வசந்தனின் பக்கம்

ஜூன் 27, 2006

காதலும் கடவுளும்.

Filed under: கதை, பொது, மதம், விமர்சனம் — maathahal @ 12:03 பிற்பகல்

பனங்காட்டு முனிவன் மதவடியில் வசந்தனுக்கு அருளிய அருளுரை.
ஒருநாள் தற்செயலாக் கிடைத்த தரிசனத்தைச் சரியாகப் பயன்படுத்திய வசந்தன், தன் சந்தேகங்களைக் கேட்டு ஒரு மதவடியில் ஞானம் பெற்றான்.

ஐயா! எனக்கொரு சந்தேகம்.
கேள் மகனே கேள். சந்தேகப்படுவதால்தான் இன்னும் நீ மனிதன்.
ஐயா! கடவுள் இருக்கிறாரா இல்லையா?
ஹஹஹஹஹ. எவ்வளவு காலமாய் இதுபற்றி யோசித்திருக்கிறாய்?
நீண்டகாலமாகவே எனக்குள்ளிருக்கும் சந்தேகமிது. உங்களிடம் தெளிவு கிடைக்குமா?
ஹஹஹ. நீ ஒரு முட்டாள். ஆம் கடவுள் பற்றிச் சிந்திப்பவனையெல்லாம் முட்டாள் என்றுதான் சொல்வேன். காதலும் கடவுளும் ஒன்று. இரண்டுமே முட்டாள்தனங்கள். உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
சின்ன வயதில் இருந்தது.இப்போது?சொல்லத்தெரியவில்லை. நீண்டகாலமாக வழிபடுவதில்லை.
ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையாவென்று குழப்பமாயிருக்கிறது சரியா?
ஆம் குருவே. இதுபற்றி உங்கள் நீண்ட விளக்கத்தைக் கேட்க ஆவலாயுள்ளேன்.

தம்பி! மனித மனம் விசித்திரமானது. ஏகப்பட்ட முரண்களைக்கொண்டிருக்கும் சங்கதிகளையே எந்தக் கேள்வியுமில்லாமலும் குழப்பங்களில்லாமலும் அசைபோடப் பழகிக்கொண்டது. நான் உன்னைக் கேட்கிறேன். கடவுள்தான் பூமியைப்படைத்தார் என்றால், பூமியின் தோற்றம் பற்றிய விஞ்ஞானக் கோட்பாடுகளை முற்றாக நிராகரிக்கத் தயாரா?
கடவுள்தான் மனிதகுலத்தைப் படைத்தாரென்றால், டார்வினின் கொள்கைகள், அவரின் கோட்பாடுகள் எல்லாவற்றையும் நிராகரிக்கத் தயாரா?
கடவுளின் படைப்புக்கொள்கையை கவனத்திலெடுக்காமற் செயற்படும் விஞ்ஞானத்தின் இற்றைவரையான முன்னேற்றத்தை நிராகரிக்கத்தயாரா?

அதெப்படி முடியும் ஐயா?
ஆம். முற்றாக மறுதலிக்க முடியாமல் ஆனால் கடவுளின் படைப்புக் கொள்கையை நம்பிக்கொண்டு, குறைந்தபட்சம் கடவுள் இருக்கிறாரென்று நம்பிக்கொண்டு இருக்கும் மக்கள் கூட்டம் பெரியது. இதில் எந்தத் தவறுமிருப்பதாகப் படவில்லை. பாடசாலையில் மூன்றாம் வகுப்பிலேயே எமது இந்த இரட்டை நிலைப்பாடு தொடங்கிவிடுகிறது. சமயபாடத்தில் இறைவனின் படைப்புத்திறன், காக்கும்திறன் என்று படித்துக்கொண்டு, அதேநேரம் சுற்றாடல் பாடத்தில் மனிதன் குரங்கிலிருந்துதான் தோன்றினான்; அவனது மூதாதையர் ஹோமோ சேப்பியன்ஸ், ஹோமோ நியண்டதால் என்று படங்களோடு விலாவாரியாகப் படிக்கத் தொடங்குகிறோம். மனித மனம் இந்த இரு முரண்களையும் பற்றிச் சிந்திப்பதில்லை. அப்படியே இருந்துவிட்டுப்போக வேண்டியதுதானே. பிறகேன் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வு?

கடவுட் கொள்கையைப் பலமாக ஆட்டம்காண வைப்பதற்குத் தொடக்கம் வானியல்தான். வானியலின் வளர்ச்சிதான் மதங்களுக்கு முதல் எதிரியாயிருந்தது. பின் பலவிதயங்கள் தெளிவாகியது. அந்த வானியலிற்கூட கடவுள் பக்தியுள்ளவர்கள் நிறையப்பேர் இருந்திருக்கிறார்கள். ‘கல்பனா’ எனும் இந்தியப் பெண்ணொருத்தி ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்றாள். ஆனால் மீண்டு வரவில்லை. அவள் இறுதியாக விண்ணிலிருந்து அனுப்பிய தொலைநகல் மிக உருக்கமானது. வரிக்குவரி கடவுள் துதிபாடும் அக்கடிதம், அவளது நம்பிக்கைகளின் வெளிப்பாடு. விண்ணிலிருந்து வானியல் ஆராய்ச்சியாளினியொருத்தி கடவுள் துதிபாடி வரைந்த அம்மடல் யாருக்கும் குழப்பத்தையூட்டவில்லை. அதுதான் தனிமனித நம்பிக்கை. நம்பிக்கை வேண்டியவர்கள் கடவுள் என்றொரு பாத்திரத்தை, உருவத்தை நினைத்து மன்றாடுகிறார்கள், நன்றி சொல்கிறார்கள்.

ஐயா! அப்படியானால் விஞ்ஞானம், கடவுள் பற்றி ஏன் எதுவும் கூறவில்லை?

அது தன் வாதங்களையும் எடுகோள்களையும் நிருபிப்பதிலேயே குறியாக உள்ளது. கடவுள் உண்டு என்றும் சொல்லவில்லை. இல்லையென்றும் சொல்லவில்லை. கடவுள் பற்றி கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் அது தன் வழியிற்செல்கிறது. இந்த அசட்டையே கடவுள் இல்லையென்பதன் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். தன் கோட்பாடுகளுக்கு ஏறக்குறைய நிறைவான ஆதாரங்களைக் காட்டிவிட்டது. பலவற்றை நிரூபித்தும் விட்டது. இன்னும் முயன்று கொண்டிருக்கிறது.

அப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்?
கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை என்பதெல்லாம் தேவையற்ற வாதங்கள். பரிணாமக்கொள்கையில் வேருன்றி அதன் வழியிலேயே ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானிகூட கோயில் சென்று கடவுளைத் தொழக்கூடும். அவன் தன் தொழிலில், கடமையில், ஆய்வில் கடவுளை எந்தச் சந்தர்ப்பத்திலும் தொடர்புபடுத்த மாட்டான். இரண்டும் வெவ்வேறு தளங்கள். எமது மனம் இரண்டையுமே குழப்பமில்லாமற் கையாளும் தகமை பெற்றது. ஆகவே நீ குழம்பாதே.
கடவுள் இல்லையென்று நம்பினால் அது சரிதான்.
கடவுள் இருக்கிறாரென்று நம்பினால் அதுவும் சரிதான்.
ஆனால் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ந்தால் அதுதான் தவறு. கூடவே முட்டாள்தனமும் கூட.

சரி ஐயா!காதலையும் கடவுளையும் எப்படிச் சம்பந்தப்படுத்துகிறீர்கள்?
சரியாகக் கேட்டாய்.இரண்டிலும் அறிவைப் பிரயோகிக்கக் கூடாது.
காதலை வைத்தே உனக்கு நானிதைத் தெளிவிப்பேன்.
காதலில் அறிவுபூர்வமாய் யோசித்தால் என்ன நடக்கும்?
காதலி இருந்துவிட்டுப்போன இருக்கையில் தானும் இருந்து லயிப்பது,
அவள் மூக்குச்சளி சீறி எறிந்துவிட்டுப்போன கைக்குட்டையை எடுத்துப் பத்திரப்படுத்துவது,
அதில் காதலியின்முகம் பார்ப்பது,
அதனால் முகத்தைத் துடைத்து காதலி முத்தம் தருவதாகப் பரவசப்படுவது,
அவள் தலையிலிருந்து விழுந்து பூவொன்றை மாதக்கணக்கிற் பத்திரப்படுத்தி அப்பூவோடு பேசுவது
என்று சினிமாத்தனமான செய்கையெல்லாம் செய்ய முடியாது. அறிவைப்பாவித்தால் இவையெல்லாம் முட்டாள்தனமாயும் சிறுபிள்ளைத்தனமாயும் தோன்றும்.
ஆனால் இப்பிடிச் சிந்தித்தால் உன்னால் காதலின் இன்பத்தை அடையமுடியாது. கூடவே காதலியையும் அடையமுடியாது. ஆக காதலில் முட்டாள்தனங்களும் சிறுபிள்ளைத்தனங்களும்தான் தேவை. கூடவே மனித இனத்தின் தொடர்ச்சிக்கும் இது தேவை.
ஆகவே காதலில் அறிவுபூர்வமாய்ச் சிந்திப்பது எவ்வளவு முட்டாள்த்தனமோ,அதுபோலவே கடவுள் விதயத்தில் அறிவைப்பாவிப்பதும் முட்டாள்த்தனமானது. கடவுள் பற்றிச் சிந்திப்பதற்கு சிறிதளவாவது உமது மூளையைப் பயன்படுத்தாதே.
நினைப்பதற்கும் சிந்திப்பதற்குமுள்ள வேறுபாட்டை உனக்கு நான் தெளிவிக்கத் தேவையில்லை.

நன்றி ஐயா! பூரண தெளிவு பெற்றேன். வருகிறேன். அதற்குமுன் ஒரு கேள்வி. உங்கள் பெயர் என்ன?
ஹஹஹஹஹா. யாம் பலபேரில் உள்ளோம். உனக்குத் தரிசனம் தரும்போது என்பெயர் ‘வன்னிய முனிவன்’. வீடு அங்கே இருக்கிறது. இந்தப்பக்கம் ஏன் போகிறாய்?

கடவுள் இல்லையென்று நான் நினைத்துக்கொண்டிருந்த கூற்று உண்மையானால் பத்துத் தேங்காய் உடைப்பதாக அந்த மூலைக்கோயிலில் வேண்டுதல். இப்போ கடவுள் இல்லையென்ற என்கூற்றுப் பலித்துவிட்டது. அதுதான் அந்த நேர்த்தியைச் செய்யப்போகிறேன்.

ஹஹஹ. விளையாட்டுப் பிள்ளையடா நீ.

*********************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

சாதீஈஈயம்

இதை ஒரு ‘இயம்’ ஆக்கிக் கதைப்பதே சரியா தெரியாது. ஆனால் அவ்வளவு தூரத்துக்கு முக்கியமானதுதான் இது. இங்கே சாதி பற்றிய என் அனுபவங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே. இது ஆராய்ச்சியோ அறிவுரையோ அன்று என்பதை முதலிற் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏற்கெனவே தமிழோடு பட்டபாடு போதும். என் அனுபவங்கள் என்று சொல்லிவிட்டதால் நான் சார்ந்த தளத்தை மட்டுமே என்னாற் சொல்ல முடியும். எனவே அந்தத்தளம் இங்கே பலருக்குப் பிடிக்காததாயிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.

யாழ்ப்பாணத்தின் கிராமமொன்றுதான் என் சொந்த ஊர். எனது காலத்தில் சாதி ஒடுக்குமுறையென்பது என் கிராமத்தில் இருந்ததாக நினைவிலில்லை. ஆனால் வேறுபாடுகள் நன்றாகவே இருந்தன. மேல் சாதியென்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்தச் சாதியும் இருந்ததில்லை. (இது என் கிராமத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு இடங்கள் பற்றி அந்தச் சின்ன வயசில் எனக்குத் தெரியாது) ஆனால் குறிப்பிட்ட ஆக்கள் வீதியால் வரும்போது காவோலை கட்டி இழுத்து வரவேணும் என்ற நடைமுறை முன்பு இருந்ததாக என் பாட்டன் பரம்பரை சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. என் காலத்தில் அது அறவே இருந்ததில்லை. ஏன் தந்தை காலத்திலும் அது இருந்ததில்லையாம்.

எங்கள் கிராமத்தில் எல்லாக் கிணறுமே குடிப்பதற்குப் பாவிப்பதில்லை. சமைப்பதற்குப் பாவித்தாலும், குடிப்பதற்குச் சில குறிப்பிட்ட கிணறுகளையே பாவித்தார்கள். (ஆனால் உண்மையில் எல்லாக் கிணறுமே குடிக்கக் கூடிய தண்ணீருள்ள கிணறுகள் தான். சுவைக்காகத்தான் இப்படி கிணறுக்கு அலைவது. தண்ணீருக்குச் சுவையில்லையென்று விஞ்ஞானம் பேசாதீர்கள். சுவையிருக்கிறது. இது எந்தக் கிணத்துத் தண்ணீரென்று என்னாற் சுவைத்துப்பார்த்துச் சொல்ல முடியும்.) முந்தி தண்ணீர் எடுப்பதில் சாதிச் சண்டைகள் வந்ததாம். ஆனால் என் காலத்தில் எல்லாருமே தண்ணீர் அள்ளினார்கள். குறிப்பாகக் கோயில் கிணறுகள் எந்த நேரமும் எல்லாருக்காகவும் இருக்கும். கோயில் வளவுக் கதவுகள் இரவிற்கூடப் பூட்டப்படுவதில்லை, தண்ணீர் அள்ளுவதற்காக. ஆனால் திருமணங்கள் என்று வரும்போது சாதி நிச்சயமாய்ச் சம்பந்தப்படும்.

தொழில் முறைமூலம் பிரிக்கப்பட்ட சாதி தொடர்ந்து வருவதற்கு மதங்களின் பங்கு அளப்பரியது. இன்னும் சாதியம் வேரூன்றி இருப்பதற்கும் மதங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது என் கருத்து. நான் என் ஊரில் சாதி பற்றி அறிந்த கதை இதுதான்:கரையார், பள்ளர், வேளாளர் என்று சனம் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒருநாள் என் தாயிடம் கேட்கிறேன்:
“அம்மா! கரையார், பள்ளர் எண்டா ஆரம்மா?”
என் தாய் எனக்களித்த பதில் இதுதான்.
“செவத்தியார் கோயில்காரர் பள்ளர், தொம்மையப்பர் கோயில்காரர் கரையார், அந்தோனியார் கோயில்காரர் வெள்ளாளர். இப்ப விளங்கீட்டுதோ?”
ஓமெண்டு தலையாட்டினன். தொழில்களைக் குறித்து எனக்கு சாதி சொல்லப்படவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், ‘அப்ப உதில எந்தத் தொழிலும் செய்யாமல் அரசாங்க வேல மட்டும் பாக்கிற நாங்கள் என்ன சாதி?’ என்று கேட்டிருப்பேன் என்று என்தாய் நினைத்தாளோ தெரியாது.

இப்படித்தான் இந்து மதத்திலுமிருந்தது. சாதிக்கொரு கோவிலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளை சாதிக்கொரு புனிதரை அல்லது கடவுளை வைக்கவில்லை. எங்களுரில் வெள்ளாளருக்கு இருக்கும் அந்தோனியார் பக்கத்து ஊரில் கரையாருக்கு. புனிதர்கள் தப்பித்தார்கள். தொழில்கள் மாறி எல்லாரும் தமக்கு வசதிப்பட்ட தொழில்களைச் செய்யத்தொடங்கிய பின்னும், ஏராளமானோர் அரசாங்க வேலையும் தனியார் வியாபார நிறுவனங்களிலும் வேலை செய்யத் தொடங்கிய பின்னும், இன்னும் அந்தத் தொழில்முறைச் சாதி பலமாக உயிரோடிருப்பதற்கு மதங்கள் முக்கிய காரணம்தான். நேரடியாகச் சாதி பற்றிப் பேச முடியாமல் இப்பிடித்தான் எங்களுரில் பேசிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக வேறோரு ஊரிலிருக்கும் ஒரு கரையாரைப் பற்றிப் பேசும்போது,
“அவயள் தொம்மையப்பர் கோயில் ஆக்களெல்லோ.”
எண்டு சொல்லுவினம். ஆனா அந்த ஊரில அப்பிடியொரு கோயிலே இருக்காது. எங்கட ஊர்க் கோயில வச்சே எல்லா இடத்து ஆக்களையும் குறிப்பினம்.

சொந்த ஊரிலயிருந்து 1992 இல இடம்பெயர்ந்து மானிப்பாயில வந்து இருந்தம். ஏராளமான சனம் மானிப்பாய்க்குத்தான் வந்தது. முதல் பள்ளிக்கூடங்களில எல்லாரும் கலந்து ஒண்டாத்தான் ஒரு பிரச்சினையுமில்லாம இருந்தவை. பிறகு அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன. பிரதானமா மூன்று முகாம்கள். இவற்றில் இரண்டு பெரிய முகாம்கள். அவற்றில் சாதி மதப்பிரச்சினையில்லாமல் எல்லாரும் ஒன்றாகவே இருந்தார்கள். அதில் தனியே ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் எல்லாரையும் குடியமர்த்தினார்கள். இறுதிவரை பிரச்சினையில்லாமலிருந்தது. ஆனால் மூன்றாவதாக அமைக்கப்பட்ட முகாம் தான் சிக்கலைத் தந்தது. அதில் ஆக முப்பது வரையான குடிசைகள்தான். மிகச் சிறிய முகாம். ஆனால் அவ்வளவு பேரும் ஒரே ஊர் அக்கள். அதாவது என் கிராமத்தவர்கள். அதுவும் ஓரே மதத்தவர், ஆனால் இரு சாதிக்காரர். குடிசைகள் அமைக்கும்போதே பிரச்சினை தொடங்கி விட்டது. குடிசை ஒழுங்குகளை மாற்றித் தருமாறு பிரச்சினை. என்னவென்றால் தாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கப் போவதாக இரு தரப்புமே சொன்னார்கள்.

அந்த முன்று முகாம்களுமே மானிப்பாய் அந்தோனியார் கோவில் பங்கு நிர்வாகத்தின்கீழ்தான் இருந்தன. பங்குத்தந்தை இதை ஒப்பிவில்லை. எல்லாரும் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார். ஆனால் சில ‘பெரியவர்கள்’
“சுவாமி! உங்களுக்கேன் பிரச்சின. நாளைக்கு இதுகள் தங்களுக்க ஏதும் பிரச்சினப் பட்டா அது உங்களுக்குத்தானே இடைஞ்சல். பேசாம அவயள் சொல்லிற மாதிரியே விட்டிடலாம்.”
என்று சொல்லி சம்மதிக்க வைத்தாயிற்று. குடிசை ஒழுங்குகள் மாறின. ஒரே பாதை ஒரே ஒழுங்குமுறை என்று இருந்தும் முகாம் இரண்டாகவே இயங்கியது. திடீரென இடையில் வேலி முளைத்தது. இரண்டு பாதைகள் வந்தன. முகாமுக்கு இரண்டு நிர்வாகம் வந்தது. வெறும் முப்பது குடிசைகளுக்குள் ஊரில் நடந்த அத்தை கூத்துக்களும் நடந்தன. நல்ல வேளை பெரியளவு பிரச்சினைகள் வரவில்லை. மனத்தளவில்தான் அந்தப் பிரச்சனை.

ஆனால் யாழ் இடப்பெயர்வின் பின் வன்னிவந்தபின் இந்த நிலைமைகளில் மாற்றம் வந்தது உண்மை. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் அவர்களை மாற்றிவிட்டதோ என்னவோ. இங்கே சாதிப்பிரச்சினை, வேறுபாடு முற்றாகக் களையப்பட்டதாக நான் சொல்ல வரவில்லை. யாழில் இருந்த நிலைமை நிரம்பவே மாறிவிட்டது. வன்னிக்குள்ளே கூட நிறைய இடப்பெயர்வுகள். இதிலே எதைச் சொந்தம் கொண்டாட முடியும்? அகதிகள் சம்பந்தமாக வேலை செய்தவன் என்ற முறையில் இந்த மாற்றங்களை என்னால் உறுதியாகப் பதிவு செய்ய முடியும். அகதிமுகாம்களில் பல காதல் திருமணங்கள் கூட நடந்ததுண்டு. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றிக் காதலர்கள் கவலைப்படவில்லை. தமிழீழக் காவல்துறை தான் அவர்களின் நம்பிக்கை. குடும்பம் நடத்தும் பொருளாதார பலம் இருக்கும் பட்சத்திலும் வயது சரியாக இருக்கும் பட்சத்திலும் காதல் கைகூடும். தமிழகத்திலும் இங்கேயும் காவல்துறைக்கு இது ஒரு முக்கிய பணிபோலும்.

ஒருவர் சொன்னார்:
“உவங்கள் ஒரே சாதிக்குள்ள அல்லது மதத்துக்குள்ள காதலெண்டா ஏனோ தானோவெண்டு இருப்பாங்கள். ஆனா சாதிமதம் மாறியெண்டா விழுந்தடிச்சு தலையில தூக்கிவச்சு ஆடுவாங்கள்.”
எனக்கு இந்தக் குற்றச்சாட்டு உண்மையாகப் படவில்லை. அவர்கள் காதலை ஆதரிக்கிறார்களா வரவேற்கிறார்களா என்பதைத் தாண்டி அதை அவர்கள் சாதி மதங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகப் பார்க்கிறார்கள் என்பது தெளிவு. பல போராளிகளின் திருமண பந்தம் இவற்றைத்தாண்டி நடந்ததால் சொந்த தாய் தந்தையரின் உறவுகூட இல்லாமல் இருப்பதும் நான் கண்டுள்ளேன். புலிகளின் திருமண முறைகூட (திருமணச் சடங்கு) இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தவிர்க்க முடியாமல்தான் அவற்றிற் கலந்து கொள்கிறார்கள்.

மதங்களின் ஆதிக்கத்தை மக்களிடத்திற் குறைப்பது முக்கியமானது. ஆனால் புலிகளாற்கூட அதைச் சரிவர செய்யமுடியவில்லை. ‘இம்’ என முன் பிரச்சனை வந்துவிடும். (ஆனால் மாவீரரின் வித்துடல் விதைப்பு விடயத்தில் மட்டும் எந்த சமரசத்துக்கும் இடங்கொடாமல் அவர்களால் இருக்க முடிகிறது.) சாதிப்பிரச்சினையும் மதங்களோடு பின்னிப்பிணைந்திருப்பதால் அவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பது என் அவதானம்.

வன்னியில் வெளிப்படையாக சாதி பற்றிக் கதைத்தாலோ இன்னொருவரைச் சாதிப்பேர் கொண்டு திட்டினாலோ அது பிரச்சினைக்குரிய விசயம்தான். மனத்தில் என்ன இருந்தாலும் வெளிப்படையாகப் பேச முடியாது. இது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகள் சிறுவர்கள் சாதிப்பெயர்களைக் கேட்டும் அதன் வசவுகளைக் கேட்டும் வளரும் சந்தர்ப்பங்கள் குறையும். வன்னியில் இளைய சமுதாயம் எப்படியும் களத்தில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். எல்லைப் படையாகப் போயிருக்கிறோம். பெரிய தாக்குதல் நேரங்களில் ஆயுதங்கள் கைப்பற்றல், இராணுவ உடல்களை அப்புறப்படுத்தல், காயக்காரரை அப்புறப்படுத்தல், வழங்கல்களைச் செய்தல், உணவுப்பொதிகளை வினியோகித்தல் என நிறையக் களப்பணிகளைச் செய்திருக்கிறோம். இரத்ததானம் நிறைய. இவற்றிலெல்லாம் இளைய சமுதாயத்திடம் வழமையைவிடப் புரிந்துணர்வொன்று அதிகமாய் ஏற்பட்டிருந்தது, குறிப்பாக எல்லைப் படையாகக் கடமைக்குச் செல்லும்போது. நண்பர்கள் வட்டமென்பது மிகமிக விசாலமானது. சாதியைக் கருத்திற்கொள்ளாதது. யாழ்ப்பாணத்தில் இன்றும்கூட நண்பர்கள் வட்டம் சாதியைக் கருத்திற்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எம்மக்கள் மத்தியில் மதவேறுபாட்டைப் பிரச்சினையாகக் கொள்வதிலும்விட சாதிவேறுபாட்டைப் பிரச்சனையாய்க் கொள்வது சற்று அதிகம்போல் நான் உணர்கிறேன். ஆனால் காலப்போக்கில் இந்தப்பிரச்சனை ஒழியலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. என் நம்பிக்கை வன்னிதான். அங்கு ஓரளவுக்கு எல்லாருக்கும் சமமான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதைக் காணலாம். ஏதோ தம்மாலியன்றவரை புலிகள் சமூகக் கட்டமைப்பைப் பேணுகிறார்கள். முன்பு வன்னியில் பிச்சையெடுக்கும் சிறுவர் சிறுமிகளைக் கண்டிருப்பீர்கள். அது ஒரு கட்டத்தில் பெருகத்தொடங்கியது. ஆனால் இன்று அறவே அந்த நிலையில்லையென்பதை உறுதியாக் கூறுவேன். ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிட்டு நான் வன்னிபற்றிப் பெருமைப்படும் விசயங்களில் இதுவுமொன்று.

அத்தோடு அனைத்துத் தொழில்களுக்கும் இயன்றவரை உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். சீவல் தொழில் செய்பவர்களுக்கு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. அவர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேல் ஒரு சீவல் தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தொழிலின்போதான இறப்புக்கு அக்குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது. தனிப்பட யாருக்கும் கள் விற்க முடியாது. அது சட்ட விரோதமானது.

இதேபோலவே சிகை அலங்கரிப்புத் தொழிலும். (இந்தப் பெயரில்தான் அவர்கள் இயங்குகிறார்கள்). தனிப்பட யாருக்கும் அவர்களின் வீட்டிற்குப் போய் முடி வெட்ட முடியாது. எந்தக் கொம்பனென்றாலும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்குத்தான் (சலூனுக்கு) வந்து வெட்ட வேண்டும். சரியான மருத்துவக் காரணங்களின்றி யாரும் வீட்டிற்குச் சென்று முடிவெட்ட முடியாது. இவை ஓரளவுக்கு ஆண்டான் அடிமை மனோபாவத்தை அல்லது முறையை ஒழிக்கும்.

இன்னும் அவர்கள் செய்ய வேண்டியவை நிறைய. ஆனால் அவர்களால் செய்ய முடியாதவை என்றும் நிறைய உண்டு. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் ‘மணக்கொடைத் தடைச் சட்டம்’ என்ற பெயரில் தமது நீதித்துறையில் சீதனத் தடைச் சட்டத்தையே கொண்டுவந்தார்கள். அச்சட்டத்தின் கீழ் சில வழக்குகளும் நடந்ததாக அறிகிறேன். இச்சட்டம் பற்றி எங்கள் தமிழர்கள் எந்தவித பிரதிபலிப்பையும் காட்டவில்லை. (அன்ரன் பாலசிங்கம் இச்சட்டத்தை ஆதரித்து எழுதி, பின் அவரே வேறொரு பேரில் விமர்சித்து எழுதி மீண்டும் அதற்கு தன் பெயரில் விளக்கம் கொடுத்து கொஞ்சக்காலம் மினக்கிட்டார். ஆனால் ஒருத்தரும் அந்த விவாதத்தில கலந்துகொள்ளேல.) ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை. யாழ் இடப்பெயர்வுடன் வன்னிக்கு வந்த நேரத்தில் புலிகளின் நிர்வாகத் தழம்பல்களுக்கிடையில் இச்சட்டம் செயலிழந்துவிட்டது. இன்றும் செயலிழந்த ஒரு சட்டமாகத்தான் அது இருக்கிறது. இவ்விசயத்தில் அவசரப்பட்டார்களோ என்று தோன்றுகிறது.

இப்போது போர் ஓய்ந்துவிட்ட இந்த நேரத்தில் வன்னியில் மீண்டும் பழய பிரச்சினைகள் தலை தூக்கலாம். அவை எப்படிக் கையாளப்படுகின்றனவோ தெரியவில்லை. நானிருக்கும்வரை பெரிதாக எந்த மாற்றமுமில்லை. சுனாமியின்பின் நிலைமை எப்படியிருக்கிறதென்றும் தெரியவில்லை.

என்பதிவில் யாழ்ப்பாணத்தைத் தாக்கியெழுதியதாக ஒரு பார்வை தென்படலாம். அப்படியன்று. என் அனுபவங்களும் பார்வைகளும்தான் அவை. சில விசயங்கள் எனக்குத் தீராத ஆத்திரத்தை வரவழைப்பவை. சென்ற வருடம் யாழ் போனபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி (என்னைப் புலியாக அல்லது வால்பிடியாக நினைத்து, – வன்னியிலிருந்தவனையெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பார்களோ தெரியாது.)
“டேய் நீதானே அவங்களோட திரிஞ்சனி. உனக்குத் தெரிஞ்சிருக்கும். பொடியளில கரையாரோ வெள்ளாளரோ கூட இருக்கினம்?”
இது. இதுதான் நான் கண்ட யாழ்ப்பாணம். இந்த ஒரு சம்பவத்தை வைத்து நான் யாழ்ப்பாணத்தை எடை போடுவது தவறுதான். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குறிப்பு: சாதி பற்றிய விடயங்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் பொதுவாக இருந்தாலும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்னும் ஈழத்தில் அரசுமுறை அங்கீகாரம் சாதிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஒருவன் தன்னைச் சாதிரீதியில் வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.
‘தலித்’ என்ற சொல் நான் தமிழகம் சம்பந்தப்பட்டு மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். ஈழத்தில் இச்சொற்பாவனை நானறியவில்லை. ஆனால் சிறிரங்கன் பாவிப்பதைப் பார்த்தால் அங்கேயும் இச்சொல் பாவனையிலிருந்திருக்கிறது போலுள்ளது. தெரிந்தவர்கள் சொல்லவும்.

*******************************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

ஜூன் 21, 2006

கடவுளின் முதல் தோல்வி.

Filed under: மதம் — maathahal @ 1:21 பிற்பகல்

(காயின், ஆபேல் இருவரும் கடவுளின் முதல் மனிதப்படைப்புக்களான ஆதாம், ஏவாளின் புத்திரர்கள் என்று விவிலியக் கதை கூறுகிறது).

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். காயின் கெட்டவனில்லை. கடின உழைப்பாளி. ஆனால் கோபக்காரன். உழைப்பாளிக்குக் கோபம் வருவது புதிதா என்ன? அவன் கடினமாயுழைத்துத் தானியங்களைப் பயிரிட்டு வந்தான்.

அவனது தம்பி ஆபேல் சாந்தமானவன். மந்தை மேய்த்து வந்தான். மந்தையை மேயவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் புல்லாங்குழல் வாசிப்பான். வெயில் கடுமையென்றால் மரநிழலில் இருந்து இளைப்பாறுவான். அதே கொடும் வெயிலில் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் காயினுக்கு, தன் தம்பி நிழலில் இளைப்பாறியபடி புல்லாங்குழல் வாசிப்பதோ யாழ் மீட்டுவதோ இனிக்குமா?
சரி இளையவன் தானே? விட்டுவிடுவோமென்றிருந்திருப்பான்.

வீட்டிற்கூட ஆபேல்மீதுதான் எல்லாருக்கும் பாசம். காயினை யாரும் கண்டுகொள்வதில்லை. வீட்டிலே இளையவன் மீது பாசம் அதிகமாயிருப்பது புதிதா என்ன? அதையும் பொறுத்துக்கொள்வோமென்றிருந்திருப்பான்.

விளைச்சலில் பத்திலொன்றைக் கடவுளுக்குக் கொடுக்க வேண்டுமாம்.
இங்கே காயின் ‘சிந்திக்க’த் தொடங்கினான்.

“கடவுள் இந்தக் காணிக்கையைச் சாப்பிடப்போவதில்லை. வெறுமனே நெருப்பிலெரிந்து சாம்பலாகப் போகிறது. இதில் யாருக்கு என்ன இலாபம்? நான் கடினமாயுழைத்து விளைவித்ததை ஏன் காணிக்கையென்ற பேரிற் சாம்பலாக்க வேண்டும்? கடவுளாற் படைக்கப்பட்ட நாம் அவருக்குச் செலுத்தும் காணிக்கைதான் இது என்று தாய்தந்தையர் சொல்கின்றனரே, சரி. அதன்படியே காணிக்கை கொடுக்கலாம். அதாவது எம்மைப் படைத்துக் காத்துவரும் கடவுளுக்குரிய கூலிதான் பத்திலொன்றென்றால் ஒவ்வொரு விளைச்சல் முடிவிலும் அதைத் தாராளமாகக் கொடுக்கலாம். ஆனால் அத்தோடு கடவுளிடம் கணக்கு முடிந்துவிடுகிறதே. பிறகேன் அவரைத் துதிபாடவும், சேகவம் செய்யவும் வேண்டியுள்ளது?”

நிறைய சிந்திக்கத் தொடங்குகிறான் காயின். காணிக்கை கொடுக்க – அல்லது காணிக்கையென்ற பேரில் தானியங்களைச் சாம்பலாக்க அவனுக்கு முழுமையான விருப்பமில்லை. வெயில், மழையென்று பாராது உடலை வருத்தி உழைத்து- தான் விளைவித்த தானியம் கண்முன்னே யாருக்கும் பயனின்றி எரிந்து சாம்பலாவதை எந்த “உண்மையான” உழைப்பாளிதான் பார்த்துக்கொண்டிருப்பான்?

ஆனாலும் அவனால் மறுக்க முடியாது. “அவன்” இன்றி அணுவும் அசையாதல்லவா? அவரைச் சாந்தப்படுத்தாவிட்டால், அவர் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் அவனால் உயிர்வாழ முடியாதென்பதும் – வாழ்ந்தாலும் நிம்மதியாக வாழ முடியாதென்பதும் அவனுக்கு நன்கு தெரியும். கட்டளையை மீறியதால் தன் தாய்தந்தையர் படும் துன்பத்தைப் பார்த்தவனாயிற்றே. (ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது, பிரசவ வலி உட்பட பேருபாதைகள்)

அதனால் (விருப்பமின்றியே – அல்லது குழப்பத்துடனே) காணிக்கை செலுத்தத் தயாராகிறான் காயின். விளைச்சலில் நல்லவற்றைத் தெரிந்து பத்திலொன்பதைத் தானெடுத்துக்கொண்டு மிகுதியைக் காணிக்கையாகக் கொண்டு வருகிறான். (அல்லது காயின் மீதான புறக்கணிப்பை நியாயப்படுத்த கதைசொல்லிகள் ‘நல்லவற்றைத் தானெடுத்துக்கொண்டான்’ என்று இப்படிச் சொல்லியிருக்கக்கூடும்).

ஆபேலும் தயாராகிறான். தன் மந்தையில் கொழுத்தவற்றைக் கொண்டுவருகிறான்.

இருவரும் காணிக்கையைப் படைத்துவிட்டு, கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டிக் காத்திருக்கின்றனர். ஆபேலின் “கொழுத்த” காணிக்கையை மட்டும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். காயினின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் அப்படியே இருக்கிறது.

இப்புறக்கணிப்பு காயினுக்கு ஆத்திரத்தை மூட்டுகிறது. உண்மையில் ஆத்திரம் ஆபேல் மீதானதில்லை. அது கடவுள் மீதானது. கடவுள் மேல் ஆத்திரப்பட்டு என்னாவது? எங்கிருக்கிறாரென்றே தெரியாத “ஆனாமதேய”ப் பேர்வழியோடு எப்படிப் பொருதுவது? வருந்தியுழைத்த தன் காணிக்கை புறக்கணிக்கணிக்கப்பட்டதும், தானே தன்பாட்டில் மேய்ந்து கொழுத்த மந்தையைக் காணிக்கையாக்கின ஆபேலின் காணிக்கை ஏற்கப்பட்டதும் (காயினின் பார்வையில் சொகுசான தொழிலாகவே ஆபேலின் தொழில் இருந்திருக்கும்) அவனாற் பொறுக்க முடியவில்லை. இனி இதைவைத்தே தன்னை தாய்தந்தையுட்பட எல்லோரும் மட்டந்தட்டுவார்களென்ற எண்ணம் அவனுக்கு வந்தது. தொடர்ச்சியான பல நிகழ்ச்சிகளிலிருந்து காயின் ஒன்றை உணர்ந்து கொண்டான். அதுதான் “கடவுள் ஆபேலை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்”.

*************************************
விவிலியத்தில் கடவுளின் “தேர்ந்தெடுப்பு” பலமுறை நிகழ்ந்திருக்கிறது. தன் ஆசீர்வதிக்கப்பட்ட இனமொன்றை உருவாக்க, குறிப்பிட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கூடாக சந்ததியைத் தழைக்க வைப்பார். இப்படித்தான் நோவாவைத் தேர்ந்தெடுத்ததோடு மிகுதியானோரை அழித்தார். ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தவர், அவரின் மகனான ஈசாக்கை மட்டும் தேர்ந்தெடுத்தார். மற்றவரைப் “புறவினத்தார்” ஆக்கினார். (புறவினத்தாரென்றால் இறைவனால் ஆசீர்வதிக்கப்படாத அல்லது தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்). ஈசாக்கின் பிள்ளைகளில் யாக்கோபை மட்டும் தேர்ந்தெடுத்தார்.
இப்படித் தேர்ந்தெடுப்புக்களைச் செய்த கடவுள், ஆதாம் ஏவாளிலிருந்து அடுத்த சந்ததியில் தன் ஆசிர்வதிக்கப்பட்ட இனத்தை உருவாக்க ஆபேலைத் தேர்ந்தெடுத்திருந்தார். (இது விவிலியத்தில் நேரடியாக இல்லை.) இவ்வுண்மையைத் தெரிந்துகொண்டான் காயின்.
************************************

மிகுந்த ஆத்திரமுற்றிருந்த பொழுதொன்றில் காயின் ஆபேலைத் தனியாக அழைத்துச்சென்று கொன்று போடடான். அவன் கொன்றதற்கான துல்லியமான காரணம் கண்டுபிடிப்பது கடினமே.
உண்மையில் ஆபேல் மீதான ஆத்திரம்தான் நூறுவீதமும் காரணமா?
இல்லவேயில்லை. கடவுள் மீதான ஆத்திரத்தில் அவரின் செல்லப்பிள்ளையான ஆபேலைக் கொன்றானா?

என்ன இருந்தாலும் கடவுளின் மாபெரும் திட்டமொன்றைத் (அதுதான் ‘ஆபேல் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியை உருவாக்குவதும் – மற்றவர்களைப் புறவினத்தாராக்குவதும்’) தவிடுபொடியாக்கிக் கடவுளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டான் காயின். மறைந்திருக்கும் சக்தியொன்றோடு மோத அவனுக்கு இதைத்தவிர வேறுவழியில்லை. (விவிலியக் “கதையை” உண்மையென்று யாராவது நம்புவார்களாயின், ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்டவர்களின் முதலாவது எதிர்ப்பு அல்லது போராட்டமென்று இதைக் கொள்ளலாம்)

வரலாற்றில் கடவுளின் முதல்தோல்வி இதுதான்.

தான் அயர்ந்திருந்த நேரத்தில் நடந்த இத்தோல்வியோடு கடவுள் உசாராகிவிட்டார். அதன்பின் அவர் படு உசாராகச் செயற்பட்டாரென்றே நினைக்கிறேன்.

நோவாவின் பெட்டகத்தைத் தவிர ஏனையவற்றை மூழ்கடித்தது,
பாபேல் கோபுரம் கட்டி மானுடன் தன் வலிமையைப் பறைசாற்றப் புறப்பட்டபோது அவனைப் பிரித்துச் சிதறடித்தது,
தனது இன்னொரு தெரிவான சூசையைக் (இவர் யாக்கோபின் பன்னிரு புத்திரர்களில் பதினோராவது.) கொல்ல அவரது சகோதரர்கள் முயன்றபோது அவரைக்காப்பாற்றியது,
எகிப்திலிருந்து கானான் தேசம் நோக்கிய “விடுதலைப்பயணத்தில்” தன்னை வணங்காதவர்களையெல்லாம் கொன்றது,
அதன்மூலம் மக்களை வெருட்டி வைத்தது,
தேவையான நேரங்களில் போர்களை உருவாக்கி ‘புறவினத்தார்களை’யோ தன் ஆசிர்வதிக்கப்பட்ட இனத்திலேயே தனக்குப் பிடிக்காதவர்களையோ அழித்தது

என்று கடவுளின் படு உசாரான நடவடிக்கைகளினூடு வரலாறு பயணிக்கிறது.

(இடையில் தன்னையொத்த கடவுளர்களோடும் பொருதும் துர்ப்பாக்கியம் வந்து சேர்ந்தது கடவுளுக்கு. அதற்கும் மானுடனையே பயன்படுத்த முடிவெடுத்தார்.)

ஆனாலும் கடவுளின் உசார் நடவடிக்கைகளுக்குள்ளும் மானுடன் வெற்றி பெறுகிறானென்றே நினைக்கிறேன். யார் கண்டது? வெற்றி பெறுபவர்களெல்லாம் கடவுளின் “தேர்ந்தெடுக்கப்பட்ட” இனத்தவர்களென்று புதிய கதையொன்று எழுதப்படலாம்.
************************************
பத்துப் பன்னிரண்டு வருடங்களின் முன் யாழ்ப்பாணத்திற் கண்ட நாடகப்படியொன்று இதன் கருமூலம்.

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

Theme: Shocking Blue Green. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.