வசந்தனின் பக்கம்

மார்ச் 15, 2008

மதியநேரத்து அவலம் – தாயொருத்தியின் கதறல்

கோப்பு வகை: அனுபவம், அரசியல், ஈழம், நிகழ்வுகள், போராட்டம் — maathahal @ 3:07 மு.பகல்

நேற்று (29.01.2008) வன்னிப் பகுதியிலுள்ள மடுப் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்து மீது சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பாடசாலைச் சிறுவர்களுட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

இத்துயரச் சம்பவத்திற் பாதிக்கப்பட்ட தாயொருத்தியின் கதறலைக் கேளுங்கள்.

தமது சொந்தக் கிராமமான பெரிய பண்டிவிரிச்சானிலிருந்து சில நாட்களுக்கு முன்னர்தான் மேரியின் குடும்பம் இடம்பெயர்ந்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சில் இத்தாயின் குழந்தையொன்று கடுமையாகக் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. வைத்தியசாலையிலேயே தங்கிநின்று அக்குழந்தையைக் கவனித்து வந்தாள் மேரி. மிகக் கடுமையான நிலையிலிருந்த குழந்தைக்குத் திங்கட்கிழமைதான் நினைவு திரும்பியது.

தாயையும், தமது சகோதரத்தையும் பார்ப்பதற்காக மேரியின் மற்றைய பிள்ளைகள் செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்குச் சென்றனர். திருமணம் முடித்துள்ள மேரியின் மூத்தமகள் தனது ஒன்றரை வயதுக் குழந்தையையும் தமது சகோதரர்களையும் வைத்தியாசலைக்கு அழைத்து வந்திருந்தாள். மதியநேரம் வைத்தியசாலையிலிருந்து மது தற்காலிக இருப்பிடங்களுக்குப் பேருந்திற் பயணித்தனர். அப்பேருந்தே படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது.

ஏற்கனவே தனது குழந்தையொன்றை வைத்தியசாலையிற் பராமதித்து வந்த மேரி, திரும்பிச் சென்ற மற்றப் பிள்ளைகளும் தாக்குலுக்குள்ளாகிய நிலையில் அதே வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதைப் பார்த்தாள். பதினெட்டு மாதமான தனது பேரப்பிள்ளைக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலையில் அத்தாய் கதறுகிறாள்.

அவளின் ஒலிவடிவச் செவ்வி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Get this widget Track details eSnips Social DNA

இதுபற்றிய தமிழ்நெற்றின் பத்தி:
Horror in the afternoon

[TamilNet, Tuesday, 29 January 2008, 22:42 GMT]
When her bunker at the Thadcha’naamaruthamadu refugee camp came under SLA shelling last Sunday, Mary Consulator sustained minor injuries and her child was critically wounded. She faced the crisis with the courage of a mother in a war-zone: she admitted her child to the Pa’l'lamadu hospital and stayed there to nurse it to health. Her child returned to a conscious state on Monday.

On Tuesday, her two grown-up daughters (one of them with an 18-month-old baby) and her two teenage sons came to the Pa’l'lamadu hospital by bus to look at their wounded sibling. The bus by which they left was attacked by the SLA’s Deep Penetration Unit that triggered a Claymore mine. They returned to the hospital, as fatally wounded victims, or didn’t return at all.

Despite her endless tears, Mary untiringly repeats her tragic tale.

A native of Periya Pan’ndivirichchaan, Mary was displaced and living in the Thadcha’naamaruthamadu refugee camp. When her child was severely wounded in the SLA shelling last Sunday, she admitted it to the Pa’l'lamadu hospital. She was taking care of her wounded child who regained consciousness only yesterday. Her eldest daughter, Rohana, with an 18-months old baby, Mary’s two sons and another daughter, came to see them at the hospital by the 7:30 a.m. bus. The five of them left the hospital and took the 1:30 bus.

தொடர்ந்து வாசிக்க…

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படம், ஒலிப்பதிவு, பத்தி: www.tamilnet.com

ஜனவரி 16, 2008

வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.

வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.

வை.கோ மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், நையாண்டிகள் வைக்கப்படுகின்றன. யாரும் என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். வை.கோ தொடர்பில் அவரவருக்குப் பல பிரச்சினைகள். ஆனால் நான் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுடைய, தன்னைத் தமிழ்த்தேசிய ஊடகமாகக் காட்டிக்கொள்ளுமோர் ஊடகம் இதை எழுதியபோது என்னுணர்வையும் பதிந்து வைக்கும் தேவையுள்ளதாக நினைக்கிறேன். உதயன் எழுதியதாலேயே அது ஈழத்தவர்களின் நிலைப்பாடாகக் கருதப்படக்கூடிய ஏதுநிலைகள் தென்படுவது ஒரு காரணமாகிறது.
போதாததற்கு, அங்கிங்குப் பொறுக்கி ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட – ‘டமில்’ தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கட்டமைத்துக்கொண்டவை, உதயனின் இவ்வாசிரியர் தலையங்கத்தைத் தமது இணையத்தளங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாலும், அவ்வூடகங்களில் வரும் அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் வலைப்பதிவுகள் சிலவற்றிலும் அத்தலையங்கம் வெளியிடப்பட்டதாலும் தனிப்பட்ட என்னுணர்வைப் பதிவாக்குவது அவசியமாகிறது; அது எவனுக்குமே தேவைப்படாதென்றபோதும்கூட.

உதயன் இப்படியொரு தலையங்கம் எழுதவேண்டிய வந்ததன் முதற்காரணம், அண்மையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய “இரங்கற் பதிவொன்றுக்கு” ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம்தானெனக் கருதமுடிகிறது. அதை முதன்மைப்படுத்தி ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கும்பலுக்குத் திட்டு விழுகிறது. முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் ஜெயலலிதாவோடு அரசியற்கூட்டணி வைத்துக்கொண்டு அவருக்கு ‘வால்பிடித்து’க்கொண்டிருக்கம் வை.கோ.வுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு அவர் “உலகத்தமிழர்களுக்கு” விளக்கம் கொடுக்க வேண்டுமென முடிகிறது.

[முதலில், உதயன் உலகத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா ஈழத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா எனக் குழப்பம் வந்தது. 'உலகத் தமிழர்கள்' அனைவருமே வை.கோ பதில்சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வியும் வந்தது. "ஈழம் என் வீடு, தெற்காசியா என் முற்றம், உலகம் என் கிராமம்" என்றெழுதிய கவிஞர் ஜெயபாலன் உதயனுக்குள் ஊடுருவிவிட்டாரா, அல்லது கனியன் பூங்குன்றன் சொன்ன 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எண்டநோக்கிலதான் உதயன் சொல்ல வருதோ - அப்பிடிச் சொன்னாலும் ஏன் தமிழரைமட்டும் சொல்லுறாங்கள் எண்டெல்லாம் நிறைய வழிகளில் இதைக் 'கட்டுடைக்க'ப் புறப்பட்டு, அதற்கெல்லாம் நேரமில்லாத காரணத்தால், தட்டச்சும்போது போகிறபோக்கில் உலகத்தமிழர்களென்று தட்டிவிட்டார்களென நினைத்துக்கொண்டேன். ஈழத்தமிழர்களை - குறிப்பாக புலிகளை அரசியற்றலைமையாக ஏற்றுக்கொண்டவர்களையே உதயன் குறிப்பிடுகிறது எனக் கருதிக்கொண்டு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.]

இங்கு எனக்கொரு குழப்பம் வந்துவிட்டது.
வை.கோ எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எப்படி அரசியல் நடத்த வேண்டுமெனச் சொல்வதற்கு ஈழத்தவர்கள் யார்? உதயன் யார்? அது முழுவதும் தமிழக அரசியலோடு தொடர்புடையது. நீங்களா போய் வை.கோ. வின் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? தமிழக அரசியலில் ஒருவரோ ஒரு கட்சியோ எடுக்கும் முடிவுக்கும் செயன்முறைக்குக்கும் கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? தமது ‘தமிழக அரசியல்’ செயற்பாடுகளுக்கெல்லாம் ஈழத்தவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கெங்கே இருக்கிறது?

சரி, இவ்வளவு கதைக்கும் நீங்கள் வை.கோ. வுக்கு இருந்த – இருக்கும் தெரிவுகளை யோசித்தீர்களா? கூட்டணி தொடர்பில் வை.கோ என்ன செய்திருக்க வேண்டுமேனக் கருதுகிறீர்கள்?
தனித்துப் போட்டியிடுவதையா? அல்லது சுந்தரமூர்த்தி போன்ற பதிவர்கள் சொன்ன இன்னொரு தெரிவான கட்சியைக் கலைத்துவிட்டு வாக்கு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதையா? ஈழத்தவர்களுக்கு வை.கோ மூலம் கிடைக்கும் நன்மையே அவர் வாக்கரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பது மட்டும்தான். வாக்கரசியலை விட்டு வெளியிலே ஈழத்துக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த ஏராளம் திராவிட, பெரியாரிய, இவற்றிலே சேராத தொண்டர்கள் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் ஒருவரின் செயற்பாட்டையும் அவரின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாதென்பதே எனது கருத்து. இதை வலுப்படுத்த, நாங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்தாடும் ஒருவரைக் கொண்டே விபரிக்கலாம்.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை, புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி, எப்படிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களென்பது அனைவருக்கும் தெரியும். மிக முக்கிய காலகட்டத்தில் செயற்கரிய உதவிகளைச் செய்து புலிகளை வளர்த்ததற்காகவும் அதன்மூலம் ஈழப்போராட்டத்திற்கு உதவியளித்ததற்காகவும் “மட்டுமே” – ஆம் அதற்காக மட்டுமே – நாம் எம்.ஜி.ஆரை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
யாராவது அவரின் தமிழக அரசியல் நிலைப்பாடு, செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டுள்ளோமா? அவரின் ஊழல்கள், மோசடிகள், அடாவடிகள், தனிப்பட்ட வாழ்க்கை என எதையாவது இதற்குள் கலந்தோமா? அப்படிக் கருதப்புறப்பட்டால் அவர் மீதான எமது நிலைப்பாடு மாறக்கூடுமல்லவா? அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி தனியே எம்மோடு தொடர்புடைய விடயத்தை மட்டும் கருத்திற்கொண்டுதான் இன்றுவரை எம்.ஜி.ஆரை அணுகிவருகிறோம்.

ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்குக்கூட எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தமுடியாத, தனிப்பட்ட வாழ்விலும்சரி, அரசியல்வாழ்விலும் சரி அப்பழுக்கற்ற வை.கோ. மீது, அவரின் அரசியற்கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக விமர்சனம் வைத்து அதற்குரிய விளக்கத்தைச் சொல்ல வேண்டுமெனக் கேட்குமளவுக்கு நீங்கள் வந்துவிட்டது எவ்வாறு?

இந்தப்பிரச்சினையில் வை.கோ. கேட்கும் எதிர்க்கேள்விகள் மிகமிக நியாயமானவை. பலசந்தர்ப்பங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது; ஆனால் எதிர்க்கேள்விகள் மூலம் எதிராளிக்கான பதிலைக் கொடுக்கலாம். இப்போது வை.கோ செய்வதும் ஒருவகையில் அப்படித்தான் தெரிகிறது. வை.கோ. வால் நிச்சயமாக தகுந்த விளக்கத்தைக் கொடுக்க முடியாத சூழ்நிலைதான் இப்போதுள்ளதாகப் படுகிறது. ஆனால் அவரின் எதிர்க்கேள்விகள் பல நியாயமானவை.

வை.கோ பாணியிலேயே நானும் உதயனைப் பார்த்துச் சில எதிர்க்கேள்விகள் கேட்க முடியும்.
ஓர் இரங்கற்பதிவெழுதியதற்காக தற்போது திடீரென தலையில் தூக்கிவைத்தாடும் தமிழக முதல்வர் இப்போதும் காங்கிரஸ் கட்சியோடுதான் கூட்டணி வைத்துள்ளார். அது பிரச்சினையில்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார். (கவனிக்க: காங்கிரஸ் தலைவர் ஒருவர் இனிப்பு வழங்கிக் கொண்டாடியது புகைப்படத்துடன் தினக்குரலில் செய்தியாக வந்துள்ளது. இச்செய்தி பிழையானதென சரியான முறையில் மறுத்தால் நான் இப்பத்தியை நீக்கிவிடுவேன்). அதைவிட, முதல்வரின் இரங்கற்பதிவுக்கு ஜெயந்தி உட்பட வேறும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவர்களோடுதான் கருணாநிதி இன்னமும் கூட்டணி வைத்துள்ளார். முதல்வரின் இரங்கற் பதிவு பற்றி ஜெயலலிதா சொன்னதற்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் சொன்னதற்குமுள்ள வித்தியாசத்தை உதயன் விளக்குமா? ஜெயலலிதாவாவது இனிப்பு வழங்கிக் கொண்டாடாமல் விட்டார்.
இப்போது என் கேள்வியென்னவென்றால், இரங்கற்பதிவைப் பழித்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் முதல்வர், உலகத்தமிழரெல்லாம் வேண்டாம், ஈழத்தமிழர்களுக்கு ( வேண்டாம் யாழ்ப்பாணத்தமிழர் – அதுவும் வேண்டாம், சங்கானை, சித்தங்கேணி, சண்டிலிப்பாய் எண்டு ஏதாவது ஓர் ஊர்த்தமிழர்களுக்கு) விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளாரென அடுத்த ஆசிரியர் தலையங்கம் எழுதுவீர்களா?

** கவனிக்க: முதல்வர் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பது தவறென்றோ, அவர் அதற்கான விளக்கத்தை ஈழத்தவர்களுக்கு அளிக்க வேண்டுமென்றோ நான் கேட்கவில்லை. உதயன் நாளிதழுக்கான ஓர் எதிர்க்கேள்வியே அது. இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை இறுதியில் ஓரிரு வரியில் எழுதுகிறேன்.

ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்ததற்கோ வால்பிடிப்பதற்கோ ஈழத்தவர்கள் கவலை கொள்ளவும் உணர்ச்சிவசப்படவும் எதுவுமில்லையென்பதே என்கருத்து. அது அந்த மாநில அரசியல் சார்ந்தது. அந்தக் கூட்டணிக்குப் போனதாலேயே வை.கோ. ஈழத்தமிழரின் போராட்டம் தொடர்பாக ஏதாவது சமரசம் செய்துகொண்டாரா, மாறுபாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரா என்பதே நாம் கனிக்க வேண்டியது. வை.கோ மாறவேயில்லை. முன்பு போலவே அதே தீவிரத்துடன்தான் இயங்குகிறார். இந்நிலையில் அவரின் அரசியற்கூட்டணி தொடர்பாக நாம் கவலைகொள்ளவோ கரிசனை கொள்ளவோ தேவையில்லை. அதையும்விட அதற்கான உரிமை எமக்கில்லை.
இதை இன்னும் உறைக்கும்படி வேறொரு முறையில் சொல்கிறேன்.

வை.கோ. வோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்த தீவிர ஈழவிடுதலை ஆதரவாளர்களோ புலிகளைப் பார்த்து,
‘நீங்கள் ஏன் சமாதானப் பேச்சுக்குப் போனீர்கள்? நீங்கள் ஏன் சண்டையைத் தொடக்கினீர்கள்? நீங்கள் ஏன் யுத்தநிறுத்தம் அறிவித்தீர்கள்? நீங்கள் ஏன் ரணிலை வெல்லவைப்பதை விட்டுவிட்டு ராஜபக்ஷவை வெல்ல வைத்தீர்கள்? நீங்கள் ஏன் நோர்வேயோடு பேசுகிறீர்கள்?’
இதற்குரிய விளக்கத்தை எமக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்”
என உளறிக்கொண்டிருந்தால் நாம் என்ன நிலையிலிருப்போம்?
அப்படித்தான் இருக்கிறது, தமிழகத்தில் எடுக்கும் அரசியற்கூட்டணி நிலைப்பாட்டுக்காக எமக்கு விளக்கம் சொல்லவேண்டுமென வை.கோ.வைப் பார்த்துக் கேட்பது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல்வரின் இரங்கற்பதிவு தொடர்பானது:
அவரின் இரங்கற்பதிவு பெரியளவில் என்னைப் பாதிக்கவில்லை. அவர் எழுதியதால் மகிழ்ந்து துள்ளவில்லை; அவர் எழுதியிராவிட்டால் அதைக்குறித்துக் கவலைப்பட்டிருக்கப் போவதுமில்லை. பிறகு நடப்பவைகளைப் பார்த்தால் அவர் அதை எழுதியிருக்காமலே விட்டிருக்கலாம் எனப்படுகிறது.

இயக்குநர் சீமான் சொன்னதைப்போல, ஈழஆதரவென்பது தமிழக வாக்கரசியலைப் பாதிக்கும் நிலைவரும்வரை இவை வெறும் சலசலப்புக்களாகவே இருக்குமென்பது எனது தனிப்பட்ட கருத்து.

சங்கரபாண்டி சொல்வதைப்போல தமிழகத்தில் ஒரு நியாயமான கருத்துக்கணிப்பை நடத்தினால் நல்லதென்று படுகிறது. பூவா தலையா போல ஒரு முடிபு வெளிப்படையாகத் தெரிந்துவிடும். நாங்களும் மேற்கொண்டு செல்லலாம். இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கும் நிலைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வை.கோ, ஈழம் தொடர்பாக வலைப்பதிவுச்சூழலில் பொதுவாகச் சில விடயங்களைப் பார்க்கலாம். வை.கோ என்றதுமே ஏதோவொரு விதத்தில் ஈழப்போராட்டத்தையும், புலிகளையும் முடிச்சுப்போட்டுத்தான் அணுகப்படுகிறது. இந்திய அரசியலில் இருக்கும் வேறெவருக்கும் இந்நிலையில்லை. அந்தளவுக்கு ஈழம் பற்றியும் புலிகள் பற்றியும் வை.கோ பேசியவை, பாடுபட்டவை ஏராளம் என்பதே உண்மை. மிக வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் என்றைக்கும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பவர் அவர்.

வை.கோ, தி.மு.க தலைமையிலான கூட்டணியை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தபோது வலைப்பதிவுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்நேரத்தில் வை.கோ.வுக்கு ஆதரவாக வந்தவை மிகமிகச் சில குரல்கள் மட்டுமே (டோண்டுவுடையதைச் சேர்த்தும்கூட;-)) அதுபோல் நடுநிலையாக விமர்சித்து வந்தவையும் மிகச்சில (சுந்தரமூர்த்தி போன்றவர்களது, அது பிரிவுக்கு முன்பே எழுதியிருந்தாலும்கூட)
ஆனால் வை.கோ.வைத் திட்டி வந்த குரல்களே அதிகம். அவற்றின் பின்னணி நோக்கங்கள் வேறுபட்ட தளங்களைக் கொண்டவை.

தீவிர கருணாநிதி ஆதரவாளர்களாக இருந்தவர்களிடமிருந்து (சிலருக்கு வை.கோ மீது பழைய கறளொன்று இருந்தது எனக்கருதுமளவுக்கு மிகத்தீவிரமாக இருந்தது;-)) வை.கோ. மீது வைக்கப்பட்ட கடுமையான தாக்குதல்கள் ஒருவகை.

கருணாநிதிக்கு எதிரான அரசியற்பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்டவர்கள், – ஏன் வை.கோ வுக்கும் எதிரான அரசியற்பார்வை கொண்டவர்கள்கூட இவ்விடத்தில் வை.கோ.வின் வெளியேற்றத்தை நையாண்டி பண்ணிக்கொண்டிருந்தார்கள் (முகமூடி, பி.கே.சிவகுமார் போன்றோரின் எழுத்துக்கள்). இது இன்னொரு வகை. இவர்களைப் பொறுத்தவரை, வை.கோ மீது தமது தாக்குதலை நடத்த இதையொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்களேயன்றி மற்றும்படி நியாயமான எந்த அரசியற்பார்வைகளும் இருந்ததாகத் தெரியவில்லை.

தனிப்பட்டளவில் வை.கோவின் ஜெயலலிதாவுடனான இணைவானது எனக்கு வருத்தத்தையளித்தாலும், இது தவிர்க்க முடியாததே என்பதோடு வை.கோ எடுத்தது சரியான முடிபே என்ற நிலையிலேயே நானிருந்தேன். (பேசியளவில் வேறும்சில ஈழத்துப்பதிவர்கள் இதேநிலைப்பாடோடு இருந்ததை அறிந்தேன்). ஆனால் நாங்கள் எல்லோரும் இந்தப்பிரச்சினையில் ஒதுங்கியிருந்தோம். கொழுவி மாத்திரம் கற்பகம் அம்மையாரோடு சண்டைபிடித்ததாக ஞாபகம்;-)

எனக்கு வருத்தமளித்த நிகழ்வு என்னவென்றால், இவர்கள் வை.கோ.வை வசைபாட ஈழத்தமிழர்களைப் பயன்படுத்திக்கொண்டமைதான். நான் மேற்குறிப்பிட்ட இருதரப்புமே வை.கோ. மீது தமது வசைமாரியைப் பொழிய பயன்படுத்திய முதல் ஆயுதம் ஈழத்தமிழர்கள்தான்.
அட! பி.கே. சிவகுமார், முகமூடி போன்றோர்கூட, ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கரிசனை கொண்டவர்கள்போல, வை.கோ. ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்துவிட்டார் எனப் புலம்பினார்கள். வை.கோ ஈழத்தவர்களின் தலையில் மிளகாய் அரைத்தவிட்டாரென ஒப்பாரி வைத்தார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஈழத்தவர்களோ வை.கோ செய்தது தவறென்று எங்குமே ஒப்பாரி வைக்கவில்லை. மாறாக அம்முடிவை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வை.கோ.வை உயிராய் நினைத்த அவரின் சீடர்கள் மாறியபோதுகூட ஈழத்தவர் மனங்களில் வை.கோ.வின் இடம் தளம்பலடையவில்லை. உதயனின் பாணியிற்சொன்னால், ஜெயலலிதாவுக்கு வால்பிடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்திற்கூட அது தளம்பலடையவில்லை. அந்நேரத்தில் வை.கோ.வைச் சரியாகப் புரிந்தவர்கள் ஈழத்தவர்கள் தானோ? ;-)

இப்படி மற்றவர்கள் ஈழத்தவரை வைத்து வை.கோ மீது விளையாடிக்கொண்டிருந்தது ஒருபுறமென்றால் இப்போது ஈழத்துச் செய்தியேடு ஒன்று விளையாட்டில் குதித்திருப்பது வருத்தமளிக்கிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதி முடித்தபோது மிகமிக நீண்டிருந்தது இடுகை. இடையிடையே வெட்டிக்கொத்திச் சுருக்கி (ஆம். இதுவே சுருக்கம்தான். வலைப்பதிவுச்சூழல் தொடர்பான நிறைய விடயங்கள் அலட்டல்களாக விளங்கியதால் வெட்டியாயிற்று.) இது வெளியிடப்படுகிறது.
மேலும் ஏதாவது சொல்ல வேண்டி வந்தால் பின்னூட்டங்களில் சொல்லலாமென நினைக்கிறேன்.

** இது உதயன் செய்தியேட்டுக்கு அனுப்பப்படவில்லை. அது எனது நோக்கமுமன்று.

** இதுவெனது தனிப்பட்ட கருத்து. இதற்குரிய எதிர்ப்புக்கள் ஈழத்தவர்களிடமிருந்தால் தெரிவிக்கவும்.

** இன்னொரு குறிப்பு:
இவ்விடுகையின் நோக்கம் உதயன் செய்தியேட்டின் நற்பெயரையோ அதன் சேவையையோ களங்கப்படுத்துவதன்று. எச்சந்தர்ப்பத்திலும் நாம் உதயனை புலம்பெயர் ஊடகங்களோடு வைத்துக் கருதுவதில்லை. அப்படி ஒப்பிடவும் முடியாது. தனக்குரிய வரலாற்றுப் பணியை உதயன் மிகுந்த தியாகங்களினூடு தொடர்ந்து செய்து வருகிறது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இயங்கும் இச்செய்தியேடு, இராணுவத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் தொடர் அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இயங்கிவருகிறது. தனது பணியாளர்களை ஆக்கிரமிப்பாளரின் துப்பாக்கிக் குண்டுக்குக் காவு கொடுத்துள்ளது. அதன்பின்னும் அது வீச்சோடு இயங்கிவருகிறது. விடுதலைப்போராட்டப் பயணத்தில் உதயன் செய்தியேட்டுக்கான பங்களிப்பை நாம் அறிவோம்.
ஆனால் இக்குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் நாம் கடுமையான முறையில் உதயனோடு முரண்படுகிறோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூலப்பதிவு: வசந்தன் பக்கம்: வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

ஜூன் 27, 2006

சாதீஈஈயம்

கோப்பு வகை: அனுபவம், ஈழம், பொது, போராட்டம், மதம், விமர்சனம் — maathahal @ 12:00 பிற்பகல்

இதை ஒரு ‘இயம்’ ஆக்கிக் கதைப்பதே சரியா தெரியாது. ஆனால் அவ்வளவு தூரத்துக்கு முக்கியமானதுதான் இது. இங்கே சாதி பற்றிய என் அனுபவங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே. இது ஆராய்ச்சியோ அறிவுரையோ அன்று என்பதை முதலிற் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏற்கெனவே தமிழோடு பட்டபாடு போதும். என் அனுபவங்கள் என்று சொல்லிவிட்டதால் நான் சார்ந்த தளத்தை மட்டுமே என்னாற் சொல்ல முடியும். எனவே அந்தத்தளம் இங்கே பலருக்குப் பிடிக்காததாயிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.

யாழ்ப்பாணத்தின் கிராமமொன்றுதான் என் சொந்த ஊர். எனது காலத்தில் சாதி ஒடுக்குமுறையென்பது என் கிராமத்தில் இருந்ததாக நினைவிலில்லை. ஆனால் வேறுபாடுகள் நன்றாகவே இருந்தன. மேல் சாதியென்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்தச் சாதியும் இருந்ததில்லை. (இது என் கிராமத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு இடங்கள் பற்றி அந்தச் சின்ன வயசில் எனக்குத் தெரியாது) ஆனால் குறிப்பிட்ட ஆக்கள் வீதியால் வரும்போது காவோலை கட்டி இழுத்து வரவேணும் என்ற நடைமுறை முன்பு இருந்ததாக என் பாட்டன் பரம்பரை சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. என் காலத்தில் அது அறவே இருந்ததில்லை. ஏன் தந்தை காலத்திலும் அது இருந்ததில்லையாம்.

எங்கள் கிராமத்தில் எல்லாக் கிணறுமே குடிப்பதற்குப் பாவிப்பதில்லை. சமைப்பதற்குப் பாவித்தாலும், குடிப்பதற்குச் சில குறிப்பிட்ட கிணறுகளையே பாவித்தார்கள். (ஆனால் உண்மையில் எல்லாக் கிணறுமே குடிக்கக் கூடிய தண்ணீருள்ள கிணறுகள் தான். சுவைக்காகத்தான் இப்படி கிணறுக்கு அலைவது. தண்ணீருக்குச் சுவையில்லையென்று விஞ்ஞானம் பேசாதீர்கள். சுவையிருக்கிறது. இது எந்தக் கிணத்துத் தண்ணீரென்று என்னாற் சுவைத்துப்பார்த்துச் சொல்ல முடியும்.) முந்தி தண்ணீர் எடுப்பதில் சாதிச் சண்டைகள் வந்ததாம். ஆனால் என் காலத்தில் எல்லாருமே தண்ணீர் அள்ளினார்கள். குறிப்பாகக் கோயில் கிணறுகள் எந்த நேரமும் எல்லாருக்காகவும் இருக்கும். கோயில் வளவுக் கதவுகள் இரவிற்கூடப் பூட்டப்படுவதில்லை, தண்ணீர் அள்ளுவதற்காக. ஆனால் திருமணங்கள் என்று வரும்போது சாதி நிச்சயமாய்ச் சம்பந்தப்படும்.

தொழில் முறைமூலம் பிரிக்கப்பட்ட சாதி தொடர்ந்து வருவதற்கு மதங்களின் பங்கு அளப்பரியது. இன்னும் சாதியம் வேரூன்றி இருப்பதற்கும் மதங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது என் கருத்து. நான் என் ஊரில் சாதி பற்றி அறிந்த கதை இதுதான்:கரையார், பள்ளர், வேளாளர் என்று சனம் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒருநாள் என் தாயிடம் கேட்கிறேன்:
“அம்மா! கரையார், பள்ளர் எண்டா ஆரம்மா?”
என் தாய் எனக்களித்த பதில் இதுதான்.
“செவத்தியார் கோயில்காரர் பள்ளர், தொம்மையப்பர் கோயில்காரர் கரையார், அந்தோனியார் கோயில்காரர் வெள்ளாளர். இப்ப விளங்கீட்டுதோ?”
ஓமெண்டு தலையாட்டினன். தொழில்களைக் குறித்து எனக்கு சாதி சொல்லப்படவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், ‘அப்ப உதில எந்தத் தொழிலும் செய்யாமல் அரசாங்க வேல மட்டும் பாக்கிற நாங்கள் என்ன சாதி?’ என்று கேட்டிருப்பேன் என்று என்தாய் நினைத்தாளோ தெரியாது.

இப்படித்தான் இந்து மதத்திலுமிருந்தது. சாதிக்கொரு கோவிலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளை சாதிக்கொரு புனிதரை அல்லது கடவுளை வைக்கவில்லை. எங்களுரில் வெள்ளாளருக்கு இருக்கும் அந்தோனியார் பக்கத்து ஊரில் கரையாருக்கு. புனிதர்கள் தப்பித்தார்கள். தொழில்கள் மாறி எல்லாரும் தமக்கு வசதிப்பட்ட தொழில்களைச் செய்யத்தொடங்கிய பின்னும், ஏராளமானோர் அரசாங்க வேலையும் தனியார் வியாபார நிறுவனங்களிலும் வேலை செய்யத் தொடங்கிய பின்னும், இன்னும் அந்தத் தொழில்முறைச் சாதி பலமாக உயிரோடிருப்பதற்கு மதங்கள் முக்கிய காரணம்தான். நேரடியாகச் சாதி பற்றிப் பேச முடியாமல் இப்பிடித்தான் எங்களுரில் பேசிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக வேறோரு ஊரிலிருக்கும் ஒரு கரையாரைப் பற்றிப் பேசும்போது,
“அவயள் தொம்மையப்பர் கோயில் ஆக்களெல்லோ.”
எண்டு சொல்லுவினம். ஆனா அந்த ஊரில அப்பிடியொரு கோயிலே இருக்காது. எங்கட ஊர்க் கோயில வச்சே எல்லா இடத்து ஆக்களையும் குறிப்பினம்.

சொந்த ஊரிலயிருந்து 1992 இல இடம்பெயர்ந்து மானிப்பாயில வந்து இருந்தம். ஏராளமான சனம் மானிப்பாய்க்குத்தான் வந்தது. முதல் பள்ளிக்கூடங்களில எல்லாரும் கலந்து ஒண்டாத்தான் ஒரு பிரச்சினையுமில்லாம இருந்தவை. பிறகு அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன. பிரதானமா மூன்று முகாம்கள். இவற்றில் இரண்டு பெரிய முகாம்கள். அவற்றில் சாதி மதப்பிரச்சினையில்லாமல் எல்லாரும் ஒன்றாகவே இருந்தார்கள். அதில் தனியே ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் எல்லாரையும் குடியமர்த்தினார்கள். இறுதிவரை பிரச்சினையில்லாமலிருந்தது. ஆனால் மூன்றாவதாக அமைக்கப்பட்ட முகாம் தான் சிக்கலைத் தந்தது. அதில் ஆக முப்பது வரையான குடிசைகள்தான். மிகச் சிறிய முகாம். ஆனால் அவ்வளவு பேரும் ஒரே ஊர் அக்கள். அதாவது என் கிராமத்தவர்கள். அதுவும் ஓரே மதத்தவர், ஆனால் இரு சாதிக்காரர். குடிசைகள் அமைக்கும்போதே பிரச்சினை தொடங்கி விட்டது. குடிசை ஒழுங்குகளை மாற்றித் தருமாறு பிரச்சினை. என்னவென்றால் தாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கப் போவதாக இரு தரப்புமே சொன்னார்கள்.

அந்த முன்று முகாம்களுமே மானிப்பாய் அந்தோனியார் கோவில் பங்கு நிர்வாகத்தின்கீழ்தான் இருந்தன. பங்குத்தந்தை இதை ஒப்பிவில்லை. எல்லாரும் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார். ஆனால் சில ‘பெரியவர்கள்’
“சுவாமி! உங்களுக்கேன் பிரச்சின. நாளைக்கு இதுகள் தங்களுக்க ஏதும் பிரச்சினப் பட்டா அது உங்களுக்குத்தானே இடைஞ்சல். பேசாம அவயள் சொல்லிற மாதிரியே விட்டிடலாம்.”
என்று சொல்லி சம்மதிக்க வைத்தாயிற்று. குடிசை ஒழுங்குகள் மாறின. ஒரே பாதை ஒரே ஒழுங்குமுறை என்று இருந்தும் முகாம் இரண்டாகவே இயங்கியது. திடீரென இடையில் வேலி முளைத்தது. இரண்டு பாதைகள் வந்தன. முகாமுக்கு இரண்டு நிர்வாகம் வந்தது. வெறும் முப்பது குடிசைகளுக்குள் ஊரில் நடந்த அத்தை கூத்துக்களும் நடந்தன. நல்ல வேளை பெரியளவு பிரச்சினைகள் வரவில்லை. மனத்தளவில்தான் அந்தப் பிரச்சனை.

ஆனால் யாழ் இடப்பெயர்வின் பின் வன்னிவந்தபின் இந்த நிலைமைகளில் மாற்றம் வந்தது உண்மை. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் அவர்களை மாற்றிவிட்டதோ என்னவோ. இங்கே சாதிப்பிரச்சினை, வேறுபாடு முற்றாகக் களையப்பட்டதாக நான் சொல்ல வரவில்லை. யாழில் இருந்த நிலைமை நிரம்பவே மாறிவிட்டது. வன்னிக்குள்ளே கூட நிறைய இடப்பெயர்வுகள். இதிலே எதைச் சொந்தம் கொண்டாட முடியும்? அகதிகள் சம்பந்தமாக வேலை செய்தவன் என்ற முறையில் இந்த மாற்றங்களை என்னால் உறுதியாகப் பதிவு செய்ய முடியும். அகதிமுகாம்களில் பல காதல் திருமணங்கள் கூட நடந்ததுண்டு. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றிக் காதலர்கள் கவலைப்படவில்லை. தமிழீழக் காவல்துறை தான் அவர்களின் நம்பிக்கை. குடும்பம் நடத்தும் பொருளாதார பலம் இருக்கும் பட்சத்திலும் வயது சரியாக இருக்கும் பட்சத்திலும் காதல் கைகூடும். தமிழகத்திலும் இங்கேயும் காவல்துறைக்கு இது ஒரு முக்கிய பணிபோலும்.

ஒருவர் சொன்னார்:
“உவங்கள் ஒரே சாதிக்குள்ள அல்லது மதத்துக்குள்ள காதலெண்டா ஏனோ தானோவெண்டு இருப்பாங்கள். ஆனா சாதிமதம் மாறியெண்டா விழுந்தடிச்சு தலையில தூக்கிவச்சு ஆடுவாங்கள்.”
எனக்கு இந்தக் குற்றச்சாட்டு உண்மையாகப் படவில்லை. அவர்கள் காதலை ஆதரிக்கிறார்களா வரவேற்கிறார்களா என்பதைத் தாண்டி அதை அவர்கள் சாதி மதங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகப் பார்க்கிறார்கள் என்பது தெளிவு. பல போராளிகளின் திருமண பந்தம் இவற்றைத்தாண்டி நடந்ததால் சொந்த தாய் தந்தையரின் உறவுகூட இல்லாமல் இருப்பதும் நான் கண்டுள்ளேன். புலிகளின் திருமண முறைகூட (திருமணச் சடங்கு) இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தவிர்க்க முடியாமல்தான் அவற்றிற் கலந்து கொள்கிறார்கள்.

மதங்களின் ஆதிக்கத்தை மக்களிடத்திற் குறைப்பது முக்கியமானது. ஆனால் புலிகளாற்கூட அதைச் சரிவர செய்யமுடியவில்லை. ‘இம்’ என முன் பிரச்சனை வந்துவிடும். (ஆனால் மாவீரரின் வித்துடல் விதைப்பு விடயத்தில் மட்டும் எந்த சமரசத்துக்கும் இடங்கொடாமல் அவர்களால் இருக்க முடிகிறது.) சாதிப்பிரச்சினையும் மதங்களோடு பின்னிப்பிணைந்திருப்பதால் அவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பது என் அவதானம்.

வன்னியில் வெளிப்படையாக சாதி பற்றிக் கதைத்தாலோ இன்னொருவரைச் சாதிப்பேர் கொண்டு திட்டினாலோ அது பிரச்சினைக்குரிய விசயம்தான். மனத்தில் என்ன இருந்தாலும் வெளிப்படையாகப் பேச முடியாது. இது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகள் சிறுவர்கள் சாதிப்பெயர்களைக் கேட்டும் அதன் வசவுகளைக் கேட்டும் வளரும் சந்தர்ப்பங்கள் குறையும். வன்னியில் இளைய சமுதாயம் எப்படியும் களத்தில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். எல்லைப் படையாகப் போயிருக்கிறோம். பெரிய தாக்குதல் நேரங்களில் ஆயுதங்கள் கைப்பற்றல், இராணுவ உடல்களை அப்புறப்படுத்தல், காயக்காரரை அப்புறப்படுத்தல், வழங்கல்களைச் செய்தல், உணவுப்பொதிகளை வினியோகித்தல் என நிறையக் களப்பணிகளைச் செய்திருக்கிறோம். இரத்ததானம் நிறைய. இவற்றிலெல்லாம் இளைய சமுதாயத்திடம் வழமையைவிடப் புரிந்துணர்வொன்று அதிகமாய் ஏற்பட்டிருந்தது, குறிப்பாக எல்லைப் படையாகக் கடமைக்குச் செல்லும்போது. நண்பர்கள் வட்டமென்பது மிகமிக விசாலமானது. சாதியைக் கருத்திற்கொள்ளாதது. யாழ்ப்பாணத்தில் இன்றும்கூட நண்பர்கள் வட்டம் சாதியைக் கருத்திற்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எம்மக்கள் மத்தியில் மதவேறுபாட்டைப் பிரச்சினையாகக் கொள்வதிலும்விட சாதிவேறுபாட்டைப் பிரச்சனையாய்க் கொள்வது சற்று அதிகம்போல் நான் உணர்கிறேன். ஆனால் காலப்போக்கில் இந்தப்பிரச்சனை ஒழியலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. என் நம்பிக்கை வன்னிதான். அங்கு ஓரளவுக்கு எல்லாருக்கும் சமமான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதைக் காணலாம். ஏதோ தம்மாலியன்றவரை புலிகள் சமூகக் கட்டமைப்பைப் பேணுகிறார்கள். முன்பு வன்னியில் பிச்சையெடுக்கும் சிறுவர் சிறுமிகளைக் கண்டிருப்பீர்கள். அது ஒரு கட்டத்தில் பெருகத்தொடங்கியது. ஆனால் இன்று அறவே அந்த நிலையில்லையென்பதை உறுதியாக் கூறுவேன். ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிட்டு நான் வன்னிபற்றிப் பெருமைப்படும் விசயங்களில் இதுவுமொன்று.

அத்தோடு அனைத்துத் தொழில்களுக்கும் இயன்றவரை உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். சீவல் தொழில் செய்பவர்களுக்கு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. அவர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேல் ஒரு சீவல் தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தொழிலின்போதான இறப்புக்கு அக்குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது. தனிப்பட யாருக்கும் கள் விற்க முடியாது. அது சட்ட விரோதமானது.

இதேபோலவே சிகை அலங்கரிப்புத் தொழிலும். (இந்தப் பெயரில்தான் அவர்கள் இயங்குகிறார்கள்). தனிப்பட யாருக்கும் அவர்களின் வீட்டிற்குப் போய் முடி வெட்ட முடியாது. எந்தக் கொம்பனென்றாலும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்குத்தான் (சலூனுக்கு) வந்து வெட்ட வேண்டும். சரியான மருத்துவக் காரணங்களின்றி யாரும் வீட்டிற்குச் சென்று முடிவெட்ட முடியாது. இவை ஓரளவுக்கு ஆண்டான் அடிமை மனோபாவத்தை அல்லது முறையை ஒழிக்கும்.

இன்னும் அவர்கள் செய்ய வேண்டியவை நிறைய. ஆனால் அவர்களால் செய்ய முடியாதவை என்றும் நிறைய உண்டு. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் ‘மணக்கொடைத் தடைச் சட்டம்’ என்ற பெயரில் தமது நீதித்துறையில் சீதனத் தடைச் சட்டத்தையே கொண்டுவந்தார்கள். அச்சட்டத்தின் கீழ் சில வழக்குகளும் நடந்ததாக அறிகிறேன். இச்சட்டம் பற்றி எங்கள் தமிழர்கள் எந்தவித பிரதிபலிப்பையும் காட்டவில்லை. (அன்ரன் பாலசிங்கம் இச்சட்டத்தை ஆதரித்து எழுதி, பின் அவரே வேறொரு பேரில் விமர்சித்து எழுதி மீண்டும் அதற்கு தன் பெயரில் விளக்கம் கொடுத்து கொஞ்சக்காலம் மினக்கிட்டார். ஆனால் ஒருத்தரும் அந்த விவாதத்தில கலந்துகொள்ளேல.) ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை. யாழ் இடப்பெயர்வுடன் வன்னிக்கு வந்த நேரத்தில் புலிகளின் நிர்வாகத் தழம்பல்களுக்கிடையில் இச்சட்டம் செயலிழந்துவிட்டது. இன்றும் செயலிழந்த ஒரு சட்டமாகத்தான் அது இருக்கிறது. இவ்விசயத்தில் அவசரப்பட்டார்களோ என்று தோன்றுகிறது.

இப்போது போர் ஓய்ந்துவிட்ட இந்த நேரத்தில் வன்னியில் மீண்டும் பழய பிரச்சினைகள் தலை தூக்கலாம். அவை எப்படிக் கையாளப்படுகின்றனவோ தெரியவில்லை. நானிருக்கும்வரை பெரிதாக எந்த மாற்றமுமில்லை. சுனாமியின்பின் நிலைமை எப்படியிருக்கிறதென்றும் தெரியவில்லை.

என்பதிவில் யாழ்ப்பாணத்தைத் தாக்கியெழுதியதாக ஒரு பார்வை தென்படலாம். அப்படியன்று. என் அனுபவங்களும் பார்வைகளும்தான் அவை. சில விசயங்கள் எனக்குத் தீராத ஆத்திரத்தை வரவழைப்பவை. சென்ற வருடம் யாழ் போனபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி (என்னைப் புலியாக அல்லது வால்பிடியாக நினைத்து, – வன்னியிலிருந்தவனையெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பார்களோ தெரியாது.)
“டேய் நீதானே அவங்களோட திரிஞ்சனி. உனக்குத் தெரிஞ்சிருக்கும். பொடியளில கரையாரோ வெள்ளாளரோ கூட இருக்கினம்?”
இது. இதுதான் நான் கண்ட யாழ்ப்பாணம். இந்த ஒரு சம்பவத்தை வைத்து நான் யாழ்ப்பாணத்தை எடை போடுவது தவறுதான். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குறிப்பு: சாதி பற்றிய விடயங்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் பொதுவாக இருந்தாலும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்னும் ஈழத்தில் அரசுமுறை அங்கீகாரம் சாதிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஒருவன் தன்னைச் சாதிரீதியில் வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.
‘தலித்’ என்ற சொல் நான் தமிழகம் சம்பந்தப்பட்டு மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். ஈழத்தில் இச்சொற்பாவனை நானறியவில்லை. ஆனால் சிறிரங்கன் பாவிப்பதைப் பார்த்தால் அங்கேயும் இச்சொல் பாவனையிலிருந்திருக்கிறது போலுள்ளது. தெரிந்தவர்கள் சொல்லவும்.

*******************************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

என் வியாகுலங்கள்…

கோப்பு வகை: அனுபவம், ஈழம், போராட்டம் — maathahal @ 11:57 மு.பகல்

1994 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒரு நாள்.

இடம் யாழ். மத்திய கல்லூரி மைதானம்.

விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த இரு பாடசாலை அணிகளுக்கிடையான உதை பந்தாட்டப் போட்டியொன்று முடிவுக்கு வருகிறது. இரு அணியுமே சமநிலையில் நின்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டு பின் தண்ட உதைகள் (Penalties) வழங்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது. அதுதான் மாவட்ட மட்ட இறுதிப்போட்டியென்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. விளையாடிக் கொண்டிருந்தவற்றில் ஒன்று என்னுடைய பாடசாலையணி.

இந்நிலையில் என் பாடசாலை அணித்தலைவன், ஏற்கெனவே நன்றாய்க் களைத்துப்போய் தளம்பியிருந்த பேற்றுக்காப்பாளனை (Goal keeper) மாற்றி, தானே அப்பணியை ஏற்றுக் கொள்கிறான். அருமையாக இரு பந்துகளைத் தடுத்து, தனக்குக் கிடைத்த உதையை சிறப்பாக உதைத்து அன்று வெற்றி தேடித் தந்தான். அவன் தான் “றொபின் பெக்கின்”

1991 காலப்பகுதி. இதே பெக்கினுடன் ஜெயராம் என்று இன்னொருவன். இருவருமே 15 வயதுக்குட்பட்ட என் பாடசாலை அணியின் பிற்காப்பு வீரர்கள். அந்த ஆண்டு மாவட்ட மட்டத்தில் இறுதிப்போட்டியில் வென்று முதலிடத்தைப் பெற முடியாவிட்டாலும் அருமையாக விளையாடி பாராட்டுப் பெற்றது அந்த அணி. இந்த பின்வரிசை வீரர்கள் இருவருமே ஏனையோரால் மிகவும் பாராட்டப்பட்டவர்கள். தொழில்முறை வீரர்களைப்போன்று அவர்களின் லாவகமும் பாணியும் இருந்தன. அப்போது பிரபல்யமாகப் பேசப்பட்ட இரு பிற்காப்பு வீரர்கள்.

இருவருமே என் வகுப்புத் தோழர்கள். ஒரே வகுப்பில் படித்தோம். அதுவும் ஜெயராம் என் ஊர்க்காரன் எனபதால் சற்றுக் கூடதலான அன்னியோன்யம் இருந்தது. இருவருமே அமைதியான சுபாவமுள்ளவர்கள். 1992இன் நடுப்பகுதியில் முதலாவது இடப்பெயர்வு நடந்தபோது ஜெயராமுக்கும் எனக்குமிருந்த தொடர்பு முறிந்து போனது.

ஆனால் பெக்கின் என்னோடயே கூடப்படித்தான். யாழ் இறுதி இடப்பெயர்வு வரை ஒரே வகுப்புத்தான். பல நேரங்களில் ஒரே வாங்குதான். (வாங்கு- Bench) நாங்கள் பின்வாங்கார். (பின்வாங்கார் பின்வாங்கார் எண்டு சொல்லுறது ஏன் தெரியுமோ? ஏனெண்டா அதவிட பின்வாங்குறதுக்கு வாங்கு இல்ல.) பாடசாலை நேரத்தை விட அடிக்கடி நாங்கள் பாடசாலையிலோ அல்லது வேறிடத்திலோ சந்திக்கிற சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திச்சு. உதைபந்து விளையாட்டுப் பயிற்சியின்போது அல்லது உடற்பயிற்சியின்போது இப்படியான சந்தர்ப்பம். ஓய்வு நேரமெண்டா உடன அதில ஒரு பாட்டுக்கோஷ்டி உருவாகும். அப்ப இசைக்குழுக்கள் தான் எங்கட பொழுதுபோக்கு. பெக்கின்தான் மேளமடிப்பான். அவனோட சேந்து ‘ட்றம்’ வாசிக்கிறது தோமஸ் எண்ட ஒருத்தன். அவனும் எங்கட வகுப்புத்தான் எண்டாலும் எங்களவிட ரெண்டு வகுப்புக் குறைய படிக்க வேணும் போல இருப்பான் (உருவத்தில). நடராஜா கொம்பாஸ், அதோட ரெண்டு சில்வர் கப், வேற ஏதாவது தகரச் சாமான், ரெண்டு பேனையள். இதுகள் தான் ட்றம் வாத்தியக்கருவி. யாராவது பாட்டுப்பாட இவங்கள் இசை குடுக்க அமர்க்களமாத்தான் பொழுது போகும்.

எங்களுக்கு ஒரு வகுப்பு மூத்ததாயும் இப்பிடியொரு கோஷ்டி இருந்திச்சு. கவிஞர் பொன். கணேச மூர்த்தியின் மூத்த மகன் மௌலி தான் அதின்ர தலை. அதவிட கேசவன், றுபன், யோன்போல், சுரேஸ், கண்ணன், ஜெயரட்ணம் எண்டு ஒரு பட்டாளம். அவையள் இருந்தா நாங்கள் அடக்கி வாசிப்பம். அவங்கட கோஷ்டி நிச்சயமா நல்லாயிருந்தீச்சு. அதில றுபன், கேசவன், யோன் போல், ஜெயரட்ணம் நாலு பேரும் இண்டைக்கு இல்ல. நாலு பேருமே “மாவீரர்கள்”.

பெக்கின் சரியான அமைதியான பேர்வழி. யாழ். பல்கலைக்கழக மைதானத்தில்தான் ஒவ்வொருநாளும் பின்னேரம் விளையாடிவிட்டு மானிப்பாய்க்கு வருவோம். அப்ப வாற வழியலில பம்பலடிச்சபடியே வருவோம். எங்கயேன் பெட்டயளோட ராத்த வெளிக்கிட்டா பெக்கின் நைசாக் கழண்டிடுவான். அந்தப் பிரச்சினையில எங்களோட சேர மாட்டான். அதப்போலதான் எங்கயேன் உதைந்தாட்டப் போட்டி முடிஞ்சு வெற்றியோட வரேக்க (எப்பவும் வெற்றிதான். கிட்டத்தட்ட 95 வீதம்) எங்களோட நல்லா பம்பலடிச்சு வருவான் (அவன்தானே அணிக்கு தலை). ஆனா கொஞ்சம் ஓவராப்போனா ரெண்டு தரம் சொல்லுவான். பிறகு சத்தம் போடாமக் கழண்டு தனியப் போயிடுவான்.

றோட்டில கள்ள மாங்காயள் பிடுங்கிறது கள்ள இளநீர் பிடுங்கிறது எண்டு எங்கட விளையாட்டுக்கள் கொஞ்ச நாளில அலுத்துப்போய், பப்பாப் பழம் பிலாப்பழம் எண்டு முத்தேக்க அவன் சரியான எரிச்சல்பட்டான். அந்த ஆட்டத்துக்கு தான் வரேல எண்டு ஒதுங்கிக் கொண்டான். எக்கேடும் கெட்டுப்போ, ஆனா எங்களக் காட்டிக்குடுக்காட்டிச் சரி, எண்டிட்டு விட்டுட்டம்.

அப்ப யாழ்ப்பாணத்தில சைக்கிளில பரலலாப் போறதுக்குக் கடுமையான தடை. தமிழீழக் காவல்துறை அதில கடுமையா நிப்பினம். ஆனாலும் நாங்கள் எங்களையறியாமல் அப்பிடிப் போவோம். அப்பவும் பெக்கின் எச்சரிப்பான். ஆனா நாங்கள் கேக்கிறேல. பிறகு எங்களவிட பிந்தி வருவான். நாங்கள் காவல்துறையிட்ட மாட்டுப் படேக்க அவன் அதுக்குள்ள இருக்கமாட்டான். தண்டம் கட்டுறதுக்கு எங்களிட்ட காசிருக்காது. அப்பிடியில்லாட்டி ரெண்டு மூண்டு மணித்தியாலம் மறிச்சு வச்சிட்டு விட்டுவிடுவினம். ஆனா நாங்கள் அவசரமாப் போகோணும், மச் இருக்கு எண்டு கெஞ்சிக் கூத்தாடி ஒரு மாதிரி வெளிக்கிடுவம். ஆனா பள்ளிக்கூடத்துக்கு அறிக்கை வரும். அத சூட்டோட சூடா அனுப்பினாப் பரவாயில்ல. அந்த போட்டி வெற்றியோட அது அடிபட்டுப்போகும். சிலவேள 10 நாள் கழிச்சுத்தான் பேர் விவரங்களோட அறிக்கை பள்ளிக்கூடத்துக்கு வரும். அப்ப அந்த மச் வெற்றியெல்லாம் மறந்துபோயிருக்கிறதால “நன்றி கெட்டதுகளால” குண்டி பழுத்திடும்.

1997 இன் ஆரம்பம். விடுதலைப்புலிகள் மாதந்தோறும் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை “ஒளிவீச்சு” எண்டொரு ஒளிநாடாச் சஞ்சிகை வெளியிடுவார்கள். அதில் அம்மாத செய்திகள், சண்டை விவரங்கள், ஒரு குறும்படம், சமகாலப்பார்வை, இயற்கை சார்ந்த விடயங்கள், பொருண்மியத் தகவல்கள் என நிறைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதில் அம்மாதத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் பெயர் விவரங்கள் அவர்களின் படத்தோடு வரும்.

அண்டைக்கும் அப்பிடியொரு ஒளிவீச்சு பார்த்துக்கொண்டிருந்தன். மாவீரர்கள் வரிசை வந்து கொண்டிருக்கு. திடீரெண்டு ஜெயராமின்ர மாதிரி ஒரு முகம். நிதானிக்கிறதுக்கிடையில அடுத்த படம். அது என்ன பேர் எண்டது கூட கேக்கேல. உடன படம் போட்டுக்கொண்டிருக்கிற ஆளிட்டப்போய் ஒருமாதிரிக் கேட்டு அந்த இடத்தைத் திருப்பிப் போட வச்சன். ஓமோம். அது என்ர ஜெயராமே தான். யாழ்ப்பாணத்தில வீரச்சாவெண்டு அறிஞ்சன். அவன் இயக்கத்துக்குப் போனது கூட எனக்குத் தெரியாது. பிறகு விசாரிச்சதில கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில படிச்சுக்கொண்டிருந்திட்டுப் போனவனாம்.

1999 நடுப்பகுதி. ஒருநாள் முல்லைத் தீவுக் கடற்கரையில நிக்கிறன். அதால கொஞ்சப் பெடியள் போனாங்கள். “வசந்தன்” எண்டு ஆரோ கூப்பிடுற சத்தம். ஆனா பழகின குரல். திரும்பிப் பாத்த உடன மட்டுக்கட்டீட்டன். அது பெக்கின் தான். தோளில ஏ.கே. ஒண்டோட. அதே அமைதியான கதை. அதே சிரிப்பு. எனக்கு ஆச்சரியம். ஏனெண்டா இந்த 4 வருசமா அவன நான் காணவேயில்ல. கொஞ்ச மாதத்துக்கு முதல்தான் இயக்கத்துக்குப் போனவனாம். என்ன இயக்கப்பேர் எண்டு கேட்டுத் தெரிஞ்சுகொண்டன். கனக்க கதைக்க நேரமில்ல. அதுக்குள்ள அவங்களுக்குரிய வண்டி (கடற்புலிகளின் படகை வண்டி எண்டுதான் சொல்லிறது) வந்திட்டுது.

பிறகொருநாள், ஓயாத அலைகள் -3 நடந்துகொண்டிருக்கேக்க அதே பெக்கின் நிலவரசனாக வெற்றிலைக் கேணிச் சமரில் வீரச்சாவடைந்ததாக பத்திரிகை பார்த்துத் தெரிந்து கொண்டேன். அவனது ட்றம் துணை தோமஸ், கப்டன் வானரசனாக வீரச்சாவடைந்ததை அறிந்துதான் அவனும் இயக்கத்துக்குப் போயிருந்ததை அறிந்து கொண்டேன். வேவு அணியில் இருந்தவனாம். அவனுக்குச் சரியான இடம். ஜெயரட்ணம் சினைப்பர் காரனாக இருந்து கப்டன் பொய்கையனாக வீரச்சாவடைந்ததையும் புலிகளின் குரலில் கேட்டேன். சண்டையில் இரண்டு காலுமில்லாமல் இருந்த எட்மன் என்ற இளங்குயிலனை (இவனும் என் பின்வாங்கான்தான். நானும் இவனும் ‘குளப்பவாதிகள்’ என்று வகுப்பில் பேரெடுத்தவர்கள். யாழ். இடப்பெயர்வுக்கு முதலே இயக்கத்துக்குப் போய்விட்டான்.) விசுவமடுவில் கண்டேன். பாடசாலையில் 100 மீற்றர் ஓட்டத்தில் பிரசித்தி பெற்ற அந்தக் கால்களை ஒரு கிளைமோர் காவிச்சென்றிருந்தது. கொஞ்ச நாளின்பின் இரண்டு பொய்க்காலுடனும் சைக்கிளில் ஓடிப்போவதைக் கண்டு பிரமித்து நின்றேன். இடைக்கிடை சந்திப்பேன். பின் முல்லைத்தீவில் அடிக்கடி சந்திப்பேன். கடற்புலியில் இருப்பதாகச் சொன்னான். எனக்கு அப்போதே புரிந்துவிட்டது. எதிர்பார்த்தபடியே பின்னொரு நாள் கடற்கரும்புலி மேஜர் இளங்குயிலனாக வெடித்துப் போனதைப் பேப்பரில் பார்த்தேன்.
—————————————————————-

1995 இடப்பெயர்வின்பின் 2003 இல் முதன்முதல் யாழ். போனேன். என் பாடசாலைக்கும் போனேன். எங்கும் புதுமுகங்கள். நான் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர் ஒருவரைச் சந்தித்ததால் மகிழ்ச்சி. பாடசாலையின் உதைபந்தாட்டத் திறன் அப்பிடியே இருக்கிறது. அண்மையில் இலங்கை மட்டத்தில் நடந்த போட்டியிற் கூட யாழ்ப்பாணம் சார்பில் அந்தப் பாடசாலை அணியே வந்திருந்தது. அனால் ஏதோ ஒரு போட்டியில் தோற்றுவிட்டது. 15 வயதுக்குட்பட்ட அணியைப் பார்க்க எல்லாம் தவ்வலுகளாகத் தெரிந்தது. நிச்சயமாக அந்த வயதில் என் தலைமுறை நல்ல வளர்த்திதான்.

அங்கிருக்கும் மாணவர்கள் சிலரோடு கதைத்தேன். பெக்கின் பற்றி கேசவன் பற்றி றூபன் பற்றிக் கேட்டேன். எவனுக்கும் எதுவும் தெரியாது. அது அவர்கள் பிழையன்று. யாருடைய பிழையுமன்று. ஆனால் மனம் வருந்தியது. முந்தி ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் அந்தந்த பாடசாலையில் படித்து போராளியாகி வீரச்சாவடைந்தவர்கள் நினைவுகூரப்படுவர். அவர்களின் வரலாறு படித்துக் காண்பிக்கப்படும். நான் எழுதுவினைஞரிடம் சென்று மாவீரர்கள் வரலாறைக் கேட்டேன். நான் என்னை உறதிப்படுத்தியதும் தந்தார். சிலரின் விவரங்கள் இருந்தன. 1992 வரை வாசிக்கப்பட்ட அதே பதினொரு பேரின் விவரங்கள்.

வேறெதுவும் இணைக்கப்படவில்லை. என்னோடு படித்தவர்கள் மட்டுமே பதினொரு பேர் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டியவர்கள். இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு எதுவும் இணைக்க முடியாது. ஆனால் இனியும் அந்த விவரங்கள் அடுத்த தலைமுறைக்குப் போகுமா தெரியாது. ஏனென்றால் ஆக ஐந்தே ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே நான் அறிந்தவர்கள். மிகுதி அனைவரும் புதியவர்கள். அத்தோடு பழைய அதிபரும் மாற்றம். ஒன்றாக படித்த மற்றவர்களும் இல்லை. நிறையப் பேர் வெளிநாட்டில் அல்லது வன்னியில். சிலர் போராளிகளாக.

இன்று, கூட்டமாக எங்காவது ஒரு குழு இருந்து தாளம்தட்டிப் பாட்டுப்பாடினால் பழைய ஞாபகங்கள் வந்து தொலைக்கிறது. கூடவே பெக்கின், தோமஸ், றூபன், கேசவன், ஜெயராம், ஜெயரட்ணம், யோன் போல், எட்மன்… இன்னும் இன்னும்….

********************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

குளத்தில் நீராடல்

கோப்பு வகை: அனுபவம், ஈழம், போராட்டம் — maathahal @ 12:59 மு.பகல்

வணக்கம்!

“நீர் ஆடல்” எண்டு ஒரு படப்பதிவு போட்டனான். அதில இந்தத் தலைப்புச் சம்பந்தமா ஓர் உண்மைச் சம்பவத்தைச் சொல்லப்போவதாக் கூறியிருந்தேன். அதை இப்போது சொல்கிறேன்.

நான் அப்போது எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். என்னோடு எட்மன் என்றொருவனும் படித்தான். ஒரே வாங்குதான் நாங்கள் ரெண்டுபேரும். நல்ல கூட்டாளியள். (இப்ப அவன் இல்ல. அவனப்பற்றி இங்கே எழுதியருக்கிறன்)

நாங்கள் எடுத்த பாடம் சித்திரம். அவன் ஓரளவு நல்லாப் படம் கீறுவான். என்னைவிட நல்லாக் கீறுவான். (கீறுதல் எண்டது சும்மா கிறுக்கிற அர்த்தத்தில இல்ல. வரையிற அர்த்தத்தில) அப்ப நடந்த ஓர் இடைத்தவணைத் தேர்வில சித்திரப் பாடத்தில எங்களுக்கு வந்த தலைப்பு, “குளத்தில் நீராடுதல்”.

நானும் எனக்குத் தெரிஞ்ச குளத்தில கொஞ்சப்பேர் குளிக்கிற மாதிரி ஒரு படம் கீறினன். தேர்வுத்தாட்கள் தாற நேரத்தில சித்திர ஆசிரியையும் புள்ளிகள வாசிச்சா. பாத்தா, எப்பவும் எண்பதுக்கு மேல எடுக்கிற எட்மனுக்கு ஐம்பதோ என்னவோ தான். பிறகு எல்லாற்ற விடைத்தாளையும் தந்திட்டு கடசியா அவனக்கூப்பிட்டு, ஏனிப்பிடி படம் கீறினனி? எண்டு கேட்டா. அப்பதான் அவன் கீறின படத்தப் பாத்தம். கேணி மாதிரியொண்டில (யாழ்ப்பாணத்தில படிக்கட்டுக்கள் வச்சு கேணி மாதிரியிருக்கிற சிலதையும் குளம் எண்டு சொல்லுறது.) தண்ணி நிக்குது. அவ்வளவு தான். என்னடா இது எண்டு பாத்தா, பிறகுதான் விளங்கீச்சு, என்ன நடந்தது எண்டு.

குளத்தில் நீராடுதல் எண்டத, குளத்தில் நீர் ஆடுதல் எண்டு விளங்கிப்போட்டான். எண்டாலும் உப்பிடி விளக்கம் எடுக்கிறது சரியான கஸ்டம் கண்டியளோ. அவன் லட்சத்தில ஒருத்தனாயிருக்க வேணும். ஆனா அவன் அப்படித்தான் விளக்கம் எடுத்திருக்கிறான். அந்தக் கேணில நீர் ஆடுறதக் காட்டுறதுக்காகச் சின்னச்சின்ன அலைகள் காட்டியிருக்கிறான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சம். அவனும்தான். புள்ளிகள் குறைஞ்சதுகூட அவனுக்குக் கவலையில்ல. இந்தக் கதை பள்ளிக்கூடம் முழுக்கப் பரவீட்டுது. அடுத்தநாள் எங்களுக்குப் பாடமெடுக்காத, உயர்தரத்துக்கு மட்டும் ஏதோ ஒரு பாடம் எடுக்கிற வாத்தியார் ஒருத்தர் வந்து எங்கட வகுப்பில கதைச்சார்.

இவனின்ர பிரச்சினையச் சுட்டிக்காட்டி, அதுசம்பந்தமாத்தான் நான் கதைக்க வந்தனான் எண்டிட்டுத் துவங்கினார். உது ஏதோ பொல்லாத வியாதி எண்ட மாதிரி இருந்திச்சு அந்தாளின்ர கதை. ஏதோ ஆங்கிலச் சொல்லில சொல்லீச்சு, எங்களொருத்தருக்கும் விளங்கேல. உப்பிடியே போனா உது பெரிய பிரச்சினையளக் கொண்டந்துடும்; சோதினையில சின்னக் கணக்கக்கூட பெரிசா யோசிச்சு பெரியவழியளில செய்து பிழ விட வேண்டி வரலாம்; வாழ்க்கையில சின்னப்பிரச்சினையளப் பெரிசாக் கற்பனை பண்ணி வாழ்க்கையையே குழப்பிப்போடலாம்; உப்பிடி யோசிக்கிற ஆக்கள் பின்னாளில சரியாக் கஸ்டப்படுவினம்; வேலையளில பிழை விடுவினம்; உது கனக்க யோசிக்கிறதால தான் வாறது; உத இப்பவே தடுக்க வேணும்; தியானம் தான் நல்ல மருந்து.
அப்படியிப்பிடியெண்டு மனுசன் வெளுத்துக்கட்டுது. எனக்கு இந்தப்பிரச்சின வந்திருந்தா அந்தாளின்ர கதையக் கேட்டு நான் பயந்துபோயிருப்பன். (அதோட அந்தாள் சொல்லுற அவ்வளவு பிரச்சினையளும் எனக்கு வந்திருக்கக்கூடும்.) ஆனா நல்லகாலம் எட்மன் சிரிச்சபடியே கேட்டுக்கொண்டிருந்தான். அத அவன் கடுமையான பிரச்சினையா எடுக்கவேயில்ல.

அந்தக்குணம் தானோ என்னவோ, ரெண்டு காலும் போன பிறகும்கூட அவனால சைக்கிளோடவும் படகோடவும் முடிஞ்சுது.

*******************************

பின்னூட்டங்களோடு கூடிய மூலப்பதிவு

சிதையா நெஞ்சு கொள்-1

கோப்பு வகை: அனுபவம், ஈழம், போராட்டம் — maathahal @ 12:58 மு.பகல்

தங்கமணியின் பதிவில் முத்தையன்கட்டில் குளத்துநீரைப் பாவித்து மின்னுற்பத்தி செய்த ஒருவரைப்பற்றி எழுதியிருந்தார். அச்செய்தியை அதற்குமுன்பே புதினத்தில் பார்த்திருந்தேன். தங்கமணியின் பதிவைப்பார்த்த பின்தான் அதன் முக்கியத்துவைத்தை உணர்ந்தேன். இன்னும் சொல்லப்போனால் அந்த மனிதன் எனக்குத் தெரிந்தவனாயிருக்க வேண்டும். முகத்தைவிட பெருவிரலில்லாத வலது கைதான் எனக்கு ஆதாரமாய் இருக்கிறது. அந்த நபர் நான் நினைப்பவராக இருக்கும் பட்சத்தில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

முத்தையன்கட்டுக் குளத்தின் சீர் செய்யப்படாத மடைக்கதவுகளுக்குள்ளால் வெளியேறி கழிவுநீராக அநாவசியமாய்ப் போகும் நீரைப்பற்றி யோசித்திருக்கிறேன். இன்னும், இரணைமடுவின் வான்பாயும் நீரையோ, அல்லது சீரமைக்கப்படாத குளக்கட்டைக் கருத்திற்கொண்டு குளத்துநீரைத் திறந்து வெளியேற்றும்போது பெருக்கெடுத்துப்பாய்ந்து அநாவசியமாய்ப்போகும் நீரைப் பார்த்தும் பொருமியிருக்கிறேன்.

தேவைகள் தான் சில கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றன. அந்தவகையில் போர்க்காலத்தில் எங்கள் மக்களால் செய்யப்பட்ட சில புதுமைகளைப்பற்றிக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஜாம் போத்தல் விளக்கு.
இதைப்பற்றி நான் சுந்தரவடிவேலின் பதிவிற் சொன்னபோது, அவர் சாதாரண போத்தல் (Bottle) விளக்கென்று நினைத்துவிட்டார். அது சாதாரண விளக்குகளைவிட வித்தியாசமானது. எண்ணைய்ச் சிக்கனத்துக்காகத் தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டது.

1990 இன் ஆனியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் சிங்கள அரசுக்கெதிராகத் தொடங்கியது. போர் தொடங்கியவுடனேயே தமிழர் பகுதிகளில் பொருளாதாரத்தடை போடப்பட்டது. மருந்துப்பொருட்கள் கூடத் தடைசெய்யப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சுன்னாகத்திலிருந்த மின்நிலையமூடாக ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் என்ற அளவில் சுழற்சிமுறையில் மின்வினியோகம் செய்யப்பட்டது. (எங்கள் ஊருக்கு பகல் பத்துமணிக்கு வரும்). பொறுக்குமா சிங்கள அரசு? சில நாட்களிலேயே அந்தச் சுன்னாக மின்நிலையம் சிங்கள வான்படையாற் குண்டுவீசி அழிக்கப்பட்டது. அத்தோடு குடாநாடு முற்றாக இருளில் மூழ்கியது.

அப்போது, குடாநாடு முற்றாக வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. வன்னியுடன் இணையும் ஒரே பாதையான ஆனையிறவில் இராணுவம் குந்தியிருந்தது. மற்றைய பாதை பூநகரிப் படைமுகாமால் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுத்தம் ஆரம்பித்தவுடன் பொருட்களின் விலைகளனைத்தும் சடுதியாக உயர்ந்தன. அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றைக் காணவே கிடைக்கவில்லை. ஒருவருக்கு 100 கிராம் சீனி வீதம் கடையொன்றில் விற்கப்பட்டபோது, அதை வாங்க 300 பேர் வரிசையில் காத்திருந்த நாட்கள் ஞாபகமிருக்கிறது. அதில் சீனி வாங்குவதற்காகவே பாடசாலை போகாமல் சில சிறுவர்களும் அடக்கம்.

இந்த நேரத்தில் மண்ணெண்ணெய் பயங்கரத் தட்டுப்பாடு. ஒரு லீற்றர் 350 ரூபா விற்றது. (இத்தொகை அப்போது யாழ்ப்பாணத்தில் கணிசமான தொகை). எங்கள் ஊரில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்த மோட்டார் சைக்கிளோ காரோ ஓடி நான் பார்த்ததில்லை. அவ்வளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு. பெற்றோல் வாசனையையே மறந்துவிட்டிருந்தோம். எனக்கு ஞாபகமிருக்கிறது; நிலவு வெளிச்சம் இருக்கும் காலங்களில் எங்கள்வீட்டில் விளக்குக்கேற்றுவதில்லை. எங்கள் அயலிலும் தான். இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதைகள் சொல்லி விளையாடி, பாட்டுக்குப்பாட்டுப் போட்டி வைத்து, அம்மம்மாவிடம் கதைகேட்டுத் தூங்கிப்போக நேரம் சரியாக இருக்கும். (அந்த வயதில் அது இன்பமான பொழுதுகள்).

இப்படியான நேரத்தில் பத்திரிகைகளில் ஒரு விளக்கைப்பற்றிச் செய்தியும் அறிவித்தலும் வந்திருந்தன. தொடர்ச்சியாக சிலநாட்கள் அவ்விளக்கைப் பயன்படுத்தச்சொல்லி அறிவுரைகளும் வந்தன. அதுதான் ‘ஜாம் போத்தல் விளக்கு’. (இதைவிட வேறு பெயர் அந்த விளக்குக்கு இருந்ததாக நான் அறியவில்லை.)

சின்ன ஜாம் போத்தல் ஒன்றை எடுத்து அதற்குள் சிறிதளவு பஞ்சு வைத்து, கடுதாசியைச் சுருட்டிச் செய்த திரியைப் பாவித்து அந்தவிளக்குச் செய்ய வேணும். திரியைக் கவ்வ, நுனியில் சிறிய வளையம் கொண்ட கொழுக்கியொன்றைப்பாவிக்கலாம். அக்கொழுக்கி போத்தலின் விளிம்பில் கொழுவப்பட்டிருக்கும். (இதற்கெல்லாம் சைக்கிளின் வால்வ் கட்டை தான் சிறந்ததாகக் கருதப்பட்டது. அந்த நேரத்தில் பழைய சைக்கிள் ரியூப்புக்களுக்கும் சரியான மரியாதை.) ஏறக்குறைய போத்தலின் அரைவாசிக்கும் சற்று மேலாக திரி முடிவடையும். பஞ்சில் ஊறக்கூடியவாறு மண்ணெண்ணெய் விட வேண்டும். பஞ்சில் ஊறிய எண்ணெய்தான் கடுதாசி வழியாக எரிகிறது. மண்ணெண்ணெய் பஞ்சில் ஊறும் அளவுக்கு மட்டுமே விடப்படவேண்டும்.

இந்த விளக்குத்தான் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பாவிக்கப்பட்டது. இதையே ஹரிக்கேன் விளக்குப்போல மேலே மூடியும் கைபிடியும் வைத்து விதம்விதமாக விளக்குகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தன. யாழ்ப்பாணத்தில் அந்நேரத்தில் அவ்விளக்குப் பாவித்த ஆக்களுக்கு அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

என்னைப்பொறுத்தவரை இது எண்ணெய்ச்சிக்கனத்தைச் சரிவரச் செய்தது. எல்லா மக்களுமே இவ்விளக்கின் பயனை நன்கு உணர்ந்திருந்தனர். பின்னர் கொஞ்ச நாளில் உப்புப்போட்டால் எண்ணெய் இன்னும் சிக்கனப்படுத்தப்படும் என்ற கதையொன்று ஊரில் உலாவியது. (சும்மா கதைவழிதான்) கிட்டத்தட்ட எல்லோருமே பஞ்சின்மேல் உப்புப்போட்டுப்பாவித்தோம். ஆனால் உப்புப்போடுவதால் எண்ணைய்ச் சிக்கனமுண்டு என்பது எவ்வளவுதூரம் உண்மையென்று தெரியாது. அதை நாம் உணரவுமில்லை. அதற்குரிய விளக்கங்கள் ஏதுமிருப்பதாக நான் அறியவுமில்லை. ஆனால் இந்த விளக்கு மூலம் நாம் எண்ணையை மிச்சப்படுத்தலாமென்று நன்கு உணர்ந்துகொண்டோம்.

கிட்டத்தட்ட ஒருவருடம் அந்தவிளக்கு மட்டுமே பாவிக்கப்பட்டு, பின் ஏனைய விளக்குகளோடு கலந்து பாவிக்கப்பட்டு வந்தது. (பின் எண்ணைய்த் தட்டுப்பாடு ஓரளவு குறைந்திருந்தது.) யாழ் இறுதி இடப்பெயர்வு வரை எங்கள் வீட்டில் முதன்முதல் செய்த ஜாம்போத்தல் விளக்கு பாவனையிலிருந்தது. (இதற்கிடையில் 3 இடப்பெயர்வு நடந்தாலும் அவ்விளக்கு எங்களோடு கூடவே பயணித்தது.)

இந்தவிளக்கு மூலம் மாதத்துக்கு வெறும் 250 மில்லி லீற்றர் எண்ணெய் அளவுக்குத்தான் சேமிக்க முடிந்திருக்கும். இன்றைக்கு எல்லோருக்குமே இது வெறும் தூசு என்ற அளவுதான். ஆனால் அன்றைய நிலையில் பெரிய பெறுமதி அதற்கிருந்தது. பகலில் பஞ்சிலுள்ள எண்ணெய் ஆவியாகிப் போய்விடக்கூடாதென்பதற்காய் விளக்கை மூடிவைக்கும் காலம் அது. திரியாகப் பயன்படுத்தப்பட்ட காகிதத்துண்டு மாற்றப்படும்போது, பழைய கடுதாசித்துண்டைக் கசக்கிப் பிழிந்து எண்ணைய் எடுப்போம்.

இந்த ஜாம் போத்தல் விளக்கை யார் வடிவமைத்தார்களோ தெரியாது. எனினும் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருவராலும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

இதுதான் ஜாம் போத்தல் விளக்கின் கதை. கதையைச் சரியாகச் சொன்னேனா தெரியவில்லை. குறிப்பாக எண்ணெய்த் தட்டுப்பாட்டைச் சரியாக வெளிப்படுத்தினேனா தெரியாது.
இப்பதிவை இப்போது எழுதத் தூண்டிய சிறிரங்கனுக்கு நன்றி.
மேலும் தங்மணியின் தலைப்பையே நானும் பாவித்ததால் அவருக்கும் நன்றி.
-வசந்தன்-

Jam bottle lamp

படஉதிவி: குழைக்காட்டான்.

*****************************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு.

இறுமாப்பின் இமயம்.

கோப்பு வகை: ஈழம், போராட்டம் — maathahal @ 12:55 மு.பகல்

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.

1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.

இரவிரவாக நீண்டதூரம் நீந்தி “இறக்க கண்டி” எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.

இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.

மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.

ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.)

கரும்புலிகள் நாளான இன்று நூற்றுக்கணக்கான சரித்தரங்களில் ஒன்றான கரும்புலி கப்டன் பாலனையும் அவனது இந்நெஞ்சையுருக்கும் சம்பவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அதேநேரம் இதுவரை வீரச்சாவடைந்த 265 கரும்புலிகளுக்கும் வெளிவராமல் உறங்கும் ஏனையவர்க்கும் இதய அஞ்சலிகள்.

கடற்கரும்புலி கப்டன் பாலன்
சோமசுந்தரம் திலீபன்.
மட்டக்களப்பு.

*********************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

போராட்டத்தில் பாடகனும் நடிகனும்.

கோப்பு வகை: ஈழம், போராட்டம் — maathahal @ 12:50 மு.பகல்

இன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.

அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.

சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.

அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.

இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.

போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.

நகுலனையும் அவனோடு விரச்சாவடைந்த கண்ணாளனையும் நினைந்து பாடும் பாடல்

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

ஈழப்போராட்டத்தில் சாட்சியங்கள்.

கோப்பு வகை: ஈழம், போராட்டம் — maathahal @ 12:43 மு.பகல்

ஈழப்போராட்டத்தில் இது ஒரு சாட்சியம்.

இனவாத அரசின் செயற்பாடுகளால் எழும் வன்முறைகள் அடிமனத்தின் ஆழத்தில் புதையுண்டு போய், அதுவே சந்ததி வழியாகக் காவிச் செல்லப்பட்டு இயலுமை உண்டானபோது வெளிப்போந்து வீரியம் பெறுகின்றது. என் மகனும் இவ்வெளிப்பாட்டின் ஒரு குறியீடே. இவன் போராடப்போனபோது நான் எனக்குள் வருந்தியதுண்டு. போராடப் போய்விட்டான் என்பதற்காக அன்று. எனக்குச் சொல்லாமல் போய்விட்டான் என்பதற்காக. அது அவனுக்கும் தெரியும். ஒருநாள் விளையாட்டாக அவன் ‘அம்மா நான் போராடப் போறன்’ என்றான். நானும் நாடகப் பாணியில் ‘மகனே நான் உனக்கு என்ன குறையடா வைத்தேன்?’ என்றேன். ‘எனக்குத் தமிழீழம் இல்லாத குறைமட்டுந்தான்’ என்றான்.ஒவ்வொரு போராளியின் பின்னணியிலும் ஒரு சரித்திரமுண்டு. கேணலாக இருந்தாலும் சாதாரணப் படைவீரனாக இருந்தாலும் உணர்வு நோக்கம் ஒன்றுதான். அந்தப் பிஞ்சு உள்ளத்தின் ஆதங்கத்தை நான் மதித்தேன். ஒருநாள்… ஒரேயொருநாள் அவனைத் துப்பாக்கியேந்தியவனாய்ச் சீருடையிற் பார்க்கத் துடித்தேன். கல்மடுவில் நிற்பதாய் ஒரு செய்தி. கைநிறையப் பலகாரம் கொண்டு ஓடிப்போனால் கால்மணி நேத்துக்கு முன்னரே முகாம் கைவிடப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளும் மக்களும் வீதி திருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியில் நான் வேறு வேலையாகப் போனேன். அறிமுகமான ஒருவர் ‘உங்கட மகன் இப்பதான் உந்த ரைக்ரரில போறார்’ என்று கூற, என் முழுச்சக்தியையும் கொடுத்து மிதிவண்டியைச் செலுத்தினேன். வளைவுகள் நிறைந்த காட்டுப்பாதை. உழவு இயந்திர ஓசைகேட்டுக் கொண்டேயிருந்து ஒருகட்டத்தில் மறைந்துவிட்டது. ஏமாற்றத்தோடு மீண்டேன்.

“ஓமந்தையில உங்கட மகனை இப்ப கண்டனான்” ஒரு போராளி கூறினான். பலகாரம் செய்ய ஏது நேரம்? பத்து ரொபி வாங்கிக்கொண்டு ஓடினேன். அவர்கள் சாப்பிட்ட இலையை நாய் நக்கிக் கொண்டிருந்தது. அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. இப்படிப் பலமுறை. அவனைப் பார்ப்பேனென்ற நம்பிக்கை எனக்கு.

அவனை ஈச்சங்குளத்தில் புலிக்கொடி போர்த்து நாலு புலிவீரர்கள் தூக்கிவர ஒரு மலர்மாலையுடன் அவனை நிச்சயம் சந்திப்பேன். அந்தத் துணிவை, மனவலிமையை எனக்குத் தா என்று இறைவனை எந்நாளும் பிரார்த்தித்தேன்.

எனக்கு அந்தத் துணிவைத் தரமுடியாது என இறைவன் நினைத்தானோ என்னவோ இந்தக் காட்சியும் என் கனவோடு முடிந்துபோயிற்று. ஆகாயக் கடல்வெளிச் சமரிலே அவன் ஆகுதியான செய்தியும் எனக்கு ஆறுதலாகத் தான் வந்தது.

என் மகன் இறந்துபோகவில்லை. சீருடை தரித்த ஆயுதம் தாங்கிய ஒவ்வொரு போராளியின் உள்ளேயும் அவன் வாழ்க்கிறான். அதுதான் உண்மை.
அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். வாழ்கிறேன், வாழுவேன். அவர்களுடைய விருப்பமே என் விருப்பம். புதிராகிப்போன என் மக்களைப்பற்றி நான் புலம்பியதில்லை. பொல்லாத உலகம் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. கல்லான மனமென்று காறி உமிழ்ந்தது.
——————————————–
——————————————–

இது தற்போது முழுநேரப் போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் போராளி, ஆசையாய் வளர்த்த மகனை போராட்டத்தில் களப்பலியாகக் கொடுத்த தாயொருத்தி, அந்த வீரச்சாவின் பின்னரும், இறந்தவனுக்கு நேர் மூத்தவன் தானும் போராடப்போவதாகக் கேட்டதால் தானே கொண்டுசென்று இயக்கத்திலிணைத்த தாயொருத்தி, எழுதிய சாட்சியம்.

‘தமிழ்க்கவி அம்மா’ என ஆசையாக அழைக்கப்படும் இவர் ஓர் எழுத்தாளர், கலைஞர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். பத்ரி அவர்கள் முன்பு தெல்கா வெளியிட்ட கட்டுரையைப் பற்றி எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்த அதே தமிழ்க்கவி தான். தெல்காவும் இவரது செவ்வியை வெளியிட்டிருந்தது.

ஈழப்போராட்டத்தில் இவையும் சாட்சியங்கள்தாம்.
இன்றும் தடம்புரளாமல் இயங்கும் சாட்சியங்கள்.
————————————————-

‘இனி வானம் வெளிச்சிரும்’ என்ற ஒரு படைப்பு இவரால் வெளியிடப்பட்டது. அதில்வரும் பார்வதி இவர்தான். ஒரு ஏழைத்தாயின் வாழ்க்கை, போராட்டம் என்பன அழகாகச் சொல்லப்பட்ட நவீனம்.
புனைவற்ற உண்மைக் கதை.
இதை வாசித்த யாராவது அறிமுகம் (அல்லது விமர்சனம்) செய்யலாம்.
டி.ஜே. இப்படைப்பைப் பற்றியெழுதலாம்.
எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
————————————————
படஉதவி: தெல்கா

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.