற.

நான் கொழும்பில நிக்கேக்க அக்கம்பக்கத்தில தொடர்ச்சியாக் களவு நடந்தீச்சு. அதுவும் கட்டிவச்சு வெருட்டி களவெடுத்தாங்களாம். அடுத்தடுத்ததா ரெண்டு மூண்டு வீட்ட ஒரே இரவில களவு அல்லது கொள்ளை நடக்கும். ஆனா ஆரும் பிடிபட்ட மாதிரித் தெரியேல. ஆனா களவு போனதெண்டு சொல்லிற கணக்கு எக்கச்சக்கமா இருக்கும். அந்த நாக்களில எங்கட சொந்தக்காரருக்கு ஒழுங்கா நித்திரயில்ல. வந்தா என்ன செய்யிறது? கத்தியக்காட்டினா என்ன செய்யிறது? எண்டு ஒரே தலையிடி. அதுக்க நானொரு இளந்தாரி இருக்கிறன் எண்டு அவைக்கு ஒரு தெம்பு இருக்கெண்டு வேற ஒரு வீட்டுக்காரருக்குச் சொல்லேக்க, அத தற்செயலாக் கேட்ட நான் அழுறதா சிரிக்கிறதா எண்டு தெரியாமல் முழிச்சன். நல்ல காலம் நான் நிக்கேக்க கள்ளன்கள் வந்து, நான் என்ர வீரதீர பிரதாபங்களக் காட்ட வேண்டிய சந்தர்ப்பம் வரேல. எங்க பாத்தாலும் களவும் கொள்ளையுமா கொஞ்ச நாள் இருந்தீச்சு. ஆனா பத்திரிகைகளில அந்தச் செய்திகள் வராது. எங்கயேன் வங்கிக்கொள்ளை நடந்தா வரும்போல. ஆனா கொழும்பு வாசிகளுக்கே அந்தக் களவுகள் பெரிய விசயமாத் தெரியேல. அவயளுக்குப் பழகீட்டுதாம். ஆனா எனக்கு அந்த விசயங்கள் பெரிசாத்தான் இருந்தீச்சு.

வன்னியில களவுகள் எண்டது இப்பிடி பெருந்தொகையில நடக்கிறேல. இப்பிடி பெறுமதியா களவெடுக்க சனத்திட்ட சாமான் சக்கட்டும் இல்லதான். வன்னியில களவு போறதெண்டாலும் சைக்கிள்தான் களவுபோகும். ஒரு சைக்கிள் களவு போனாலே பட்டி தொட்டியெல்லாம் அதுதான் கதையா இருக்கும். காவல்துறையில முறைப்பாட்டுக்குப் போற விசயங்களில அரவாசிக்கு மேல சைக்கிள் பிரச்சினையாத் தான் இருக்கும். ஆனாலும் பெரும்பாலும் தெண்டிச்சுப் பிடிச்சிடுவினம். எங்க போறது? சுத்திச் சுத்தி அதுக்க தானே நிக்க வேணும். அதுக்க தானே சைக்கிள ஓடித்திரிய வேணும். இனி எஙகட சனத்தப் பற்றித் தெரியாதே? ஒருத்தனிட்ட ஏதும் வித்தியாசமா இருந்தா போட்டுக் குடுத்துவிடுங்கள். அதோட அங்கயிருக்கிற புலனாய்வு வலைப்பின்னல் அங்க இருந்தாக்களுக்குத்தான் தெரியும். ஒரு சைக்கிள் கடையிலபோய் “என்ர பூட்டுத் திறப்பு துலைஞ்சு போச்சு. இத ஒருக்கா உடைச்சுத்தாங்கோ” எண்டு ஒருத்தரும் போய்க் கேக்க ஏலாது. அப்பிடியெண்டா முதலில அது உங்கட சைக்கிள்தான் எண்டத உறுதிப்படுத்தோணும்.

அங்க தணிக்கை செய்யப்படாத படங்கள் போடத்தடை. ஆரேன் களவாக் கொப்பியெடுத்துப் போட்டா அதுகளப் பிடிச்சு தண்டப்பணம் அறவிடுறது வழக்கம். ஆனா திரைப்பட வெளியீட்டுப் பிரிவு எங்கயெங்க அப்பிடி படமோடுதெண்ட தகவல எடுக்க பெரிசாக் கஸ்டப்படுறேல. தகவல் தானா வரும். நேர போய் கையும் மெய்யுமாப் பிடிக்கிறதுதான் அவயின்ர வேல. ஒருக்கா பிடிபட்டவன் குறைஞ்சது 3 பேரையாவது பிடிச்சுக் குடுக்காம ஓய மாட்டான்.

சரி. விசயத்துக்கு வாறன். வன்னியில களவுப்பயத்தில நித்திர முளிச்சு இருந்ததா ஞாபகமில்ல. கள்ளனுக்குப் பயந்து பயந்து சீவிச்சதா ஞாபகமில்ல. உண்மையில அந்த விசயத்தில ஏனைய இடங்களவிட வன்னி மேல்தான். அங்க இந்த சைக்கிள் தருடிறதில நடந்த சுவாரசியமான சம்பவம் ஒண்டச் சொல்லப்போறன்.

புதுக்குடியிருப்பில சைக்கிள் களவு விசயத்தில ஒருத்தர் தொடர்ச்சியாப் பிடிபட்டுக் கொண்டிருந்தார். பிடிபடுறதும் தண்டனை செய்யுறதும் பிறகு பிடிபடுறதும் தணடனை செய்யிறதும் எண்டு இவரிண்ட பாடு போகுது. அவர் எடுத்த எல்லாச் சைக்கிளும் பூட்டின நிலையிலதான் எடுத்திருக்கிறார். அது ஒரு பெரிய விசயம். ஏனெண்டா பூட்டின சைக்கிளொண்ட ஒருத்தர் தூக்கிக் கொண்டு போறது வன்னியில சரியான ரிஸ்க். எங்கயேன் சைக்கிள் களவு போனா காவல்துறை முதலில நேரா இவரிட்டதான் போகும். சிலதுகள் இவர் எடுக்கேல எண்டு விடுதலை கிடைக்கும். ஒரு கட்டத்தில வெறுத்துப்போய், “ஏன்ராப்பா திருப்பித் திருப்பி இப்பிடிச் செய்யிறாய்?” எண்டு கேட்டிருக்கிறாங்கள். அவர் சொன்னாராம்,

“அதண்ண, அதுகளக் கண்ட உடன எடுக்க வேணும் போல கிடக்கு.”

பாரதிராஜாவின்ர கண்களால் கைதுசெய் பாத்த போது உண்மை உறைத்தது.
“சரி, பூட்டின சைக்கிள என்னெண்டு எடுக்கிறனி? அதையாவது சொல்லன்” எண்டு கேக்க முதலில பிகு பண்ணிப்போட்டுச் சொன்னாராம் அந்த தொழில் ரகசியத்த.

சைக்கிள் றிம்மில கவ்விப்பிடிக்கக் கூடியமாதிரி ஒரு கவ்வி ஒண்டச் செய்து, அதில வீல் ஒண்டப் பூட்டி (பெரிய சூட்கேசுகளுக்கு இருக்கிறமாதிரி) நிரந்தரமா வச்சிருக்கிறது. பிறகு இரவு நேரத்தில போய் பூட்டி நிக்கிற சைக்கிள் பின் சில்லின்ர றிம்மில அதப் பூட்டிப் போட்டு சைக்கிள உருட்டிக்கொண்டு போறதாம். சைக்கிள் சில்லு உருளாது. ஆனா இந்த குட்டிவீல் உருளும். இரவில சைக்கிள உருட்டிக்கொண்டு போறவன ஏன் சனம் சந்தேகப்படப்போகுது? பகலிலயெண்டா அந்தக் குட்டிவீல் அற்றயேன் கண்ணில குத்தியிருக்கும்.

உங்களுக்கு இந்தத் திட்டம் விளங்கீட்டுதோ? வலைப்பதியிற சைக்கிள் திருடர்கள் இதைச் செய்து பாக்கலாம். எதுக்கும் அந்த மனுசனிட்ட ‘கொப்பிறைட்’ எடுத்துச் செய்யிறது நல்லம்.
களவும் கற்று மற.

பின்னூட்டங்களுடனும் ஒலிப்பதிவுடனும் கூடிய மூலப்பதிவு

மெல்பேர்ண் மெல்லிசை நிகழ்ச்சி

Filed under: அனுபவம், நிகழ்வுகள் — maathahal @ 12:48 மு.பகல்

நேற்று முன்தினம் மாலை மெல்பேணில் தமிழர் புனர்வாழ்வுக்கழக நிதிக்காக மெல்லிசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. மாலை 6.00 மணிக்குத் தொடங்குமென அறிவிப்பு இருந்தபோதிலும், ‘எங்கட சனத்தின்ர நகழ்ச்சி தானே’ என்ற நினைப்பில் சரியான நேரத்துக்குச் செல்ல முயலவில்லை. நான் மண்டபத்தை அடையும்போது 6.15.
உள்ளே “அந்தி மழை பொழிகிறது” பாட்டுப் போய்க்கொண்டிருந்தது. துலைவார் சரியா 6.00 க்கு ஒரு நிமிசமும் பிந்தாமல் நிகழ்ச்சியத் தொடங்கிப்போட்டாங்கள்.

இசைக்குழு ஜோய் மகேஸ்வரனது என்று ஏற்கெனவே தெரியும். ‘ஜோய்’ யாரென்று கேட்கிறீர்களா? விடுதலைப்புலிகளின் பொருளாதார ஆலோசகராக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளிற் கலந்து கொண்டவர். சுனாமி மீள் கட்டமைப்பு மற்றும் ஏனைய ஆலோசனைச் சபைகளிலும் கலந்து கொண்டவர். இன்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளராயிருப்பவர். இவர் அந்த இசைக்குழுவை நெறிப்படுத்துபவர் என்றே நினைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரே பாடகராகவும் வாத்தியக் கலைஞராகவும் இருப்பார் என்று நினைக்கவில்லை. ஒருநேரம் தபேலாவுடனும் பலநேரம் கிற்றாருடனும் இருந்தார். அவர் பாடிய சுனாமிப் பாடல் நெஞ்சை உருக்கியது. இசையும் வரிகளும் அற்புதம் என்றாலும் ஜோய் மகேஸ்வரனின் குரல் தான் உண்மையான உணர்வைத் தந்தது.

பாடப்பட்ட பாடல்கள் மனத்தைத் தொட்டன. பாடல்தெரிவுகள் என் ரசனைக்கு ஏற்றாற்போல் இருந்தன.
“அந்தி மழை பொழிகிறது”
“பொத்தி வச்ச மல்லிகை மொட்டு”
“கூட்டத்திலே கோயில் புறா”
“குமரிப்பெண்ணில் உள்ளத்திலே”
“பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா”
“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே… சில்லென்ற காற்றே”
“பொன்மகள் வந்தால் பொருள்கோடி தந்தாள்”

மனதை வருடும் இடைக்கால மற்றும் பழைய பாடல்கள். இந்தப் பாடற்றெரிவுக்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது ரசிகர்களைத்தான். வந்திருந்தவர்களில் அந்தப் பாடல்களுக்குரிய ரசிகத் தலைமுறைதான் அதிகமானது. இளையவர்களில் மொழி தெரிந்து ரசிக்கத்தக்கவர்கள் எத்தனை பேரென்று தெரியாது. அவர்களின் ரசனைக்காகவும் சில பாடல்கள் பாடப்பட்டன. குறிப்பாக இரண்டு இந்திப்பாடல்கள். சும்மா சொல்லக்கூடாது இந்திப்பாடல்களை நன்றாகவே பாடினார்கள். குறிப்பிட்ட திசையிலிருந்து பலமான வரவேற்புக் கிடைத்தது. (“ஈழத்தில் இந்தியெதிர்ப்பு இல்லாமையால் தான் இப்படி இந்திப்பாடல் பாடவும் அதைக்கேட்டு ரசிக்கவும் முடிகிறது, குறைந்த பட்சம் ஒஸ்ரேலியாவில் இந்தியெதிர்ப்பு இல்லை” என்றுகூட பின்னூட்டம் வந்தாலும் ஆச்சரியப்படப்போவதில்லை)

இதற்கிடையில் சில கோமாளிப்பாடல்களும் (என்னைப் பொறுத்தவரை) பாடப்பட்டன. போய்ஸ் படத்திலிருந்து ஒரு பாட்டு. அதற்குள் ஹரினியும் சித்தார்த்தும் அந்தரத்தில் தொங்கும் காட்சிகளும் போட்டுக்காட்டினார்கள். பாடலின் இறுதியில் ஓ..ஓ..ஓ..ஓ.. என்று ஊளையிடவும் வேண்டும். ஆனால் பலர் ரசித்தார்கள் என்பதையும் சொல்லத்தான் வேணும். (பாடல்கள் மூலத்திலிருந்து வேறுபடவில்லை. என் எரிச்சல் மூலப்பாடல்கள் மீதே இருக்கிறது.) பாடப்பட்ட புதியபாடல்களில் நான் ரசித்தது, சங்கமம் படத்தில் வரும்,
“ஒரு முறை கிள்ளிப் பார்த்தேன், முதல் முறை கண்ணில் வேர்த்தேன்”

ஆறிவிப்பாளருக்கு வைரமுத்துவின் நினைப்பும் எடுப்பும் இருக்கிறது போலுள்ளது. அதே வகிடெடுத்த தலைமுடி, வெள்ளையுடை, கவிதையாகவே அறிவிப்புச் செய்கிறாராம். இறுதியில் அவை தான் எழுதியவையல்ல, சிறிஸ்கந்தராசா தான் எழுதினார் என்பதையும் சொன்னார். அறிவிப்பாளினி ஜோய் மகேஸ்வரனின் மனைவி. அறிவிப்பு கலகலப்பாக இருந்தாலும் அதிகமாகப் போய்விட்டது போன்ற உணர்வு வந்தது.

நடனப்பள்ளியை இயக்கிவரும் பெண்மணியொருவரை மேடையிலழைத்துக் கௌரவித்தார்கள். வழமையாக ஒவ்வொரு மேடையிலும் கலைத்துறை சார்ந்த ஒருவரைக் கௌரவம் செய்வது வழமையாம்.

இடைவேளைக்குப் பின் நிகழ்ச்சியில் பாடல்களுக்கு விசிலடிப்பதும் கூக்குரலிடுவதும் சேரத்தொடங்கியது. குறிப்பாகப் பல்கணியில் இருந்த கூட்டத்திடமிருந்து தான் இந்த வரவேற்பு வந்தது. அபிமான ‘வலைப்பதிவாள’ரும் அந்த விசிலடிச்சான் கூட்டத்தின் நாயகமாக இருந்திருப்பார் என்பதை நான் சொல்லத்தேவையில்லை.

ரசிகர்களிடமிருந்து அதிக வரவேற்புக் கிடைத்த பாடல், இதயக்கோவில் படத்தின் “கூட்டத்திலே கோயில் புறா”. ஆனால் நான் அதிகம் விரும்பி ரசித்தது, “பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா”.

நிகழ்ச்சியின் இறுதியில் சில பாடல்களைக் கலந்துகட்டி தந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சரணம் பாடினர். ஜோய் மகேஸ்வரன்,
அஞ்சுக்குள்ள நால வையி,
ஆழம் பாத்துக் கால வையி
.”
என்ற ‘அருமையான’ தத்துவப்பாடலின் ஒரு சரணத்தைப் பாடிச் சென்றார். என்னைக் கேட்டால் அந்த இறுதிச்சாம்பாறு தேவையில்லாத ஒன்று என்றே சொல்வேன். எனக்கு எரிச்சலைத் தந்ததும் அதுதான். ஆனால் வந்திருந்த ரசிகர்களில் நான் ஒருவன் மட்டுமே.

எப்படியிருந்தாலும் மனதுக்கு நிறைவான, இனிமையான ஓர் இரவு நிகழ்ச்சியென்பதில் ஐயமில்லை. பொதுவாக எனக்கு இசை நிகழ்ச்சிகள் பற்றியிருந்த அபிப்பிராயம் ஓரளவு மாறியிருந்தது.

படங்கள் எதுவும் கைவசமில்லையென்பதால் போடமுடியவில்லை. மன்னிக்கவும். சயந்தனின் பதிவில் படங்களுடன் போட்டுள்ளார்.

*******************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

ஜூன் 21, 2006

சன் ரீவி கவியரங்கம்.

Filed under: நிகழ்வுகள், விமர்சனம் — maathahal @ 12:46 பிற்பகல்

கலைஞர் தலைமையில் சித்திரைத் திருநாட் கவியரங்கமொன்று சன்-ரீவியில் ஒளிபரப்பானதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்.

ஏனைய நான்கு கவிஞர்கள்,
பா.விஜய், அப்துல் ரகுமான், வைரமுத்து, வாலி.
இவர்களில் வாலியிருந்தது எனக்கு முதலில் ஆச்சரியம்.
வாலியைத் தவிர மீதி மூவரும் கலைஞர் பக்தர்கள். வாலியோ மேடையில் எல்லார்க்கும் பக்தர்.

82 ஐ நெருங்கிக்கொண்டிருக்கும் கலைஞர். திடகாத்திரமாக இருப்பதாகவே பட்டது. கலைஞரின் தலைமைத் தொகுதி முடிந்ததும் முதலில் வந்தவர் பா.விஜய். கலைஞர் கையால் பட்டம் வாங்கியவர். அவர் வாய்திறந்து சரியாக பன்னிரண்டு நிமிடங்களின்பின் ‘தலைப்புக்கு வருகிறேன்’ என்று அறிவித்தார். அதுவரை அந்தப்பன்னிரண்டு நிமிடங்களும் கூட்டம் கைதட்டிக்கொண்டேயிருந்தது.
“சிறுவயதில்,
பிரம்மாஸ்திரத்தைத் தொலைத்ததுக்கே
கலங்காதவர் நீங்கள்.
பம்பரத்தைத் தொலைத்ததுக்கா
கலங்கப் போகிறீர்கள்?”
என்பது போன்றுதான் அந்தப்பன்னிரண்டு நிமிடங்களும் கழிந்தன.
ஆனாலும் தலைப்புக்குள் வந்தபின் அவர் மரபிலே பாடிய சிலவரிகள் பிடித்திருந்தன.

அடுத்து வந்தவர் கவிக்கோ.
கலைஞர் ஆலாபனை முடித்தபின் அவர் சொன்ன வரிகளில் தொன்னூறு வீதமானவை ஏற்கனவே கவியரங்கங்களில் அவராற் சொல்லப்பட்ட அதே வரிகள். நான் பார்த்தவரையில் உலகத்தமிழர் பேரமைப்புக் கவியரங்கத்துக்காக அவர் பாவித்த அதே கவிதையட்டைகளைத் தூக்கிக்கொண்டுவந்திருந்தார் போலிருந்தது. மிகுதி பத்துவீதம்கூட
வை.கோவையும் ஜெயலலிதாவையும் பற்றித்தான் இருந்தன.
எனக்கு மிகிமிக ஏமாற்றமளித்தவர் கவிக்கோதான். அவருக்கு வந்த தலைப்பு “தமிழர் விழிப்பு”. தமிழ் அல்லது தமிழர் என்று ஒரு சொல் வந்துவிட்டால் கவிக்கோ கவியரங்கத்துக்கென்று எதுவுமே ஆயத்தப்படுத்தத் தேவையில்லை. ஏற்கனவே கிடக்கும் அட்டைகளில் சிலவற்றைத் தூக்கியந்தாற் போதும். (ஆனாலும் உலகத்தமிழர் பேரமைப்புக் கவியரங்கத்தில் இருந்த கைநடுக்கம் இப்போது இல்லைப்போலத் தெரிகிறது)

அடுத்து வந்தவர் கவிப்பேரரசு. ஆச்சரியமாக, கலைஞரைத் வாழ்த்த மற்றவர்களை விடக் குறைவான நேரமெடுத்துக் கொண்டார். அதுமட்டுமன்றி தலைப்புக்குள் கவிதை வடித்த ஒரேயொருவர் அவர்மட்டும்தான். கிடைத்த தலைப்பு, “இளைஞர் விழிப்பு”. கவியரசருக்குக் கேட்க வேண்டுமா? மனிதர் பொழிந்து தள்ளிவிட்டார்.

கடைசியாக வந்தவர், வாலி. அறிமுகப்படுத்தும் போது கலைஞர், “மூட நம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவைப் பரப்பிக் கவிதை பொழிக” என்று வாலியை அழைத்தார்.
வாலியின் கவியரங்கக் கவிதைகளின் எதுகை, மோனை, சிலேடைகளுக்கு நான் எப்போதும் இரசிகன். வாலிக்குக் கிடைத்தது “கலையின் விழிப்பு”
கலைஞர் வாழ்த்து எது, கலைவிழிப்பு எது என்று பிரித்தறிய முடியாவண்ணம் தொடக்கம் முதல் முடிவுவரை வாலியின் கவிதையிருந்தது.
சிக்கிச் சிதறிய சினிமாவைக் கலைஞர்தான் வந்து காத்தார், நடுத்தெருவில் முக்கி முனகிய (இவை வாலியின் சொற்கள்) மூன்று தமிழையும் கலைஞர் வந்துதான் கரையேற்றினார், இன்னும் என்னென்னவெல்லாமோ செய்தார் என்று வாலியின் கவிதை விரிந்தது.

“சேது சமுத்திரத்துக்கு நீ கண்ட தீர்வைக்கோ…
உன் தீர்க்க தரிசனப் பார்வைக்கோ….”
இன்னும் சில ‘வைக்கோ’ என்று முடியும்படியான சில வரிகளின்பின்
“ஈடாகுமா ஓர் வைக்கோ?”
என்றார். கூட்டம் துள்ளிக் குதித்தது. மீண்டும் படிக்கும்படி வந்த கூச்சல்களுக்குள் வாலி மீண்டும் அவ்வரிகளைப் படித்தார்.
“பம்பரம் விட்ட பயல்களையெல்லாம்” என்று தொடங்கி ஏதோ சொன்னார்.
“மேயில் உனக்குச் சிம்மாசனம்”
என்றார். தொடர்ந்து,
“அம்மாசனத்தை வெல்லுமோ அம்மா சனம்?” என்றார்.
கூட்டம் அதிகம் இரசித்ததும் வாலியின் வரிகளைத்தான் என்று நினைக்கிறேன்.

முடிவில் கலைஞரின் வசனங்கள்.
“எனது எழுபது வருட அரசியலுக்கு மதிப்புத்தர வேண்டாம்.
தமிழுக்காகத் தண்டவாளத்தில் தலைவைத்ததுக்கு மதிப்புத்தர வேண்டாம்.
என் இலக்கியப் பணிகளுக்கு மதிப்புத்தர வேண்டாம்.”
என்று தொடர்ந்து பலசாதனைகளைச் சொல்லி அவற்றுக்கு மதிப்புத்தர வேண்டாம்” என்றுவி்ட்டு இறுதியில்
“இந்த வயதில் என் உழைப்புக்கு மதிப்புத்தரக் கூடாதா?
என் வயதுக்கு மதிப்புத் தரக்கூடதா?”
என்று கேட்டு முடித்தார்.
மக்களை உருக்கும் பச்சாத்தாப வசனங்களோடு கவியரங்கம் இனிதே நிறைவுற்றது.
**********************
வைரமுத்துவின் கவிதையைவிடுத்து மற்றவர்களின் கவிதைகளைக் கேட்கும்போது எனக்கு வந்த கேள்வி இதுதான்.
“பேசாமல் ‘கலைஞர் புகழ்மாலை’ என்றே நிகழ்ச்சியை வைத்திருக்கலாம். எதற்கு ‘தமிழர் விழிப்பு’, ‘தமிழ் விழிப்பு’, ‘கலை விழிப்பு’ என்று வைப்பான்?”
*********************
இதற்கு அடுத்ததாக நான் பார்த்த, மாணிக்க விநாயம் தலைமையில் கானா உலகநாதன், புஸ்பவனம் குப்புசாமித் தம்பதிகள் உட்பட இன்னும் சிலர் கலந்து கலக்கிய பாட்டுக் கச்சேரியை மிகவும் இரசித்தேன்.

*************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

Theme: Shocking Blue Green. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.