வசந்தனின் பக்கம்

ஜூன் 27, 2006

ஒன்று ரெண்டு மூன்று – சிறுவர் பாடல்

கோப்பு வகை: கவிதை, பாடல் — maathahal @ 12:34 மு.பகல்

சுந்தரவடிவேல் அவர்கள் மிருகக்காட்சி சாலை என்றொரு பாட்டை, படங்களுடன் அழகிய கோப்பாக்கி தரவிறக்க விட்டிருந்தார். அழகான சிறுவர் பாடலது.

அதே மெட்டிலமைந்த – எண்களை எண்ணும் பாடலொன்றை இப்போது நான் இங்கே இடுகின்றேன். சுந்தரவடிவேலரின் மிருகக்காட்சி சாலைப் பாடலின் மெட்டுத்தான் இந்தப்பாட்டுக்கும். எனவே அப்பாடலின் மெட்டு தெரிந்தவர்கள் அதே மெட்டில் இப்பாடலையும் பாடலாம்.
(ஆம், இப்பாடலின் மெட்டுத் தெரிந்தவர்கள் இதே மெட்டில் அப்பாடலையும் பாடி மகிழலாம்.)

இப்பாடலின் சிறப்பு, ஒன்று தொடக்கம் பத்துவரையான எண்கள் பாடலில் வரக்கூடியதாக அமைக்கப்பட்டதே.
இனி பாடல்.

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.

ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி
நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில்
ஐந்துபெரும் நாய்கலைத்து ஓடிவர நம்மை
தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்லோ.

உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக
எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே.
——————————————-

மேற்கண்ட பாடலைப் பாட வசதியாக அசை பிரித்துப் பார்த்தால் கீழ்க்கண்டவாறு வரும். அதையும் தருகிறேன்.

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணு வோமே நாங்கள்.

ரெண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி
நாலு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில்
ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடி வர நம்மை
தேடி ஆறு கல் லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ.

உருண்டு ருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக
எட்டு மணி வண்டி யிலே உல்லாச மாய் ஏறி
ஒன்ப துக்குள் வீடு சென்று உண வருந்தி நாமே
பத்து மணி அடிப்ப தற்குள் படுத் துறங்கி னோமே
————————————————–
இதை யாராவது பாடி ஒலிப்பதிவாகத் தந்தால் நன்று. செய்பவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

தாடியறுந்த வேடன் – சிறுவர் பாடல்

கோப்பு வகை: கவிதை — maathahal @ 12:32 மு.பகல்

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்கெனவே அவரின் ‘கத்தரித் தோட்டத்து வெருளி’ப் பாட்டும், ‘ஆடிப்பிறப்புக் கொழுக்கட்டை’ப் பாட்டும் மதி கந்தசாமியால் பதிவாக இடப்பட்டன. இப்போது அவரின் இன்னொரு பாடலை நானிங்கு பதிவாக இடலாமென்றிருக்கிறேன்.

சோமசுந்தரப் புலவரைத் ‘தங்கத் தாத்தா’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. தாத்தாவென்றால் தாடியில்லாமலா? இவருக்கும வெண்பஞ்சுபோல வெள்ளைத்தாடி இருந்ததாம். இவர் தாடி பற்றியும் ஒரு பாட்டெழுதியுள்ளார். அது “தாடியறுந்த வேடன்“.

தன் தாடிக்கு இப்படி நடந்தால் எப்படியிருக்குமென்று நினைத்தோ உண்மையிலேயே அவர்தாடிக்கு வந்த ஆபத்தை வைத்தோ இப்பாடலை அவர் எழுதியிருக்கக்கூடும்.

நாயை வைத்து வேட்டையாடும் ஒருவன் ஒருநாள் அணில் வேட்டைக்கு தன் நாயுடன் போகிறான். அதில் அவன் தாடி அறுந்துவிட்டது. எப்படி அறுந்ததென்று ‘தங்கத் தாத்தா’ சொல்கிறார்.

தேமா – இப்பாட்டிற் சொல்லப்படும் தேமா என்பது ஒருபூமரத்தை என்றுதான் நான் விளங்கி வைத்திருந்தேன். ஆனால் இது மாமரத்தில் ஒருவகையென்றும் சிலர் சொல்வதுண்டு. எதுசரியெனத் தெரியவில்லை.
———————————

வீமா! வீமா! ஓடி வாவா – அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி – மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி

மரத்தில் இருந்து குதித்தே – அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா – உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?

பொந்துக்குட் புகுந்தது வீமா – உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் – அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.

————————————–

என்ன நடந்ததென்று பாடலில் முழுதும் விளங்காதவர்களுக்கு:
வேடன் தன் நாயான வீமனைக் கொண்டு அணிலைத் துரத்துகிறான். அது வேறோர் பெரிய மரத்தின் பொந்துக்குட் சென்று பதுங்கிக்கொள்கிறது. உடனே வேடன், நாயை பொந்தின் இந்தப் பக்கம் நிற்கச்சொல்லிவிட்டு, தான் மரத்தின் மறுபக்கம் வந்து பொந்துக்குள் எட்டிப் பார்க்கிறான். அப்போது எதிர்ப்பக்கம் நின்ற வீமனுக்கு வேடனின் தாடி பொந்துக்குள்ளால் தெரிகிறது. அதுதான் அணிலென்று நினைத்துக் கவ்வியிழுத்தது வீமன். தாடியும் போச்சு. அணிலும் தப்பியோடி விட்டது.

* * * * *
இது நாலாம் ஆண்டில் (மூன்றாம் தரம்) படித்ததாக நினைவு. அழகான மெட்டு, அழகான பாட்டு. படத்துடன் பாடலைப் படித்தால் இன்னும் அருமையாக இருக்கும். தாத்தாவுக்கு ‘வாலைக் கிழப்பிக் கொண்டோடுதே’ என்ற சொற்றொடரில் நல்ல மயக்கம் போலிருக்கிறது எங்களைப் போலவே. ‘கத்தரி வெருளி’ப் பாட்டிலும் இதே சொற்றொடர் வரும். உண்மையில் அந்த வயதில் வாலைக்கிழப்பிக் கொண்டோடும் ஒரு பசுவை இச்சொற்றொடர் அப்படியே கண்முன் கொண்டுவரும். கன்றுக்குட்டியோ ஆட்டுக்குட்டியோ துள்ளி விளையாடுவதைப் பார்க்கும்போது அறியாமலேயே இந்த வரி வாயில் வந்துவிடும். அந்த வரிக்கு அமைந்த மெட்டும் (இரு பாட்டிலும் இந்தவரிக்கு ஒரே மெட்டுத்தான்) வசீகரித்ததால் அந்தவரியை மட்டும் அடிக்கடி பாடிக்கொள்வோம்.

நன்றி: தங்கத் தாத்தா.
——————————
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

ஜூன் 21, 2006

வானொலியில் சயந்தனின் செவ்வி

கோப்பு வகை: அனுபவம் — maathahal @ 1:49 பிற்பகல்

நேற்றிரவு மெல்பேணிலிருந்து சிட்னிக்குப் புறப்பட்ட சயந்தன் எதுவித சிக்கலுமின்றி நலமாய்ப் போய்ச்சேர்ந்தார்.
வலைப்பதிவர் மாநாடுக்கு முன்பு வானொலி நிகழ்ச்சியொன்று செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலையே அவர் இன்பத்தமிழொலி வானொலியில் தனது நிகழ்ச்சி வருமென்று சொல்லிச் சென்றிருந்தார். நானும் இத்தகவலை ஷ்ரேயாவுக்குச் சொல்லி, கட்டாயம் இந்நிகழ்ச்சியைக் கேட்கும்படி கேட்டிருந்தேன்.

சகவலைப்பதிவாளர் ஒருவரின்ர செவ்வி வானொலியில் வருதெண்டு காத்திருந்தேன்.
நிகழ்ச்சியும் வந்தது. ஒருமணித்தியால நிகழ்ச்சி. சில இளைஞர்கள்கூடி அந்த ஒருமணித்தியாலத்தையும் ஒருமாதிரி போக்காட்டீச்சினம். அதில எங்கட சயந்தனின்ர நிகழ்ச்சியும் வந்திச்சு.

என்ன நிகழ்ச்சியெண்டு கேக்கேல?
கத்தரிக்காய்ப் பச்சடி செய்வது எப்படி?

இன்னும் ஆளின்ர தொடர்பு கிடைக்கேல. இதுதான் அவர் சொன்ன செவ்வியோ இல்லாட்டி உண்மையிலயே இவரின்ர செவ்வி வரப்போகுதோ தெரியேல. என்னதான் வாறதெண்டாலும் இண்டைக்கு வந்திருக்க வேணும். எண்டபடியா உதுதான் சயந்தனின்ர நிகழ்ச்சியெண்டு நான் நினைக்கிறன். ஷ்ரேயாவும் இசைநிகழ்ச்சிக்குப் போயிட்டபடியால தொடர்பு கொள்ள முடியேல.

உவருக்கு என்னெண்டு கத்தரிக்காய்ப் பச்சடி செய்யிறதப் பற்றித் தெரியுமெண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். நிகழ்ச்சியக் கேக்கேக்க ஒரு புத்தகத்தைப் பாத்து வாசிச்சமாதிரியிருந்திச்சு. (அனேகமா மணிமேகலைப் பிரசுர வகையறாவா இருக்கும்).

இன்பத் தமிழொலி வானொலி பாலசிங்கம் பிரபாகரனுக்கு ஒரு கேள்வி.
உந்தப் புத்தகத்தை வாசிக்கிறதுக்காக மெல்பேணிலயிருந்து ஒருத்தன் வந்துதான் செய்யவேணுமோ?

இந்த நிகழ்ச்சி பற்றி சயந்தன் விரிவா எழுதுவார் எண்டு நினைக்கிறன். நான் இந்தத் தகவல் வெளியிட்டதுக்கு, அவர அதப்பற்றி எழுத வைக்கிறதும் ஒரு காரணம்.
******************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

ஜூன் 8, 2006

வணக்கம்

கோப்பு வகை: Uncategorized — maathahal @ 2:21 பிற்பகல்

இது வசந்தனின் பக்கம்.

ஏற்கனவே நான் வைத்திருக்கும் சில வலைப்பதிவுகளில் எழுதியவற்றிலிருந்து தெரிந்தெடுத்து சிலவற்றைச் சேமிக்க இவ்வலைப்பதிவு.

Hello world!

கோப்பு வகை: Uncategorized — maathahal @ 2:04 பிற்பகல்

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.